தனுசு - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்


லெனின் அகத்தியநாடன்| Last Modified வியாழன், 29 டிசம்பர் 2016 (00:06 IST)
எங்கும் எதிலும் வெற்றியை விரும்புபவர்களே! உங்கள் ராசிக்கு தனஸ்தானமான 2-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பணவரவுக்கு குறைவிருக்காது. எதையும் திட்டமிட்டு செய்வீர்கள்.

 

பிரபலங்களின் நட்பு கிடைக்கும். தடைப்பட்ட கல்யாணம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் இனி ஏற்பாடாகும். முகவாட்டத்துடன் இருந்த நீங்கள் இனி உற்சாகமாக காணப்படுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். சொந்த-பந்தங்களால் உதவிகள் உண்டு. வழக்கு சாதகமாகும். சிலருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும்.

வருடம் பிறக்கும் போது உங்களின் பூர்வ புண்யாதிபதியான செவ்வாய் பகவான் 3-ம் வீட்டில் வலுவாக நிற்பதால் மனோபலம் கூடும். புது முடிவுகள் எடுப்பீர்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பூர்வீக சொத்தில் உங்களுக்கு சேர வேண்டிய பங்கை கேட்டு வாங்குவீர்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

ஆனால் 11.4.2017 முதல் 26.5.2017 வரை செவ்வாயை சனி பார்க்கயிருப்பதால் இக்காலக்கட்டங்களில் பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். அவர்களை அன்பால் அரவணைத்துப் போவது நல்லது. கர்ப்பிணிப் பெண்களுக்கு பயணங்களின் போதும், படிகளில் ஏறும் போதும் கவனம் தேவை. பூர்வீக சொத்துப் பிரச்னை வெடிக்கும். சகோதரங்கள் உங்களை தவறாகப் புரிந்துக் கொள்வார்கள்.

26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் கேது நிற்பதால் புதிய முயற்சிகள் யாவும் பலிதமாகும். விவாதங்களில் வெற்றிப் பெறுவீர்கள். வாழ்க்கையின் சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வேற்றுமதத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். இளைய சகோதர வகையில் நன்மை உண்டாகும். கோவில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ராசிக்கு 9-ம் வீட்டில் ராகு நிற்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். தந்தையாருக்கு வேலைச்சுமை, வீண் டென்ஷன் அவருடன் பிணக்குகள் வந்துச் செல்லும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதைப் புரிந்துக் கொள்வதில் குழப்பம் வரும்.

27.7.2017 முதல் வருடம் முடியும் வரை கேது உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டிலும், ராகு 8-ம் வீட்டிலும் அமர்வதால் குடும்பத்தில் சலசலப்புகள் வரும். கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். பழைய கசப்பான சம்பவங்களையெல்லாம் அவ்வப்போது நினைவுக்கூர்ந்து விவாதிக்க வேண்டாம். அதன் மூலமாக பிரச்னைகள் வரக்கூடும். எந்த வேலையாக இருந்தாலும் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். கண்ணை பரிசோதித்துக் கொள்ளுங்கள். பல் வலி, காது வலி, கணுக்கால் வலி வந்து விலகும். வாகனத்தை நிதானமாக இயக்குங்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். காலில் அடிப்படும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை உங்களின் ராசிநாதனும்-சுகாதிபதியுமான குரு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் நிற்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். மறைமுக அவமானம் வந்து நீங்கும். கௌரவம் குறைந்துவிடுமோ என்ற அச்சம் வரும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். தர்மசங்கமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும்.

ஆனால் 02.9.2017 முதல் வருடம் முடியும் வரை குரு 11-ம் வீடான லாபஸ்தானத்தில் அமர்வதால் எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பை பெற்றுத் தருவார். கல்வியாளர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். புது சொத்து வாங்குவீர்கள். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். கணவன்-மனைவிக்குள் எலியும், பூனையுமாக இருந்த நிலை மாறி நகமும் சதையுமாக இணைவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்யோகம் அமையும். பெரிய பதவிக்கு உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும். தாயாரின் உடல் நிலை சீராகும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். அடகு வைத்திருந்த பத்திரம், பழைய கடனையெல்லாம் தீர்க்க புது வழி பிறக்கும். விலகிச் சென்ற உறவினர்களெல்லாம் வலிய வந்து உறவாடுவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

இந்தாண்டு முழுக்க சனி 12-ல் மறைந்து விரையச் சனியாகவும், வருடத்தின் இறுதியில் 15.12.2017 முதல் உங்கள் ராசிக்குள் அமர்ந்து ஜென்மச் சனியாகவும் வருவதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் இருந்துக் கொண்டேயிருக்கும். வேலைச்சுமை அதிகரிக்கும். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். சிலர் எப்படியெல்லாம் போலித்தனமாக பழகி காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள் என்பதை நினைத்து வருத்தப்படுவீர்கள்.

உள்மனது சிலவற்றை அறிவுறுத்தியும் அதை சரியாக பின்பற்றாமல் விட்டு விட்டுமே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். கூடாப்பழக்கங்களிலிருந்து முழுமையாக வெளியேறுவது நல்லது. நல்லவர்களுடன் பழகுங்கள். வாயு பதார்த்தங்கள், கார உணவுகளை தவிர்க்கப்பாருங்கள். இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறையக் கூடும். எனவே இரும்புச் சத்துள்ள காய், கனிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையே ஒரு பெரிய போராட்டமாக இருப்பதாக அவ்வப்போது நினைத்துக் கொள்வீர்கள். கவலைப்படாதீர்கள். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். செப்டம்பர் மாதம் முதல் வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். பணியாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி ஊக்குவிப்பீர்கள். அயல்நாட்டிலிருப்பவர்கள் மூலமாக ஆதாயம் உண்டு. வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். பங்குதாரர்கள் கொஞ்சம் ஏடாகோடமாக பேசுவார்கள். பவர் ப்ராஜெக்ட், பதிப்பகம், சிமெண்ட், மருந்து வகைகளால் ஆதாயமடைவீர்கள்.

உத்யோகத்தில் செப்டம்பர் மாதம் முதல் அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும். சக ஊழியர்களும் முக்கியத்துவம் தர தொடங்குவார்கள். மூத்த அதிகாரிகளும் உங்களின் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். புது அதிகாரியால் உற்சாகமடைவீர்கள். மே, ஜுன், அக்டோபர் மாதங்களில் புது வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். பதவி உயர்வையும் எதிர்பார்க்கலாம் பழைய சம்பள பாக்கியும் கைக்கு வரும். உங்கள் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கிலிருந்து விடுபடுவீர்கள். சிலர் உத்யோகம் சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவீர்கள். உங்களுடைய திறமைக்கும் அங்கீகாரம் கிடைக்கும்.

கன்னிப் பெண்களே! செப்டம்பர் மாதம் முதல் சோர்ந்திருந்த நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள். காதலும் இனிக்கும், கல்வியும் இனிக்கும். விலையுயர்ந்த ஆடை அணிகலன்கள் சேரும். எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும். வருட பிற்பகுதியில் திருமணம் முடியும்.

மாணவ-மாணவிகளே! ஏழரைச் சனி தொடர்வதால் விளையாட்டுத்தனத்தை குறைத்து வகுப்பறையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உயர்கல்வியில் வெற்றியுண்டு. கணிதம், மொழிப் பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள். மதிப்பெண் உயரும். விரும்பிய கோர்ஸில் சேருவீர்கள்.

கலைத்துறையினரே! உங்கள் புகழ் கூடும். சம்பளப் பாக்கி கைக்கு வரும். அரசால் அனுகூலம் உண்டு. மூத்த கலைஞர்களிடம் விட்டுக் கொடுத்து போங்கள். புதியவர்களையும் அனுசரித்துப் போங்கள். சின்ன சின்ன முரண்பாடுகள் வந்து நீங்கும்.

இந்த 2017-ம் ஆண்டின் தொடக்கத்தில் கொஞ்சம் ஏற்ற-இறக்கங்களை தந்தாலும் தொடர் முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் சாதிக்க வைக்கும்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :