வியாழன், 9 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 29 டிசம்பர் 2016 (01:34 IST)

கடகம் - 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

களங்கமில்லாத பேச்சிற்கு சொந்தக்காரர்களே! உங்கள் ராசிக்கு 7-வது ராசியில் இந்த 2017ம் வருடம் பிறப்பதால் உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். அழகு, ஆரோக்யம் கூடும். பாதியிலேயே நின்ற பல வேலைகள் இனி முழுமையாக முடியும்.


 

வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். தடைப்பட்டிருந்த திருமணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். உங்கள் ராசியை சந்திரன் பார்த்துக் கொண்டிருக்கும் போது இந்தாண்டு பிறப்பதால் மனஇறுக்கம் குறையும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பழைய சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாத படி அடுத்தடுத்து செலவுகள் வந்ததே! இனி அந்த அவல நிலை மாறும். கணவன்-மனைவிக்குள் சந்தேகத்தால் வீண் சச்சரவுகளும், உறவினர்களால் தொல்லைகளும் வந்ததே! இனி அன்யோன்யம் அதிகரிக்கும். பொது விழாக்கள், கல்யாணம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

உங்களின் தனாதிபதி சூரியன் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். வழக்கு சாதகமாகும்.

வருடப் பிறப்பு முதல் 16.01.2017 வரை மற்றும் உங்களின் யோகாதிபதி செவ்வாய் 8-ல் மறைந்திருப்பதால் ஆரோக்ய குறைவு, சிறுசிறு விபத்துகள், சொத்துப் பிரச்னைகள், பொருள் இழப்புகள், பணப்பற்றாக்குறை, உடன்பிறந்தவர்களுடன் மனக்கசப்புகள் வந்து நீங்கும். 11.4.2017 முதல் 26.5.2017 வரை உங்களின் யோகாதிபதியான செவ்வாயை சனி பார்க்கயிருப்பதால் பெற்றோருக்கு மருத்துவச் செலவுகள், மனஇறுக்கம், ஏமாற்றங்கள், மறைமுக நெருக்கடிகள் வந்துச் செல்லும்.

26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ம் வீட்டில் கேதுவும் நிற்பதால் படபடப்பு, எதிலும் பிடிப்பற்றப் போக்கு, பிறர்மீது நம்பிக்கையின்மை, வீண் விரையம் வந்துச் செல்லும். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடிய வாய்ப்பிருக்கிறது. வாகனத்தில் கவனம் தேவை. பணப்பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். கண்ணில் சின்னதாக தூசு விழுந்தாலும் அலட்சியமாக இருந்து விடாதீர்கள். மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது. மற்றவர்களை தாக்கி பேச வேண்டாம். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதைப் புரிந்துக் கொள்வதில் தடுமாற்றம் வரும்.

27.7.2017 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள் ராகுவும், 7-ல் கேதுவும் தொடர்வதால் எதிலும் ஒருவித பயம், ஒற்றை தலை வலி, செரிமானக் கோளாறு, சிறுநீர் பாதையில் அழற்சி, வலிப்பு வந்துச் செல்லும். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலிக்கும். ஹார்ட் அட்டாக்காக இருக்குமே என்ற அச்சம் வந்துப் போகும். பெரிய நோய் இருப்பதாக பயந்துவிடாதீர்கள். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள்.

புதிது புதிதாக வரும் விளம்பரங்களை பார்த்து சோப்பு, பற்பசை, ஷாம்பு, வாசனை திரவியங்களையெல்லாம் மாற்றிக் கொண்டிருக்காதீர்கள். அலர்ஜி வரக்கூடும். விஷப் பூச்சிகளான பூரான், பாம்பு, தேள் கடிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே கவனம் தேவை. கணவன்-மனைவிக்குள் விட்டு கொடுத்து போவது நல்லது. உன் சொந்தம், என் சொந்தம் என்றெல்லாம் மோதிக்கொண்டிருக்காதீர்கள். ஈகோவை தவிர்க்கப்பாருங்கள். பிரிவுகள் வரக்கூடும். எந்த வேலையாக இருந்தாலும் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை உங்களின் சஷ்டம-பாக்யாதிபதியான குரு உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் நிற்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளைப் பார்க்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகும். அவ்வப்போது பலவீனமாக உணருவீர்கள். சிலர் தங்களது காரியம் ஆகும் வரை உங்களைப் பயன்படுத்திக் கொண்டு வேலை முடிந்தப் பிறகு கருவேப்பில்லையாய் தூக்கி எறிவதை நினைத்து வருத்தப்படுவீர்கள். தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. இளைய சகோதர வகையில் பிணக்குகள் வரும். விமர்சனங்கள் கண்டு அஞ்ச வேண்டாம்.

ஆனால் 02.9.2017 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டிலேயே அமர்வதால் இழுபறியாக இருந்த காரியங்களெல்லாம் முடிவடையும். என்றாலும் தாயார் கோபத்தில் ஏதேனும் பேசினாலும் அதைப் பெரிதுப்படுத்தி கொண்டியிருக்காதீர்கள். அவருக்கு பார்வை கோளாறு, முதுகு, மூட்டு வலி, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்துச் செல்லும். தாயார், அம்மான், அத்தைவழியில் மனஸ்தாபம் வந்து நீங்கும். தாய்வழி சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். வழக்கில் வழக்கறிஞரின் போக்கு சரியாகயிருக்கிறதா என பார்த்து மாற்றுவது நல்லது. வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள்.

சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். தந்தையாரின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சொத்து வாங்கும் போதும் சட்ட நிபுணர்களை கலந்தாலோசித்து தாய்பத்திரம், பட்டா, வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து வாங்குங்கள். இடமாற்றம் உண்டு. சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்ததிற்கு ஆளாவீர்கள். திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி எந்த முடிவுகளும் எடுக்க வேண்டாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். வெளி உணவுகள், கார உணவுகள் மற்றும் எண்ணெய் பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். அவ்வப்போது கனவு தொல்லையால் தூக்கம் குறையும்.

14.12.2017 வரை சனி 5-ல் நிற்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். வரன் வீட்டாரைப் பற்றி நன்கு விசாரித்து முடிக்கப்பாருங்கள். மகன் காரண காரியமேயின்றி கோபப்படுவார். பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் பொறுப்பாக நடந்துக் கொண்டால் நலமாக இருக்குமே என்று ஆதங்கப்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் வரும் சின்ன சின்ன பிரச்னைகளையும் பெரிதுப்படுத்த வேண்டாம். வீண் சந்தேகத்தை தவிர்க்கப்பாருங்கள். மனைவிக்கு கை, கால் மரத்து போதல், கர்ப்பப்பையில் கட்டி வந்து போகும்.

கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைக்காக கோர்டு, கேஸ், என்றெல்லாம் நேரத்தையும், பணத்தையும் செலவு செய்து கொண்டிருக்காதீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்களைப் பற்றி வதந்திகள் அதிகமாகும். பால்ய நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். சிலர் உத்யோகம், உயர்கல்வியின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஆனால் 15.12.2017 முதல் 6-ம் வீட்டில் சனிபகவான் அமர்வதால் எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகளின் பொறுப்பற்ற போக்கு மாறும். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். மனைவியின் ஆரோக்யம் சீராகும். அவருடனான மோதல்கள் விலகும்.

வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். தொடர்ந்து லாபம் பெற முடியவில்லையே என்ற ஒரு கவலைகளும் இருக்கும். ஒரு வாரம் நன்றாக இருந்தால் மறுவாரம் வருமானம் இல்லாமல் போகிறதே என்று நினைத்து கலங்குவீர்கள். வியாபாரத்தை நம்பி ஒரு லோன் வாங்கலாம் என்று நினைத்தால் கூட முடியாமல் போகிறதே நிலையற்ற வருமானமாகி விட்டது என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள்.

கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை அன்பாக நடத்துங்கள். விளம்பரத்தையும் பயன்படுத்துங்கள். பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது நல்லது. துணி, சிமெண்ட், செங்கல் சூளை வகைகளால் லாபமடைவீர்கள். அவ்வப்போது மாறி வரும் சந்தை நிலவரத்தை அறிந்துக் கொள்ளுங்கள். பங்குதாரர்களிடம் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். நண்பர்களின் உதவியுடன் கடையை விரிவுப்படுத்துவீர்கள்.

உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சில நேரங்களில் அதிகாரிகள் கூடுதலாக உங்களுக்கு வேலைகளை தருவார்கள். சலித்துக் கொள்ளாமல் அந்த வேலைகளை முடித்துக் கொடுப்பது நல்லது. உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் இல்லாமல் போகும். சிலர் உங்கள் மீது அவதூறு வழக்குகள் தொடர்வார்கள். சக ஊழியர்களால் மனஉளைச்சல் ஏற்படும். விரும்பத்தகாத இடமாற்றம் வரக்கூடும். முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள்.

கன்னிப்பெண்களே! சமயோஜித புத்தியுடன் நடந்துக் கொள்ளுங்கள். காதல் விவகாரத்தை தள்ளி வைத்து விட்டு உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். பெற்றோரின் ஆலோசனைக்கு செவி சாயுங்கள். போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றி பெறுவீர்கள். கல்யாணம் சற்று தாமதமாகி முடியும்.

மாணவ-மாணவிகளே! மந்தம், மறதி வந்து நீங்கும். மொழிப் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். விரும்பியப் பாடப்பிரிவில் கூடுதல் செலவு செய்தும், சிலரின் சிபாரிசின் பேரிலும் சேர வேண்டிய சூழ்நிலை உருவாகும். கூடாப்பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்க்கப்பாருங்கள். விளையாடும் போது சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும்.

கலைத்துறையினரே! கிசுகிசுத் தொல்லைகள் வரும். உங்களுடைய படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள்.

இந்த 2017-ம் ஆண்டு அவ்வப்போது உங்களை மட்டம் தட்டப்பார்த்தாலும் விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும் கரைத்தேற்றும்.