1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 29 ஜூலை 2016 (17:54 IST)

ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் : தனுசு

முயற்சிகளிலிருந்து பின்வாங்காதவர்களே! கேது 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் புது விதமாக யோசிப்பீர்கள். புதிய பாதையும் தெரியும். வெளிமாநிலத்தை சார்ந்தவர்கள் மூலமாக திடீர் திருப்பம் உண்டாகும். கடந்த காலத்தில் சவாலாக நினைத்திருந்த வேலைகளெல்லாம் சிறப்பாக முடித்துக் காட்டுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். இளைய சகோதர வகையில் பயனடைவீர்கள். திடீர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். மாற்று மதத்தை சார்ந்தவர்களும் ஆதரவாக இருப்பார்கள்.
 
12-ம் வீட்டில் செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த திருமணம் கூடி வரும். திடீர் பணவரவு உண்டு. மகனுக்கிருந்த கூடாப்பழக்க வழக்கம் விலகும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். வீடு, மனை வாங்குவதற்கு இடம் தேடினீர்களே! உங்கள் ரசனைக் கேற்ப வீடு அமையும். முன்பணம் கொடுத்து முடிப்பீர்கள். 16-ஆம் தேதி வரை சூரியன் 8-ல் மறைந்து நிற்பதால் செலவினங்கள் அதிகரிக்கும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள்.
 
17-ஆம் தேதி முதல் சூரியன் ஆட்சிப் பெற்று அமர்வதால் தந்தையாருடனான மோதல்கள் விலகும். அவருக்கு நோய் வெகுவாக குறையும். அரசால் ஆதாயம் உண்டு. பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். ராசிநாதன் குருபகவான் 2-ஆம் தேதி முதல் ராசிக்கு 10-ல் அமர்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம்.
 
வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்காதீர்கள். வங்கிக் கணக்கில் போதிய நிதி இருக்கிறதா என பார்த்து காசோலை தருவது நல்லது. சுக்ரன் சாதகமாக இருப்பதால் பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வி.ஐ.பிகளின் உதவியுடன் சில விஷயங்களை விரைந்து முடிப்பீர்கள். வழக்குகள் சாதகமாகும். புதன் சாதகமாக இருப்பதால் பள்ளிக் கல்லூரி கால நண்பர்களை சந்தித்து மனம் விட்டு பேசுவீர்கள்.
 
கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். பெற்றோரின் அறிவுரையில் சில உண்மைகள் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் லாபம் குறையாது. வேலையாட்கள் உங்களிடமிருந்து தொழில் யுக்திகளை கற்றுக் கொள்வார்கள். 2-ஆம் தேதி முதல் குரு 10-ல் அமர்வதால் உத்யோகத்தில் அலைச்சலும், வேலைச்சுமையும், சிறுசிறு அவமானங்களும், விரும்பத்தாக இடமாற்றமும் வந்து நீங்கும். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதிகாரிகளின் ஆலோசனைகளின்றி எந்த முடிவுகளோ, முயற்சிகளோ வேண்டாம். கலைத்துறையினரே! புகழ் கூடும். தனித்திறமையை வெளிப்படுத்துவீர்கள். ராஜ தந்திரத்தால் முன்னேறும் மாதமிது.