திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 28 ஜூலை 2017 (12:19 IST)

ராகு & கேது பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்!

சமூக அவலங்களை தட்டிக் கேட்பவர்களே! உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் இணைந்து 27.7.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களை தரப்போகிறார் என்பதை பார்ப்போம்.
 
ராகுவின் பலன்கள்:
 
இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருந்து கொண்டு சவால்களில் வெற்றியையும், அதிரடி முன்னேற்றங்களையும்  தந்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு 2&ம் இடத்தில் வந்தமர்வதால் வீரியத்தை விட்டு விட்டு காரியத்தில் கவனம் செலுத்தப்பாருங்கள். வாக்குஸ்தானத்தில் ராகு நுழைவதால் இடம், பொருள், ஏவலறிந்துப் பேசப்பாருங்கள். சிலருக்கு நீங்கள்  நல்லதே சொன்னாலும் அதை தவறாகப் புரிந்துக் கொண்டு வம்பில் சிக்க வைப்பார்கள். ஒரு விஷயத்தை செய்வதென்றால் அது முடியாவிட்டால் அடுத்தது என்ன செய்யலாம் என்று முன்னரே யோசித்து செய்வது நல்லது. சிக்கனமாக இருக்க  வேண்டுமென்று நினைத்தாலும் செலவுகள் அதிகமாகிக் கொண்டேப் போகும். குடும்பத்தினரிடம் எதையும் மறைக்க வேண்டாம். கணவன்&மனைவிக்குள் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். உன் சொந்தம், என் சொந்தம் என்று மோதிக் கொள்ளாமல்  ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். சிலர் மூக்குக்  கண்ணாடி அணியக் கூடும். பல் ஈறு வீக்கம், கணுக்கால், காது, மூக்கு வலி வந்துப் போகும். காலில் அடிப்பட வாய்ப்பிருக்கிறது.  தூங்கும் இடத்தையும் அடிக்கடி மாற்ற வேண்டாம். பணப்பட்டுவோட விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். மறதியால்  விலை உயர்ந்தப் பொருட்களை இழந்துவிடாதீர்கள். வெளிவட்டாரத்தில் மற்றவர்களை தாக்கிப் பேச வேண்டாம். முன்கோபத்தால் முக்கிய ஸ்தர்களின் நட்பை இழக்க நேரிடும். சந்தோஷமாக ஓர் இடத்திற்குப் போக வேண்டுமென்று திட்டம்  போட்டுக் கிளம்பினால் ஏதாவது சங்கடம் எதிர்பாராமல் குறுக்கே வரும். லாகிரி வஸ்துக்கள், எண்ணெய் பதார்த்தங்களை  தவிர்ப்பது நல்லது. முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். வாகனத்தில் செல்லும் போது மறவாமல்  தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும்.       
 
இராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்கள் ராசிநாதனும்&சுகாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.2017 முதல் 4.4.2018 வரை ராகுபகவான்  செல்வதால் அழகு, இளமைக் கூடும். திடீர் பணவரவு உண்டு. பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். நெருங்கிய சொந்த&பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒருபகுதியை தீர்க்க உதவிகள் கிடைக்கும்.  தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் கௌரவிக்கப்படுவீர்கள். தாயாரின் ஆரோக்யம் சீராகும். வாஸ்துபடி சிலர் வீட்டை  இடித்துக் கட்டுவீர்கள்.
 
5.4.2018 முதல் 10.12.2018 வரை ராகுபகவான் உங்களின் யோகாதிபதியான சனிபகவானின் பூசம் நட்சத்திரத்தில் செல்வதால்  திருமணம், கிரகப்பிரவேசம் என வீடு களைக்கட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும். கடனாக கொடுத்திருந்த பணம் கைக்கு  வரும். வேற்றுமொழியினர், மதத்தினர் உதவுவார்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். தந்தைவழியில் சொத்து சேரும்.  வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பயணங்களால் அலைச்சல் செலவுகள் அதிகமாகும்.
       
உங்களின் சப்தம&ஜீவனாதிபதியான குருபகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4&ம் பாதம் கடக ராசியில் 11.12.2018 முதல் 13.2.2019  முடிய ராகுபகவான் பயணிப்பதால் இக்காலக்கட்டத்தில் உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.  மனைவி மற்றும் மனைவிவழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும்  பெறுவீர்கள். விலை உயர்ந்த ரத்தினங்கள், ஆபரணங்கள் வாங்குவீர்கள். என்றாலும் மனைவிக்கு தைராய்டு, ஃபைப்ராய்டு  பிரச்னைகள் வரக்கூடும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள்.
       
கன்னிப் பெண்களே! பரபரப்பாக காணப்படுவீர்கள். காதல் விவகாரத்தில் எச்சரிக்கையாக இருங்கள். பெற்றோரிடம் எதையும்  மறைக்க வேண்டாம். உங்களிடம் அன்பாகப் பேசி சிலர் உங்களை பாதை மாற்றக் கூடும். கல்யாணம் கொஞ்சம்  தாமதமானாலும் நல்லபடியாக முடியும். போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றி பெறுவீர்கள்.
  
மாணவ&மாணவிகளே! சமயோஜித புத்தியுடன் நடந்துக் கொள்ளுங்கள். மறதியால் மதிப்பெண் குறையும். வகுப்பறையில் வீண்  அரட்டைப் பேச்சை தவிர்ப்பது நல்லது. கடைசி நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருந்துவிடாதீர்கள்.  அவ்வப்போது விடைகளை எழுதிப் பாருங்கள். மொழித் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். விளையாடும் போது கவனம்  தேவை. பயணங்களின் போது பேருந்தில் படிக்கட்டில் நின்று பயணிக்க வேண்டாம்.
 
கலைத்துறையினரே! சிலர் உங்களின் மூளையை பயன்படுத்தி முன்னேறுவார்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.  சின்ன சின்ன வாய்ப்புகளையும் அலட்சியப்படுத்தாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
 
அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசலால் உங்கள் புகழ் குறையும். தலைமையுடன் விவாதம் வேண்டாம். தொகுதி மக்கள் நலனில்  அதிக கவனம் செலுத்தப்பாருங்கள். சகாக்களை அடக்கி வாசிக்க சொல்லுங்கள்.
 
வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். புது சலுகைத் திட்டங்களை அறிமுகப்படுத்துவீர்கள்.  வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த முடியாமல் திணறுவீர்கள். புதிதாக வரும் விளம்பரங்களை பார்த்து அறிமுகமில்லா  தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். பங்குதாரர்கள் முரண்டு பிடிப்பார்கள். சட்டத்திற்கு புறம்பான முயற்சிகளை தவிர்த்துவிடுவது நல்லது. மூலிகை, லாஜிங், போடிங், ஏற்றுமதி&இறக்குமதி வகைகளால்  லாபமடைவீர்கள்.
 
உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகமாகும். ஒரு அதிகாரி உங்களை ஆதரித்தாலும் மற்றொருவர் உங்களுக்கு எதிராக  செயல்படுவார். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். விரும்பிய இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். அயல்நாடு  தொடர்புடைய நிறுவனத்திலிருந்து நல்ல வாய்ப்புகளும் வரும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பதவி உயர்வு,  சம்பள உயர்வைக் கூட போராடி பெற வேண்டி வரும்.   
 
கேதுவின் பலன்கள்:
 
இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு தந்தைக்கு அறுவை சிகிச்சையையும், அவருடன்  மனவருத்தங்களையும் தந்ததுடன் வரவுக்கு மிஞ்சிய செலவுகளையும் ஏற்படுத்திய கேதுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு  எட்டில் வந்தமர்வதால் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக செயல்படப்பாருங்கள். கொஞ்சம் அலைச்சல் இருந்தாலும்  ஆதாயமும் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். விதிகளை மீறி யாருக்கும் உதவ  வேண்டாம். திடீரென்று அறிமுகமாகி உங்களை அதிகம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் புது நண்பர்களை நம்பி பெரிய  முடிவுகள் எடுக்க வேண்டாம். குலதெய்வப் பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். நீங்கள் எதை  செய்தாலும் தோல்வியில் முடிவதையும், எதை சொன்னாலும் தவறாக சிலர் புரிந்துக் கொள்வதையும் நினைத்து ஆதங்கப்படுவீர்கள். சிக்கலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். சொந்த&பந்தங்களின் அன்புத்  தொல்லைகள் அதிகரிக்கும். பழைய கடன் பிரச்னையால் சேர்த்து வைத்த கௌரவத்திற்கு பங்கம் வந்துவிடுமோ என்ற அச்சம் அடிமனதில் இருந்துக் கொண்டேயிருக்கும். உங்களுடைய பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்துவார்கள். உங்கள் புகழுக்கு  கலங்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பார்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதைப் புரிந்துக் கொள்வதில் தடுமாற்றம் வரும். கடந்த கால கசப்பான அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மனநிம்மதியிழந்துவிடாதீர்கள்.  கெட்ட நண்பர்களின் சகவாசங்களை அறவே ஒதுக்கித் தள்ளுங்கள்.           
 
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
27.7.2017 முதல் 29.11.2017 வரை உங்களின் சஷ்டம&லாபாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2&ம் பாதம் மகர  ராசியில் கேதுபகவான் செல்வதால் ஒருவித பதட்டம், பயம், காரியத் தடங்கல், மனஉளைச்சல், காய்ச்சல், இருமல் வந்துப்  போகும். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிவீர்கள். பண விஷயத்தில் கறாராக இருப்பது நல்லது. வழக்கில் தீர்ப்பு  தாமதமாகும். போலி புகழ்ச்சிக்கு மயங்காதீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். புறநகர் பகுதியில்  அரை கிரவுண்டாவது இடம் வாங்க வேண்டுமென்று முயற்சி செய்வீர்கள். சகோதரங்களின் அரவணைப்பு அதிகரிக்கும். 
 
உங்களின் தனாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.2017 முதல் 06.08.2018 வரை கேது செல்வதால்  இக்காலக்கட்டத்தில் பாதியில் நின்ற வேலைகளெல்லாம் முடிவடையும். பணப்புழக்கம் அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி  உண்டாகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வீடு கட்ட லோன் கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.  இங்கிதமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.   
 
7.08.2018 முதல் 13.2.2019 வரை உங்களின் திருதியாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4&ம் பாதம் மகர ராசியில்  கேது செல்வதால் மனோபலம் அதிகரிக்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். இளைய சகோதரங்கள் மதிப்பார்கள். வேலைக் கிடைக்கும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும்.  
 
வியாபாரத்தில் பற்று வரவு சுமாராக இருக்கும். புது முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. வேலையாட்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். பங்குதாரர்களிடம் வளைந்துக் கொடுத்துப் போங்கள். உத்யோகத்தில் சில நேரங்களில் பிடிப்பில்லாமல் போகும்.  சக ஊழியர்கள் செய்யும் தவறுகளை மேலிடத்திற்கு தெரிவித்துக் கொண்டிருக்காதீர்கள். மூத்த அதிகாரிகள் உங்களை சரியாகப்  புரிந்துக் கொள்ளாமல் போவார்கள். எல்லா நேரமும் கறாராக பேசாமல் கொஞ்சம் கலகலப்பாகவும் பேசக் கற்றுக் கொள்ளுங்கள்.  சிலர் உத்யோகத்தின் பொருட்டு அயல்நாடு செல்வீர்கள்.
 
இந்த ராகு&கேது மாற்றம் பொருளாதார வகையில் உங்களை பின்தங்க வைத்தாலும், விருப்பு, வெறுப்பற்ற நடுநிலையான  முடிவுகளால் தர்மசங்கடமான நிலைகளை சமாளித்து முன்னேற வைக்கும்.
 
பரிகாரம்:
 
திருவண்ணாமலை&கடுவனூருக்கு அருகிலுள்ள சங்கராபுரத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீசிவகாமி அம்மை உடனுறை ஸ்ரீதாண்டேஸ்வரரை வணங்குங்கள். மணமுறிவு பெற்றவர்களுக்கு உதவுங்கள்.
 
- கே.பி. வித்யாதரன்