மார்ச் மாத ராசிப் பலன்கள் - விருச்சிகம்

லெனின் அகத்தியநாடன்| Last Modified செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (23:49 IST)
தனக்கென தனிப்பாதை அமைத்துக் கொள்பவர்களே! உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் ஆட்சிப் பெற்று 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிர்ப்புகள் குறையும். நீண்ட கால திட்டங்கள் நிறைவேறும். புதிய முயற்சிகள் வெற்றியடையும்.

தோற்றப் பொலிவுக் கூடும். பேச்சில் கம்பீரம் தெரியும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சமயோஜித புத்தியாலும் சாதித்துக் காட்டுவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். பழைய கடனில் ஒரு பகுதியையாவது பைசல் செய்ய வேண்டுமென்று முயற்சி செய்வீர்கள்.

வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். வேலையில்லாமல் அலைந்து, திரிந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வந்து சேரும். உங்கள் ராசிக்கு சாதகமான வீடுகளில் சுக்ரனும், புதனும் செல்வதால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வழக்குகளும் சாதகமாகும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும்.

உறவினர், நண்பர்கள் மத்தியில் ஆதரவு பெருகும். விலை உயர்ந்த மின்னனு சாதனங்கள் வாங்குவீர்கள். வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். 9-ம் தேதி வரை குரு 12-ல் மறைந்திருப்பதால் திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் வந்து போகும். பழைய கசப்பான அனுபவங்களை நினைத்து அவ்வப்போது தூக்கத்தை கெடுத்து கொள்ளாதீர்கள். பிள்ளைகளால் பிரச்னைகள் வந்து போகும்.

ஆனால் 10-ம் தேதி முதல் குரு வக்ரமாகி லாபஸ்தானத்தில் அமர்வதால் உங்களின் செல்வாக்கு கூடும். புது பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். ஷேர் பணம் தரும். சனி மற்றும் சர்ப்ப கிரகங்களான ராகுவும், கேதுவும் சாதகமாகயில்லாததால் தலைச்சுற்றல், வயிற்று வலி, செரிமானக் கோளாறு, கை, கால் மரத்துப் போகுதல், இரும்புச் சத்துக் குறைபாடுகளெல்லாம் வந்துச் செல்லும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். அநாவசிய வாக்குறுதிகள் வேண்டாம்.

கன்னிப் பெண்களே! பெற்றோரின் முக்கியத்துவத்தை உணருவீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பழைய நண்பர்களும் தேடி வந்துப் பேசுவார்கள். வியாபாரம் பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார்.

சக ஊழியர்கள் உங்கள் வார்த்தைக்கு கட்டுப்படுவார்கள். கலைத்துறையினரே! உங்களின் படைப்புத் திறன் அதிகரிக்கும். புகழ் பெற்ற கலைஞர்கள் உங்களை பாராட்டிப் பேசுவார்கள். முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதை உணரும் மாதமிது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :