வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: திங்கள், 23 மே 2022 (17:46 IST)

அஷ்ட பைரவர்கள் எவ்வாறு எப்போது தோன்றினர்...?

ஒருமுறை தாருகாவனத்து முனிவர்களின் ஆணவத்தை அழிக்க நினைத்த சிவபெருமான், பிட்சாடன மூர்த்தியாக வடிவம் ஏற்றுச் சென்றார். அவரால் தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத முனிவர்கள் சிவபெருமானை அழிக்க முயற்சித்தனர்.  


கடும் கோபம் கொண்ட சிவபெருமான் காலாக்னியால் தாருகாவனத்தை அழித்தார். இதனால் உலகம் முழுக்க இருள் பரவி சூரியனும் மறைந்து போனது. அப்போது பைரவ மூர்த்தியே எட்டுத் திசைகளிலும் தோன்றி ஒளியை உண்டாக்கினார். இப்படி எட்டுவிதமாகத் தோன்றிய பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று பூமியில் வணங்கப்படுகிறார்கள்.

ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், சம்ஹார பைரவர், பீக்ஷன பைரவர், கபால பைரவர் என எட்டு பைரவர் மட்டுமின்றி ஆதிசைவர்கள் 64 விதமான பைரவர்களையும் வணங்கி வந்துள்ளார்கள் என புராணங்கள் கூறுகின்றன.  

சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு. ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார். அஷ்ட பைரவர்களும் அவர்களுக்கான தேவிகள் அஷ்ட பைரவிகளும் உண்டு.

ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் பஞ்ச எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். ஐந்து தனித்தனி அகல் எடுத்துக் கொண்டு ஒரு அகலில் நல்லெண்ணெய். இன்னொரு அகலில் இலுப்ப எண்ணெய். மற்றொன்றில் விளக்கு எண்ணெய். அடுத்ததில் பசு நெய். அடுத்த அகலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பைரவ சுவாமியை நோக்கி அகலின் திரி முகம் வைத்து தனித்தனியாக ஏற்ற வேண்டும்.

ஒரு அகலில் ஏற்றிய நெருப்பில் இருந்து இன்னொரு தீபம் ஏற்றக்கூடாது. இவ்வாறு தனித்தனியாக ஏற்றி வழிபட்டால் தீராத பிரச்சனையும் தீரும். காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும்.