ராகு & கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்!

Sasikala| Last Updated: வெள்ளி, 28 ஜூலை 2017 (12:20 IST)
எண்ணுவதை எழுத்தாக்கும் படைப்பாற்றல் மிக்கவர்களே! உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் இணைந்து 27.7.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களை தரப்போகிறார் என்பதை பார்ப்போம்.

இராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு திசைக்கொரு பக்கமாக பிரச்சனைகளை கொடுத்து பந்தாடினார். உங்களை நிம்மதியில்லாமல் மனஉளைச்சலுக்கு ஆளாக்கினார் அப்படிப்பட்ட ராகுபகவான், இப்போது உங்களது ராசிக்கு 4&ம் இடத்தில் வந்தமர்வதால் இனி எல்லாவற்றையும் சமாளிக்கும் மனப்பக்குவத்தை தருவார். ஐந்தாம் வீட்டை விட்டு ராகு விலகுவதால் வசதி, வாய்ப்புகள் எவ்வளவோ இருந்தும் ஆண்டு அனுபவிக்க ஒரு வாரிசு இல்லையே என வருந்திய தம்பதியர்களுக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். உங்களுக்கு சேர வேண்டிய பங்கு கைக்கு வரும். பிள்ளைகளின் பிடிவாத குணமும், அலட்சியப் போக்கும் மாறும். இனி உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மகளுக்கு வரன் தேடி அலுத்துப் போனீர்களே! இப்போது உங்கள் ரசனைக் கேற்ப நல்ல மணமகன் வந்தமைவர். மகனின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். கணவன்&மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தாம்பத்யம் இனிக்கும். உங்கள் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட காரணமாக இருந்தவர்களை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசத் தொடங்குவார்கள். என்றாலும் ராகு 4&ல் அமர்வதால் கொஞ்சம் வளைந்துக் கொடுத்துப் போக கற்றுக் கொள்ளுங்கள். கெட்ட நண்பர்களின் சகவாசங்களை தவிர்ப்பது நல்லது. அரசாங்க அனுமதியின்றி வீடு கட்டத் தொடங்க வேண்டாம். சொத்து வாங்கும் போது தாய்பத்திரம், வில்லம், பட்டாவையெல்லாம் சரி பார்த்து வாங்குவது நல்லது. தாயாருக்கு ஹார்ட் அட்டாக், இரத்த அழுத்தம், கர்பப்பையில் கட்டி, சர்க்கரை நோய் வரக்கூடும். அவர் கோபத்தில் ஏதேனும் பேசினாலும் அதை பொருட்படுத்தாதீர்கள். கடன் பிரச்னையால் அவ்வப்போது நிம்மதியிழப்பீர்கள். சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். புதிதாக வரும் விளம்பரத்தை கண்டு ஏமாந்து சோப்பு, ஷாம்பு, வாசனை திரவியங்களையெல்லாம் மாற்றிக் கொண்டிருக்காதீர்கள். அலர்ஜி, இன்பெக்ஷன், அல்சர் வரக்கூடும். நேரம் தவறி சாப்பிட வேண்டாம். உடல் அசதி, சோர்வு, கை, கால் வலி வந்து விலகும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். வாகனத்தின் ஓட்டுநர் உரிமம், இன்சூரன்ஸ், பாஸ்போட்டையெல்லாம் சரியான நேரத்தில் புதுப்பிக்க தவறாதீர்கள். போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை இயக்க வேண்டாம். சின்ன சின்ன அபராதம் செலுத்த வேண்டி வரும். சிலர் வீடு மாற வேண்டிய சூழ்நிலை உருவாகும். வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு வீட்டு உரிமையாளர்களால் தொந்தரவுகள் வந்துப் போகும்.

இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்களின் திருதியாதிபதியும்&சஷ்டமாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.2017 முதல் 4.4.2018 வரை ராகுபகவான் செல்வதால் இக்காலக்கட்டங்களில் மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வந்தாலும் பாசம் குறையாது. உடலில் சிறுசிறு கொழுப்புக் கட்டிகள் தோன்றி மறையும். எவ்வளவு பணம் வந்தாலும் கரையும். உறவினர், நண்பர்களில் சிலர் உங்களை தவறான பாதைக்கு தூண்டுவார்கள்.


5.4.2018 முதல் 10.12.2018 வரை ராகுபகவான் உங்களின் ஜீவனாதிபதியும்&லாபாதிபதியுமான சனிபகவானின் பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் ஒரளவு வசதி, வாய்ப்புகள் பெருகும். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். சிலர் புது தொழில் தொடங்குவீர்கள். ஷேர் லாபம் தரும். என்றாலும் முன்பின் தெரியாதவர்களை நம்பி குடும்ப அந்தரங்க விஷயங்களையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

உங்களின் பாக்ய&விரையாதிபதியுமான குருபகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4&ம் பாதம் கடக ராசியில் 11.12.2018 முதல் 13.2.2019 முடிய ராகுபகவான் பயணிப்பதால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வழக்கு சாதகமாகும். பிதுர்வழி சொத்து பிரச்னை முடிவுக்கு வரும். ஆனால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். அவ்வப்போது தூக்கம் குறையும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். நகை, பணம், சொத்துப் பத்திரத்தையெல்லாம் வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைப்பது நல்லது. வீட்டில் திருட்டுப் போக வாய்ப்பிருக்கிறது.

கன்னிப் பெண்களே! கல்யாணம் தாமதமாகும். காதல் விஷயத்திலும் தெளிவாக முடிவெடுக்க முடியாமல் போகும். கொஞ்சம் தள்ளியே இருங்கள். எஸ்.எம்.எஸ்., இமெயிலை கவனமாக கையாளுங்கள். தைராய்டு பிரச்னை, வயிற்று வலி, தோலில் அலர்ஜி வந்துப் போகும். பெற்றோரின் ஆலோசனைகள் இப்போது கசப்பாக இருந்தாலும் பின்னர் அது சரியானது தான் என்பதை நீங்கள் உணர்வீர்கள். சிலருக்கு வேலை அமையும்.

மாணவ&மாணவிகளே! தொடக்கத்திலிருந்தே படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். விடைகளை எழுதிப்பாருங்கள். கூடாப்பழக்க முள்ளவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. கட்டுரை, பேச்சு, இலக்கிய போட்டிகளில் பரிசு பெறுவீர்கள். நீங்கள் விரும்பிய பாடப் பிரிவில் சேர சிலரின் சிபாரிசை நாடுவீர்கள்.

அரசியல்வாதிகளே! ஆதாரமின்றி மேடையில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். கோஷ்டி பூசலில் சிக்குவீர்கள். தலைமையை மீறி எந்த முயற்சியிலும் இறங்க வேண்டாம்.

கலைத்துறையினரே! போட்டிகள் இருக்கும். வதந்திகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். உங்கள் உழைப்பிற்கு சிலர் உரிமை கொண்டாடுவார்கள்.

வியாபாரத்தில் ஏற்ற&இறக்கங்கள் இருந்துக் கொண்டேயிருக்கும். திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி எந்த முதலீடுகளும் செய்ய வேண்டாம். சந்தை நிலவரத்தை தெரிந்துக் கொள்ளுங்கள். வேலையாட்களை வேலைக்கு வைக்கும் போது அவர்களை நன்றாக விசாரித்துவிட்டு பணியில் சேர்ப்பது நல்லது. இல்லையென்றால் உங்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் அறிமுகம் செய்து வைப்பவர்களை வேலையில் சேர்த்துக் கொள்வது நல்லது. பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளுங்கள். கடையை மாற்ற வேண்டாம். இருக்கும் இடத்திலேயே தொடர்வது நல்லது. கமிஷன், உணவு, மருந்து, கன்சல்டன்சி வகைகளால் ஆதாயமடைவீர்கள்.உத்யோகத்தில் வேலைச்சுமையால் மனஇறுக்கம் உண்டாகும். உயரதிகாரிகளின் பார்வை உங்கள் மீது திரும்பும். அவர்களிடம் உஷாசாராக இருங்கள். நன்றி மறந்த சக ஊழியர்களை நினைத்து கொஞ்சம் ஆதங்கப்படுவீர்கள். சிலர் உத்யோகம் தொடர்பாக குடும்பத்தை விட்டு பிரிந்து அயல்நாடு, அண்டை மாநிலம் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

கேதுவின் பலன்கள்:

இதுவரை உங்களின் ராசிக்கு பதினோராவது வீட்டில் அமர்ந்துக் கொண்டு திடீர் வளர்ச்சியையும், உங்களுக்கு செல்வம், செல்வாக்கையும் பெற்றுத் தந்த கேது பகவான் இப்போது 10&ம் இடத்தில் வந்தமர்வதால் ஒரே நேரத்தில் பல வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். வேலைச்சுமையால் மனஇறுக்கம் உண்டாகும். வாழ்க்கையில் வெற்றி பெறுவோமோ, மாட்டமோ என்று ஆதங்கப்படுவீர்கள். உங்களுடைய திறமையை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். குடும்பத்தினருடன் வளைந்துக் கொடுத்துப் போங்கள். தலைக்குனிவான சம்பவங்கள் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம் அடிமனதில் இருந்துக் கொண்டேயிருக்கும். வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து வங்கியில் வாங்கியிருந்த கடனை தீர்க்க புது வழி பிறக்கும். உங்களை விட வயதில் குறைந்தவர்களால் ஆதாயமடைவீர்கள். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் உதவிகள் உண்டு. அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். உறவினர்கள் மத்தியில் உங்களைப் பற்றிய விமர்சனங்களும், வதந்திகளும் அதிகமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றிப் பெற்றும் சிலர் அப்பாயிண்மென்ட் ஆர்டருக்காக காத்திருக்க வேண்டி வரும். மேற்கொண்டு உங்களுடைய கல்வித் தகுதியை மேம்படுத்திக் கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைப் புரிந்துக் கொள்வீர்கள். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

27.7.2017 முதல் 29.11.2017 வரை உங்களின் ராசிநாதனும்&அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2&ம் பாதம் மகர ராசியில் கேதுபகவான் செல்வதால் இக்காலக்கட்டங்களில் புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்குவீர்கள். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். உடல் உஷ்ணத்தால் அடிவயிற்றில் வலி, செரிமானக் கோளாறு, தலைச்சுற்றல் வரக்கூடும்.


உங்களின் சுகாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.2017 முதல் 06.08.2018 வரை கேது செல்வதால் உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். ஆனால் தாயாரின் உடல் நிலை பாதிக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். அரசு காரியங்கள் சுலபமாக முடியும். பழைய இனிய அனுபவங்கள் நினைவுக்கு வரும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது.7.08.2018 முதல் 13.2.2019 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4&ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். பிள்ளைகள் கோபப்படுவார்கள். அவர்களை அன்பால் அரவணைத்துப் போவது நல்லது. பூர்வீக சொத்துப் பிரச்னை விஸ்வரூபமெடுக்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் புது முயற்சிகளோ, முதலீடுகளோ வேண்டாம். சந்தை நிலவரத்தை அவ்வப்போது தெரிந்துக் கொள்ளுங்கள். வேலையாட்கள், பங்குதாரர்களால் பிரச்னைகள் வெடிக்கும். உத்யோகஸ்தானமான 10&ம் வீட்டில் கேது நுழைவதால் உத்யோகத்தில் தன்நிலையை தக்க வைத்துக் கொள்ளப் போராட வேண்டியிருக்கும். உங்கள் உழைப்பை பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறுவார்கள். சிலர் தங்களின் ஆதாயத்திற்காக உங்களைப் பற்றிய தவறான வதந்திகளைப் பரப்புவார்கள். நீங்கள் வேலைப் பார்க்கும் நிறுவனத்தை வேறு நிறுவனம் வாங்க வாய்ப்பிருக்கிறது. விரும்பத்தகாத இடமாற்றங்களெல்லாம் வந்துப் போகும். உங்கள் மீது சிலர் வழக்கு தொடுக்க வாய்ப்பிருக்கிறது. நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வுகளெல்லாம் சற்று தாமதமாகும்.

இந்த ராகு கேது மாற்றம் பிரச்னைகளில் சிக்க வைத்து அவ்வப்போது உங்களை ஆழம்பார்த்தாலும், முயன்றுத் தவறி ஒரளவு முன்னேற வைக்கும்.

பரிகாரம்:

திருச்சிக்கும்&ஸ்ரீரங்கத்திற்கும் இடையே உள்ள திருக்கரம்பனூரில் அருள்பாலிக்கும்
பூர்வா தேவியான பூரணவல்லி உடனுறை ஸ்ரீபுருஷோத்தமரை வணங்குங்கள். கட்டிடத் தொழிலாளிக்கு உதவுங்கள். சாதிப்பீர்கள்.


- கே.பி. வித்யாதரன்

webdunia

இதில் மேலும் படிக்கவும் :