தன்னை நாடி வந்தவர்களை ஆதரிப்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு அடுக்கடுக்கான வேலைகளால் அவதிப்படுத்தியதுடன், சொன்ன சொல்லையும் காப்பாற்ற முடியாமல் திணறடித்து, எந்தத் தொழில் தொடங்கினாலும் அதில் ஒரு நட்டத்தையும், கடனையும் ஏற்படுத்தி வந்த குருபகவான் இப்போது 02.8.2016 முதல் 1.09.2017 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால் துவண்டுக் கிடந்த நீங்கள் இனி துளிர்த்தெழுவீர்கள்.
எதையும் சாதிக்கும் நம்பிக்கை வரும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்களெல்லாம் பணத்தை திருப்பித் தருவார்கள். பிரபலங்கள், பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். கடினமான காரியங்களைக் கூட இனி சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள்.
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். தாம்பத்யம் இனிக்கும். அறிவுப்பூர்வமாகவும், அனுபவப்பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவருவீர்கள். புதுப் பதவி, பெறுப்புகளுக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். மூத்த சகோதர வகையில் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். ஷேர் மூலம் பணம் வரும். கோபம் குறையும். விலை உயர்ந்த ரத்தினங்கள், தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
உறவினர், நண்பர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துக் கொள்வார்கள். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். சபைகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். உங்களைத் தாழ்திப் பேசியவர்களெல்லாம் மனம் திருந்து வருவார்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் புகழ் பரவும். மற்றவர்களை சார்ந்திருக்காமல் தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். சிலர் புது வீடு கட்டிக் கிரகப்பிரவேசம் செய்வீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் வருங்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள்.
குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்களின் 3-ம் வீட்டை பார்ப்பதால் துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. சிலர் இரு சக்கர வாகனத்தை மாற்றி நான்கு சக்கர வாகனம் வாங்குவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்புக் கிடைக்கும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள்.
குரு பகவான் ஏழாம் பார்வையால் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டை பார்ப்பதால் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். மகளுக்கு வேலைக் கிடைக்கும். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல குடும்பத்திலிருந்து வாழ்க்கைத் துணை அமைவார். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பூர்வீக சொத்தை உங்கள் ரசனைக் கேற்ப விரிவுப்படுத்தி, அழகுப்படுத்துவீர்கள். குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள்.
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 7-ம் வீட்டை பார்ப்பதால் மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். டி.வி., ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் ஜுவனாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குருபகவான் பயணிப்பதால் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். அரசாங்க விஷயங்கள் சுலபமாக முடியும். வி.ஐ.பிகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். சிலர் சொந்தமாக தொழில் தொடங்குவீர்கள்.
20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை உங்கள் பாக்யாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். பணவரவு அதிகரிக்கும். தந்தையாரின் ஆரோக்யம் சீராகும். நிரந்தர வருமானத்திற்கு வழி தேடுவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும்.
உங்கள் ராசியாதிபதியும்-சஷ்டமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் எதிர்ப்புகள் குறையும். எதிர்த்தவர்கள் அடங்குவார்புதிதாக சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 12-ம் வீட்டில் குரு மறைவதால் எதிர்பாராத பயணங்கள் உண்டு. உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். அவ்வப்போது தூக்கம் குறையும். சொந்த ஊரில் வாங்கியிருந்த இடத்தை கட்டுவதற்கான முயற்சியில் இறங்குவீர்கள். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். உறவினர், நண்பர்கள் வீட்டு திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசத்தையெல்லாம் நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள்.
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் மனக்குழப்பங்களும், தடுமாற்றங்களும் கொஞ்சம் இருந்துக் கொண்டேயிருக்கும். எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டேப் போகும். நெருக்கடிகளை சமாளிக்கும் சாமர்த்தியமும் பிறக்கும். ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. ஆனால் பணவரவு குறையாது.
வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். சந்தை நுணுக்கங்களை கற்றுக் கொண்டு பெரிய முதலீடுகள் செய்வீர்கள். வெளிநாட்டு நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். வேலையாட்களை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். துரித உணவகம், இரும்பு, ரியல் எஸ்டேட், கடல் வாழ் உயிரினங்கள், கிப்ட் ஷாப் வகைகளால் லாபம் பெருகும். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். உங்கள் கருத்துகளுக்கு, புதிய முயற்சிகளுக்கு மறுப்புத் தெரிவிக்காத நல்லவர் பங்குதாரராக வர வாய்ப்பிருக்கிறது. இயக்கம், சங்கம் நடத்தும் விழாக்கள், போராட்டங்களுக்கு முன்னிலை வகிப்பீர்கள். கடையை பிரபலமான இடத்திற்கு மாற்றுவீர்கள்.
உத்யோகத்தில் அடிக்கடி இடமாற்றங்களையும், அவமானங்களையும், சூழ்ச்சிகளையும் சந்தித்தீர்களே! இனி உங்கள் கை ஓங்கும். அதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். அலுவலக சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்துக் கொள்வார். சம்பள உயர்வு, பதவி உயர்வு உண்டு. சக ஊழியர்கள் உங்கள் வேலையை பகிர்ந்துக் கொள்வார்கள். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். வேறு சில வாய்ப்புகளும் தேடி வரும். வழக்கிலிருந்து விடுபடுவீர்கள். தலைமைப் பொறுப்பு தேடி வரும்.
கன்னிப் பெண்களே! நிஜம் எது நிழல் எது என்பதை உணர்வீர்கள். காதலும் இனிக்கும், கல்வியும் இனிக்கும். கல்யாணமும் கூடி வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். புது உத்யோகம் அமையும். ஆடை, ஆபரணம் சேரும். பெற்றோர் உங்களின் விருப்பங்களை நிறைவேற்றுவார்கள்.
மாணவ-மாணவிகளே! படிப்பில் இருந்த மந்த நிலை மாறும். போட்டி, பொறாமைகளுடன் பழகிய சக மாணவர்கள் திருந்துவார்கள். உங்களுடைய தனித்திறமைகளை அதிகரித்துக் கொள்வீர்கள். விரும்பிய கோர்ஸில் சேருவீர்கள்.
கலைத்துறையினரே! விருதுக்கு உங்கள் பெயர் தேர்ந்தெடுக்கப்படும். உங்களின் கற்பனை விரியும். சக கலைஞர்களை மதிப்பீர்கள். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள்.
அரசியல்வாதிகளே! போட்டி அரசியல் நடத்திக்கொண்டு, இருந்த சேமிப்பையும் கரைத்தீர்களே! இனி தாய்கழகத்தில் இணைவீர்கள். தேர்தல் களத்தில் ஜெயிப்பீர்கள். உங்களின் பொறுப்புணர்வை மேலிடம் பாராட்டும்.
இந்த குரு மாற்றம் புதிய பாதையில் பயணித்து வெற்றிக் கனியை சுவைக்க வைக்கம்.
பரிகாரம்:
பழனி மலையில் அருள்பாலிக்கும் முருகப் பெருமானையும், சித்தர் பெருமான் போகரையும் சஷ்டி திதி நடைபெறும் நாளில் சென்று தரிசியுங்கள். அகதிகளுக்கு உதவுங்கள்.