ராகு & கேது பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்!

Sasikala| Last Modified வெள்ளி, 28 ஜூலை 2017 (12:46 IST)

எங்கும் எதிலும் முதலிடத்தை விரும்புபவர்களே! உங்களுக்கு 27.7.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டத்தில் இந்த
ராகுவும், கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.

இராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ஜென்ம ராசியிலேயே அமர்ந்துக் கொண்டு வாழ்க்கை மீது ஒருபிடிப்பு இல்லாமல் செய்தாரே! எந்தவிதமான
சுகங்களையும் முழுமையாக அனுபவிக்க முடியாமல் திணறடித்தாரே! எப்போதும் சோகக் கடலில் மூழ்கடித்தாரே! எதையும்
ஆர, அமர யோசிக்க விடாமல் ஒருவித அச்சத்தையும், படபடப்பையும் ஏற்படுத்தினாரே! உங்கள் குடும்பத்தினர் கூட உங்களைப்
புரிந்துக் கொள்ளாமல் அவமதித்தார்களே! அடிக்கடி தலைச்சுற்றல், முதுகு வலி, கால் வலி என முணுமுணுத்தீர்களே! காரண
காரியமே இல்லாமல் கோபப்பட்டு எல்லோரையும் பகையாளியாக்கி வேடிக்கை பார்த்தாரே! இப்படி பல வகையிலும்
பிரச்னைகளை தந்து மூச்சுவிட முடியாமல் திணறடித்த ராகுபகவான் இப்போது ராசிக்கு 12&ம் வீட்டிற்கு செல்வதால் முடங்கிக்
கிடந்த நீங்கள் இனி புத்துயிர் பெறுவீர்கள். மருந்து, மாத்திரையிலிருந்து விடுபடுவீர்கள். நோய் குணமாகும். அழகு, இளமைக்
கூடும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். உங்களை ஏளனமாகவும், இழிவாகவும் பேசியவர்களெல்லாம் வலிய
வந்து நட்புப் பாராட்டுவார்கள். நேர்மறை எண்ணங்கள் உருவாகும். சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். தடைப்பட்டு, தள்ளப் போன காரியங்களெல்லாம் இனி ஒவ்வொன்றாக முடிவடையும். சந்தேகத்தாலும், ஈகோவாலும்
பிரிந்திருந்த கணவன்&மனைவி ஒன்று சேருவீர்கள். வாய்தா வாங்கி தள்ளிப் போன வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். என்றாலும்
ராகு விரையஸ்தானமான 12&ல் மறைவதால் எதிர்பாராத பயணங்கள் உண்டாகும். ஐம்பது ரூபாயில் முடியவேண்டிய
விஷயங்களைக் கூட ஐந்நூறு ரூபாய் செலவு செய்து முடிக்க வேண்டி வரும். நீங்கள் ஒரு பட்ஜெட் போட்டு இதற்குள் முடிக்க
வேண்டுமென்று நினைத்தால் முடியாமல் இரண்டு மடங்கு அதிகமாகும். அவ்வப்போது கனவுத் தொல்லையால் தூக்கம்
குறையும். சாதுக்கள், சித்தர்களின் ஆசி பெறுவீர்கள். நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப்
புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு
விசேஷங்களை நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது
நிறைவேறும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகளும் அதிகமாகும்.

இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:


உங்களின் தன&லாபாதிபதியான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.2017 முதல் 4.4.2018 வரை ராகுபகவான் செல்வதால்
இக்காலக்கட்டங்களில் தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.
வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வீடு, வாகனம் சேரும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். புது வேலை அமையும். சொந்த&பந்தங்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். சையனஸ்
தொந்தரவு, ஒற்றை தலை வலி வந்துப் போகும்.5.4.2018 முதல் 10.12.2018 வரை ராகுபகவான் உங்களின் சஷ்டம&சப்தமாதிபதியான சனிபகவானின் பூசம் நட்சத்திரத்தில்
செல்வதால் மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். வீண் பழிச் சொல்லுக்கு ஆளாவீர்கள். மனைவியுடன் மோதல்கள் வரக்கூடும்.
அவருக்கு மாதவிடாய்க் கோளாறு, மூட்டு வலி, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்துப் போகும். மனைவிவழி உறவினர்களுடன்
மனத்தாங்கல் வந்து நீங்கும். இரும்புச் சத்து குறைய வாய்ப்பிருக்கிறது. பணம் கொடுங்கல், வாங்கல் விஷயத்தில் குறுக்கே
நிற்க வேண்டாம்.உங்களின் அஷ்டம&பூர்வ புண்யாதிபதியான குருபகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4&ம் பாதம் கடக ராசியில் 11.12.2018 முதல்
13.2.2019 முடிய ராகுபகவான் பயணிப்பதால் பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய
நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். பூர்வீக சொத்தை அதிகம் செலவு செய்து சீர்த்திருத்தம் செய்வீர்கள். விலையுயர்ந்த ஆடை,
ஆபரணம் சேரும். வீடு கட்ட வங்கியிலிருந்து லோன் கிடைக்கும்.

