மூளையை மூலதனமாக்கி முன்னேறுபவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு புதிய அனுபவங்களை கற்றுத் தந்து உங்களின் இலக்கை நோக்கி முன்னேற வைத்த குருபகவான் 02.8.2016 முதல் 1.09.2017 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் நுழைந்து பலன் தரப்போகிறார். பத்தாம் இடமென்றால் பதவியை பறிபோகுமே! கையில் காசுபணம் தங்காதே! என்றெல்லாம் பயந்துவிடாதீர்கள். ஓரளவு நன்மையே உண்டாகும்.
எதிர்பார்த்த வேலைகள் முடியாவிட்டாலும் எதிர்பாராத சில காரியங்கள் முடிவடையும். சவால்களை சந்திக்க வேண்டி வரும். என்றாலும் அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வேலைச்சுமை அதிகமாகும். ஓய்வெடுக்க முடியாத நிலை உருவாகும். ஒரே நேரத்தில் பல வேலைகளையும் பார்க்க வேண்டி வரும். உங்கள் உழைப்பையும், திறமையையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். தலைக்குனிவான சம்பவங்கள் நிகழக் கூடும். வருங்காலம் குறித்த கவலைகள் வந்துப் போகும்.
பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். தர்ம சங்கடமான சூழ்நிலைகளை அவ்வப்போது சமாளிக்க வேண்டி சூழ்நிலை உருவாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் உங்களைப் பற்றிய வதந்திகள் அதிகமாகும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். எல்லா இடங்களிலும் நான் தான் விட்டுக் கொடுத்துப் போக வேண்டுமா என்றெல்லாம் சில நேரங்களில் உணர்ச்சிவசப்படுவீர்கள்.
சிலர் உங்களை பார்த்தால் புகழ்ந்து பேசுவதும், நீங்கள் இல்லாத போது உங்களை விமர்சிக்கவும் செய்வார்கள். உங்களுடைய பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்த முயல்வார்கள். எதிர்மறை எண்ணங்கள் தலைத்தூக்கும். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்க வேண்டாம். மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வரும். சிலர் மனைவி, பிள்ளைகளை விட்டுப் பிரிந்து அயல்நாடு, வேற்றுமாநிலம் சென்று வேலைப் பா£க்க வேண்டிய சூழல் ஏற்படும்.
குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்களின் 2-ம் வீட்டை பார்ப்பதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். வி.ஐ.பிகளை சரியாகப் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். புது வேலை அமையும். திடீரென்று அறிமுகமாகும் நண்பர்களால் ஆதாயமடைவீர்கள்.
குரு பகவான் ஏழாம் பார்வையால் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டை பார்ப்பதால் தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். அவருடனான மோதல்களும் விலகும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். விலைவாசி ஏறிக்கிட்டே போகுது; வாடகையும் தாறுமாற கூடிக்கிட்டே போகுது. புறநகர் பகுதியிலாவது அறை கிரவுண்ட், ஒரு கிரவுண்ட் வாங்கினா பத்து வருஷம் கழித்து வீடு கட்டிக்கிட்டு செட்டிலாகி விடலாம் என்று யோசிப்பீர்கள். தாய்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். வழக்கு சாதகமாகும். வீடு மாறுவீர்கள். இடமாற்றம் உண்டு.
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 6-ம் வீட்டை பார்ப்பதால் பேச்சை குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். வீண் விவாதங்களிலிருந்து ஒதுங்குவீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. வெள்ளிச் சாமான்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். கௌரவப் பதவி தேடி வரும்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் பாக்யாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குருபகவான் பயணிப்பதால் திடீர் அதிர்ஷ்ட, யோகம் உண்டாகும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். பணவரவு அதிகரிக்கும். உத்யோகத்தில் உயர்வு உண்டு. தந்தை பக்கபலமாக இருப்பார். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். வழக்கு சாதகமாகும். திருமணம், சீமந்தம், காதுகுத்து என்று வீடு களை கட்டும். அரசால் ஆதாயமுண்டு. தந்தைவழி உறவினர்களின் ஆதரவுப் பெருகும்.
20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை உங்கள் அட்டமாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வீண் அலைகழிப்புகளும் அதிகமாகும். சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணத்தை தவிர்ப்பது நல்லது. சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். அவ்வப்போது அடிவயிற்றில் வலி, இரத்த சோகை, கண் வலி வந்துப் போகும்.
உங்கள் பூர்வ புண்யாதிபதியும்-விரையாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் மனோபலம் கூடும். புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக முடிப்பீர்கள். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். எதிர்பாராத பயணங்கள் உண்டு. அவ்வப்போது தூக்கம் குறையும். கடந்த கால அனுபவங்களை பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.
17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 11-ம் வீட்டில் குரு அமர்வதால் எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். எங்குச் சென்றாலும் முதல் மரியாதைக் கிடைக்கும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாமல் திணறுவீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அவர்களை அன்பால் அரவணைத்துப் போங்கள். மகனின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். கூடாப்பழக்கங்கள் தொற்ற வாய்ப்பிருக்கிறது.
வியாபாரம் சுமாராக இருக்கும். கொடுக்கல்-வாங்கல் விஷயத்தில் கறாராக இருங்கள். போட்டியாளர்களை முறியடிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். வெளிநாட்டு நிறுவனம், புகழ் பெற்ற நிறுவனம் என்று விளம்பரங்களை நம்பி தீர விசாரிக்காமல் முதலீடு செய்ய வேண்டாம். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற போராட வேண்டி வரும். பெரிய முதலீடுகளை தவிர்த்துவிட்டு, இருப்பதை வைத்து லாபம் சம்பாதிக்கப்பாருங்கள். வேலையாட்களால் விரயம் ஏற்படும். திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி கடன் தர வேண்டாம். புது ஒப்பந்தங்கள் தாமதமாகும். பங்குதாரருடன் பனிப்போர் வெடிக்கும். எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், கெமிக்கல், எண்டர்பிரைசஸ், சிமெண்ட் வகைகளால் ஆதாயம் பெறுவீர்கள்.
உத்யோக ஸ்தானமான 10-ம் வீட்டில் குரு அமர்வதால் உத்யோகத்தில் இடமாற்றம், மறைமுக எதிர்ப்புகள், முகவரி இல்லாத குற்றச்சாட்டு கடிதங்களின் அடிப்படையில் சின்ன சின்ன விசாரணைகளையெல்லாம் சந்திக்க வேண்டிய சூழல் வரும். வேலையில் நீடிப்போமோ, நீடிக்க மாட்டோமோ என்ற ஒரு பயம் இருக்கும். அதிகாரிகள் ஆதரவாகப் பேசினாலும் கூடுதலாக உங்களுக்கு வேலைகளை தருவார்கள். சலித்துக் கொள்ளாமல் அந்த வேலைகளை முடித்துக் கொடுப்பது நல்லது.
உயரதிகாரிகள் பாரபட்சமாக நடந்துக் கொள்வார்கள். சக ஊழியர்களுடன் அளவாகப் பழகுங்கள். அவர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். சிலர் உங்களுடைய சாதனைகளை குறுக்குவழியில் சென்று பறிக்க முயல்வார்கள். புது வேலை மாறுவதில் அவசர முடிவுகள் வேண்டாம். அலுவலகம் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். காணாமல் போக வாய்ப்பிருக்கிறது.
கன்னிப்பெண்களே! காதலை தள்ளி வையுங்கள். மனசை அலைபாயவிடாமல் ஒருநிலை படுத்துங்கள். எதிர்காலம் பற்றி யோசியுங்கள். பெற்றோரின் ஆலோசனைகள் இப்போது கசப்பாக இருந்தாலும் பின்னர் அது சரியானது தான் என்பதை நீங்கள் உணர்வீர்கள். தடைபட்ட கல்வியை போராடி முடிப்பீர்கள்.
மாணவ-மாணவிகளே! சாதித்துக் காட்ட வேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது அதற்கான உழைப்பும் வேண்டும். அதிகாலையில் எழுந்து படிக்கத் தவறாதீர்கள். அன்றன்றைய பாடங்களை அன்றே படியுங்கள். டி.வி. பார்க்கும் நேரத்தை குறைப்பது நல்லது. இயற்பியல், கணக்குப் பாடங்களில் அதிக கவனம் செலுத்தப்பாருங்கள். விருப்பப்பட்ட கோர்ஸில் சேர சிலரின் சிபாரிசை நாடவேண்டி வரும்.
கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்புகளை கொடுங்கள். குறைந்த பட்ஜெட் படைப்புகள் வெற்றி பெறும். மூத்த கலைஞர்களின் நட்பால் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள்.
அரசியல்வாதிகளே! மறைமுகப் போட்டிகள் இருக்கும். உட்கட்சிப் பூசல் வெடிக்கும். தலைமைக்கு எதிராக பேசுபவர்களிடம் நட்பு வைத்துக் கொள்ளாதீர்கள். சகாக்களால் குழப்பங்கள் வரும்.
இந்த குருமாற்றம் வேலைச்சுமையைத் தந்தாலும் சின்ன சின்ன ஆசைகளையும் நிறைவேற்றும்.
பரிகாரம்:
கும்பகோணம்-நீடாமங்கலம் இடையிலுள்ள திருஅவளிவநல்லூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீசாட்சி நாதர் உடனுறை ஸ்ரீசௌந்தர நாயகி அம்மனையும் திங்கட் கிழமையில் சென்று வணங்குங்கள். மணமுறிவுப் பெற்றவர்களுக்கு உதவுங்கள்.