உயர்வான எண்ணம் உடையவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்துக் கொண்டு எதிலும் வெற்றியையும், பதவி, கௌரவத்தையும் தந்த குருபகவான் இப்போது 02.8.2016 முதல் 1.09.2017 வரை விரையஸ்தானமான 12-ம் வீட்டிற்குள் நின்று பலன் தருவார். உங்கள் ராசிக்கு சத்ரு ஸ்தானாதிபதியாக குரு வருவதால் போராடங்களை கடந்து முன்னேறுவீர்கள்.
ஐம்பது ரூபாயில் முடியக் கூடிய விஷயங்களைக் கூட ஐநூறு ரூபாய் செலவு செய்து முடிக்க வேண்டி வரும். சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது திட்டமிட்டாலும் முடியாமல் போகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகளும் அதிகமாகும். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். வீண் அலைக்கழிப்புகளும் அதிகமாகும்.
பழைய கடனை நினைத்து கலங்குவீர்கள். கட்டிக் காப்பாற்றிய கௌரவத்தை இழந்துவிடுவோமோ என்ற ஒரு கவலைகள் வந்து நீங்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த கூடுதல் நேரம் ஒதுக்கி உழைப்பீர்கள். குடும்பத்தில், கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். அந்தரங்க விஷயங்களில், உள்விவகாரங்களில் மூன்றாம் நபர் தலையீட்டை தவிர்க்கப் பாருங்கள்.
சிலர் எப்படியெல்லாம் போலித்தனமாக பழகி காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள் என்பதை நினைத்து வருத்தப்படுவீர்கள். உள்மனது சிலவற்றை அறிவுறுத்தியும் அதை சரியாக பின்பற்றாமல் விட்டு விட்டுமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள். மற்றவர்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.
கனவுத்தொல்லையால் தூக்கமில்லாமல் போகும். கோவில் கும்பாபிஷேகத்திற்கு தலைமை தாங்குவீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். பழைய நூல்கள் படிப்பதில் ஆர்வம் பிறக்கும். வழக்கில் வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்க வேண்டாம். இளைய சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். வாகனத்திற்கான லைசன்ஸ், இன்சூரன்ஸ், பாஸ்போட்டையெல்லாம் குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பிக்க தவறாதீர்கள். அபராதம் கட்ட வேண்டி வரும்.
சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். பழைய இழப்புகள், ஏமாற்றங்களை அசைப் போட்டு தூக்கத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். பழைய வீட்டை சிலர் இடித்து புதுப்பிப்பீர்கள். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ அப்ரூவல் கிடைத்து சிலர் புதிதாக வீடு கட்டத் தொடங்குவீர்கள். லோன் கிடைக்கும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களையும் நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள்.
குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்களின் 4-ம் வீட்டை பார்ப்பதால் தாயாரின் உடல் நிலை சீராகும். அவருடனான மோதல்கள் விலகும். தாய்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். நல்ல காற்றோட்டம், குடிநீர் உள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். சிலர் வேறு ஊருக்கு குடிப்பெயர்வீர்கள்.
குரு பகவான் ஏழாம் பார்வையால் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டை பார்ப்பதால் மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய முயற்சி செய்வீர்கள். நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாகும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். வெளிவட்டாரத்தில் சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 8-ம் வீட்டை பார்ப்பதால் உங்களைச் சுற்றியிருப்பவர்களில் ஆடம்பரமாகப் பேசுபவர்கள் யார், உண்மையான அன்புடன் பழகுபவர்கள் யார், உங்கள் மீது நிஜமான அக்கரை உள்ளவர்கள் யார் என்பதனைப் புரிந்துக் கொள்வீர்கள். வேற்றுமதத்தவர்கள், மாநிலத்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்களின் பாதகாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குருபகவான் பயணிப்பதால் உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மகான்கள், சித்தர்களின் நட்பு கிடைக்கும். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகமாகும். ஆன்மிகப் பெரியோரை சந்தித்து ஆசி பெறுவீர்கள்.
20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை உங்களின் ஜீவனாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் சவாலான காரியங்களைக் கூட சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். வீண்பழி விலகும். உத்யோகத்தில் பதவியுயர்வு உண்டு. அடகிலிருந்த நகை, பத்திரங்களை மீட்பீர்கள். பொது நிகழ்ச்சி, கோவில் விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். பிரபலமடைவீர்கள். மகளுக்கு திருமணம் முடியும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள்.
உங்கள் தன-சப்தமாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் வருமானம் உயரும். குடும்பத்தில், கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும். மனைவியின் ஆரோக்கியம் சீராகும். மனைவிக்கு வேலைக் கிடைக்கும். மனைவி வழி உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் உங்கள் ராசியில் குரு அமர்ந்து ஜென்ம குருவாக வருவதால் காய்ச்சல், சளித் தொந்தரவு, மஞ்சள் காமாலை, வயிற்று உப்புசம் வந்துச் செல்லும். குடும்பத்தில், கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். பிரச்னைகளை அடுக்கி வைத்துக் கொள்ளாதீர்கள். எதைத்தொட்டாலும் பிரச்னையென்றெல்லாம் எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது நல்லது.
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் திட்டமிட்ட காரியங்கள் ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வேலைச்சுமையால் உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். பூர்வீக சொத்தை விரிவுப்படுத்துவது, அழகுப்படுத்துவது போன்ற பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும்.
வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் ஈட்டுவீர்கள். பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்பீர்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. புதிய சலுகைத் திட்டங்களை அறிமுகப்படுத்துவீர்கள். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். வங்கிக் கடன் பெற்று சிலர் புது முதலீடு செய்வீர்கள். கமிஷன், ஏஜென்சி, மருந்து, உர வகைகளால் லாபமடைவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களுடன் சச்சரவு வரக்கூடும்.
உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். நீங்கள் எவ்வளவு உழைத்தாலும் நற்பெயர் கிடைக்காது. சின்ன சின்ன குறைகளை நேரடி அதிகாரி சுட்டிக் காட்டிக் கொண்டேயிருப்பார். அலுவலக ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மேலதிகாரி தவறான வழிகளை கையாண்டாலும், நீங்கள் நேர்பாதையில் செல்வது நல்லது. சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.
கன்னிப்பெண்களே! சிலரின் ஆசை வார்த்தை நம்பி ஏமாற வேண்டாம். காதல் வளையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பெற்றோரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கப்பாருங்கள். தடைபட்ட கல்வியை போராடி முடிப்பீர்கள். திருமணம் கொஞ்சம் தாமதமாகி முடியும்.
மாணவ-மாணவிகளே! படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது. டி.வி. பார்த்துக் கொண்டே படிப்பது, பாட்டு கேட்டுக் கொண்டே எழுதுவது, படுத்துக் கொண்டே படிப்பதெல்லாம் இனி வேண்டாம். பொறுப்பாக படியுங்கள். உங்களின் திறமையை வெளிக்கொண்டுவர முயற்சி செய்யுங்கள். பள்ளி மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். விளையாட்டில் வெற்றியுண்டு.
கலைத்துறையினரே! கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளப்பாருங்கள். வீண் வதந்திகளும், கிசுகிசுக்களும் இருக்கத்தான் செய்யும். மனந்தளராமல் இருங்கள்.
அரசியல்வாதிகளே! உங்களின் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும். சகாக்களில் ஒருசாரர் உங்களுக்கு ஆதரவாகவும், ஒருசாரர் உங்களுக்கு எதிராகவும் செயல்படுவார்கள். எதிர்கட்சியினரை எதிர்ப்பதில் தீவிரம் காட்ட வேண்டாம்.
இந்த குரு மாற்றம் செலவுகளையும், அலைச்சலையும் தந்தாலும் ஆதாயத்தையும் தரும்.
பரிகாரம்:
சீர்காழி தரங்கம்படி சாலை இடையேயுள்ள திருநாங்கூர்-அண்ணன் கோவிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீகண்ணன் நாராயணப் பெருமாளையும் ஸ்ரீபூவார் திருமகளையும் ஏதேனும் ஒரு சனிக் கிழமையில் சென்று வணங்குங்கள். காது கோளாதவர்களுக்கு உதவுங்கள்.