கன்னிப்பெண்களே! சிலர் தடைப்பட்ட உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு கிட்டும். காதல் கசந்து இனிக்கும். உங்கள் ரசனைக்
கேற்ப நல்ல வரன் அமையும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று
வேலையில் அமருவீர்கள்.

மாணவ&மாணவிகளே! விரும்பிய கல்விப் பிரிவில் எதிர்பார்த்த நிறுவனத்தில் சேருவீர்கள். அறிவாற்றல் கூடும். சின்ன சின்ன
தவறுகளையும் திருத்திக் கொள்ளுங்கள். நட்பு வட்டம் விரிவடையும். வகுப்பறையில் ஆசிரியர் பாராட்டும்படி நடந்துக்
கொள்வீர்கள். .

கலைத்துறையினரே! பெரிய வாய்ப்புகள் வரும். யதார்த்தமான உங்களின் படைப்புகளுக்கு பரிசு கிடைக்கும்.

அரசியல்வாதிகளே! செல்வாக்குக் கூடும். தொகுதி மக்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்வீர்கள். கௌரவப் பதவி
உண்டு. வழக்குகளை சந்திக்க நேரிடும். சகாக்களை அடக்கி வாசிக்க சொல்லுங்கள். கட்சி மேலிடம் உங்களை மதிக்கும்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். போட்டியாளர்களை அனுபவ அறிவால் வெல்வீர்கள். பழைய சரக்குகளை தள்ளுபடி
விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். அடிக்கடி விடுப்பில் சென்ற வேலையாட்களை மாற்றிவிட்டு புதிய பணியாளர்களை
அமர்த்துவீர்கள். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். பதிப்பகம், உணவு, கம்பியூட்டர் உதிரி பாகங்கள்,
இறக்குமதி வகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் புது முதலீடுகளை செய்வீர்கள். பங்குதாரர்களிள்
உங்களுடைய கருத்துகளை முதலில் மறுத்தாலும் பிறகு ஏற்றுக் கொள்வார்கள்.

உத்யோகத்தில் அமைதி உண்டாகும். மாறுபட்ட அணுகுமுறையால் உயரதிகாரியை கவர்வீர்கள். சக ஊழியர்களும் உங்களுக்கு
முன்னுரிமைத் தருவார்கள். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். மூத்த அதிகாரிகள் உங்களை நம்பி ரகசியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். சிலர் உத்யோகம் தொடர்பாக அயல்நாடு செல்வீர்கள்.

கேதுவின் பலன்கள்:

