நமசிவாய மந்திரத்தின் விளக்கங்களும் சிறப்புக்களும் !!
மாணிக்கவாசகப் பெருமானும், “நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க” என்றே தனது சிவபுராணத்தைத் துவக்கியுள்ளார்.
ஆதி மந்திரம் ஐந்தெழுத்து ஓதுவார் நோக்கும் மாதிரத்தும் மற்றை மந்திர விதி வருமே என சேக்கிழார் பெருமானும் ஆதிமந்திரம் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இப்பஞ்சாட்சரமானது, தூல பஞ்சாட்சரம், சூக்கும பஞ்சாட்சரம், அதி சூக்கும பஞ்சாட்சரம், காரண பஞ்சாட்சரம், மகா காரண பஞ்சாட்சரம் என ஐந்து வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
நமசிவாய எனும் எளிய ஐந்தெழுத்துக்களே தூல பஞ்சாட்சரம் எனப்படும். இதில் ந என்பது திரோதாண சக்தியையும், ம என்பது ஆணவமலத்தையும், சி என்பது சிவத்தையும், வா என்பது திருவருள் சக்தியையும், ய என்பது ஆன்மாவையும் குறிப்பிடுகின்றன.
இப்பிறவியில் இன்பமாக வாழ விரும்புபவர்கள் ஓத வேண்டிய மந்திரமே நமசிவாய. மேற்கூறிய ஐந்தெழுத்துக்களை இடம்மாற்றி சிவாய நம என்று ஓதுவதே சூக்கும பஞ்சாட்சரம். தூலப் பஞ்சாட்சரத்தில் இரு மலங்களை பின்னுக்குத்தள்ளி, சிவத்தையும் சக்தியையும் முன்னிறுத்தி ஓதுதல் வேண்டும். முக்திப் பேறு விரும்புபவர்கள் ஓதக்கூடிய மந்திரம் இதுவே.
“சிவாய நம என்று சிந்திப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை “ என ஒளவைப் பிராட்டியும், “செம்பும் பொன்னாகும் சிவாயநம எண்ணில்” என திருமூலரும் இதன் சிறப்பைக் கூறியுள்ளார். சிவாய நம எனும் சூக்கும பஞ்சாட்சரம், நடராசப் பெருமானின் ஞானத் திருவுருவைப் பிரதிபலிப்பதாகவும் கூறுவார்கள்.