இதுவரை உங்களின் ராசிக்கு ஏழாவது வீட்டில் அமர்ந்துக் கொண்டு உங்களது திறமையை முழுமையாக வெளிக்காட்ட
முடியாமல் செய்ததுடன், கணவன்&மனைவி ஒற்றுமையை சீர் குலைத்து, இருவருக்கும் பேச்சு வார்த்தையே இல்லாமல்
செய்ததுடன், மனைவிக்கு ஆரோக்ய குறைவையும் ஏற்படுத்திய கேது பகவான் இப்பொழுது உங்கள் ராசிக்கு 6&ம் வீட்டில்
அடியெடுத்து வைப்பதால் மனப்போராட்டங்கள், வீண் டென்ஷன், தடைகளெல்லாம் விலகும். மறைமுக எதிரிகளை
இனங்கண்டறிவீர்கள். வாழ்க்கையின் சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். அனுபவசாலிகளின் உதவியால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். ஷேர் மூலமாக பணம் வரும். உங்களிடம் பணம் வாங்கி
ஏமாற்றியவர்களெல்லாம் பணத்தை வட்டியுடன் திருப்பித் தருவார்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும்.
கணவன்&மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தாம்பத்யம் இனிக்கும். மனைவிக்கு இருந்த நோய் குணமாகும்.
பிள்ளைகளின் நட்பு வட்டம் விரிவடையும். வீட்டில் தள்ளிப் போய் கொண்டிருந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து
நடந்தேறும். நகர எல்லையை ஒட்டியுள்ள இடத்தை விற்று விட்டு சிலர் நகரத்திற்கு குடிப் பெயர்வார்கள். வாடகை வீட்டில் இருந்தவர்களுக்கு சொந்த இடம் வாங்கும் யோகமும் உண்டாகும். அரசால் அனுகூலம் உண்டு. ஆன்மிக அறிஞர்களின் நட்பால்
தெளிவடைவீர்கள். போட்டி, தேர்வுகளில் வெற்றி உண்டு. உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். கோவில்
பஜனைகளில் கலந்துக் கொள்வீர்கள். சொந்த ஊர் பொது நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். வெளிநாட்டிலிருப்பவர்கள், அண்டை மாநிலத்தில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். தள்ளிப் போன கல்யாணப் பேச்சு
வார்த்தை சாதகமாக முடியும். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய புது வழி பிறக்கும்.

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:27.7.2017 முதல் 29.11.2017 வரை உங்களின் யோகாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2&ம் பாதம் மகர ராசியில்
கேதுபகவான் செல்வதால் இக்காலக்கட்டங்களில் அதிரடி முன்னேற்றம் உண்டு. வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.
பணப்புழக்கம் அதிகரிக்கும். புது வேலைக்கு முயற்சி செய்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள், தொழிலதிபர்கள்
உதவுவார்கள். இரத்த சொந்தங்கள் தேடி வருவார்கள். பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். தந்தையாரின் ஆரோக்யம்
சீராகும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

உங்களின் விரையாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.2017 முதல் 06.08.2018 வரை கேது செல்வதால் சுபச்
செலவுகள் அதிகரிக்கும். திடீர் பயணங்களும் உண்டு. உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆனால்
செலவுகள் கட்டுக்கடங்காமல் போவதால் சேமிப்புகள் கரையும். பழுதாகி கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். ஆன்மிகத்தில்
ஈடுபாடு அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.

7.08.2018 முதல் 13.2.2019 வரை உங்களின் ராசிநாதன் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4&ம் பாதம் மகர ராசியில் கேது
செல்வதால் உங்களின் ஆளுமைத் திறன், நிர்வாகத் திறன் அதிகரிக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வெளிநாடு
செல்லும் வாய்ப்பு வரும். ஆனால் உடல் உஷ்ணத்தால் அடி வயிற்றில் வலி, தோலில் நமைச்சல், கை, கால் சுளுக்கு, மூச்சுப்
பிடிப்பு வந்துச் செல்லும். இரும்புச் சத்து குறைபாடு ஏற்படக்கூடும்.

வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். புது முதலீடுகள் செய்வீர்கள். வேலையாட்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். உத்யோகத்தில் உங்களை வெறுத்த மேலதிகாரி இனி
வலிய வந்து பேசுவார். உங்களின் கடின உழைப்பிற்கு தகுந்த சன்மானம் உண்டு. பதவி உயர்விற்காக உங்களது பெயர்
பரிந்துரை செய்யப்படும். குறைக் கூறிக் கொண்டிருந்த சக ஊழியர்களும் உங்களுக்காக பரிந்து பேசுவார்கள். வழக்குகள்
வெற்றியடையும்.

இந்த ராகு&கேது பெயர்ச்சியில் ராகு அவ்வப்போது சின்ன சின்ன கலக்கங்களை தந்தாலும் கேதுவால் நீண்ட கால
கனவுகளெல்லாம் நனவாகும்.

பரிகாரம்:

மயிலாடுதுறையில் திரு இந்தளூரில் வீற்றிருக்கும் ஸ்ரீபரிமள ரங்கநாயகி உடனுறை ஸ்ரீபரிமள ரங்கநாதரை வணங்குங்கள்.
வேற்றுமொழிக்காரர்களுக்கு உதவுங்கள்.


- கே.பி. வித்யாதரன்

webdunia

இதில் மேலும் படிக்கவும் :