வியாழன், 9 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 26 ஜூலை 2016 (15:11 IST)

குரு பெயர்ச்சி ராசிப் பலன்கள் 2016 - 17 (சிம்மம்)

எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களே! இதுவரை உங்கள் ராசிக்குள் ஜென்ம குருவாக அமர்ந்துக் கொண்டு வாழ்க்கையில் எந்த விதமான சுகங்களையும் முழுமையாக அனுபவிக்க முடியாமல் எப்போதுமே சோகக்கடலில் மூழ்கடித்தாரே! காரண காரியமே இல்லாமல் கோபப்பட்டு பிரச்னைகளில் சிக்க வைத்து வேடிக்கை பார்த்தாரே! எதையும் ஆர, அமர யோசிக்க விடாமல் ஒரு வித அச்சத்தையும், படபடப்பையும் ஏற்படுத்தினாரே! எப்போதும் மருந்து, மாத்திரை கையுமாக சுற்றித் திரிய வைத்தாரே! குடும்பத்திலும் உங்களுக்கென்று தனி அங்கீகாரம் இல்லாமல் செய்தாரே! எவ்வளவு உழைத்தாலும் நல்ல பெயர் இல்லையே என்று ஆதங்கப்பட்டு புலம்ப வைத்தாரே! இப்படி பலவகையிலும் இன்னல்களை மாறி மாறி தந்து மனதில் அமைதியே இல்லாமல் நிலைக்குலையச் செய்த குருபகவான் இப்போது 02.8.2016 முதல் 1.09.2017 வரை உங்கள் ராசியை விட்டு விலகி தன வீடான 2-ம் வீட்டில் அமர்வதால் முடங்கிக் கிடந்த நீங்கள் இனி புத்துயிர் பெறுவீர்கள்.
 
தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தையெல்லாம் திருப்பித் தருவீர்கள். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் இனி குடும்பத்திலும் சந்தோஷம் குடிக்கொள்ளும். கல்வியாளர்கள், ஆன்மிக அறிஞர்களின் நட்புக் கிடைக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும்.
 
சோர்வு, சலிப்பு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். இருள் சூழ்ந்த உங்கள் முகம் இனி பிரகாசிக்கும். வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். மழலை பாக்யம் கிடைக்கும். உங்களை கிள்ளுக் கீரையாக நினைத்தவர்கள் மத்தியில் விஸ்வரூபம் எடுப்பீர்கள். நீங்கள் சொல்லாததையும் சொன்னதாக நினைத்துக் கொண்டு மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த உறவினர்கள் வலிய வந்துப் பேசத் தொடங்குவார்கள். மருந்து, மாத்திரையிலிருந்து விடுபடுவீர்கள். நோய் குணமாகும். உடல் நலம் சீராகும்.
 
சபைகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். தங்க ஆபரணம் வாங்குவீர்கள். இழுபறியாக இருந்து வந்த வேலைகளெல்லாம் முழுமையாக முடிவடையும். கோபம் குறையும். கனவுத் தொல்லையால் தூக்கமில்லாமல் தவித்தீர்களே! இனி ஆழ்ந்த உறக்கம் வரும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களெல்லாம் வலிய வந்து மன்னிப்புக் கேட்பார்கள். ஷேர் மூலமாக பணம் வரும். அரசாங்க பதவி சிலருக்கு தேடி வரும். புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
 
குரு தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டைப் பார்ப்பதால் மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. சொந்த ஊர் பொதுக் காரியங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். தோல்விமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், லேப்-டாப் போன்ற மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். அதிக சம்பளத்துடன் அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும்.
 
குருபகவான் தனது 7-ம் பார்வையால் உங்களின் 8-ம் வீட்டை பார்ப்பதால் திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் அனுசரணையாக நடந்துக் கொள்ளுங்கள். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வேற்றுமதம், மாற்றுமொழியினரால் நன்மை உண்டாகும். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். சொந்த-பந்தங்களின் அன்புத்தொல்லைகள் வரக்கூடும்.
 
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 10-ம் வீட்டை பார்ப்பதால் வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். வேலைச்சுமை குறையும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். சொந்தமாக சிலர் தொழில் தொடங்குவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். தந்தையாரின் ஆரோக்யம் சீராகும்.
 
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
02.8.2016 முதல் 19.9.2016 வரை உங்கள் ராசியாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் குரு பயணிப்பதால் உங்களின் ஆளுமைத் திறன், நிர்வாகத் திறமை அதிகரிக்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். பெரிய பொறுப்புகள் தேடி வரும். உறவினர்கள் மதிப்பார்கள். அரசாங்க கெடுபிடிகள் விலகும். அரசால் ஆதாயம் உண்டு. வீடு மனை வாங்குவீர்கள். நோய் விலகும்.
 
20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை உங்கள் விரையஸ்தானாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் அடிக்கடி பதட்டப்படுவீர்கள். முன்கோபத்தால் ஆரோக்யம் குறையும். தூக்கம் கெடும். அனாவசியமாக அடுத்தவர்களை சந்தேகப்பட வேண்டாம். தவிர்க்கமுடியாத செலவுகளும், தர்ம சங்கடமான சூழ்நிலையும் அதிகரிக்கும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்யாதீர்கள். ஒரே நாள் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
 
25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை உங்களின் யோகாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் குருபகவான் செல்வதால் திடீர் யோகம் உண்டாகும். வசதி, வாய்ப்புகள் கூடும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளை பாக்யம் கிடைக்கும். புதிதாக சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள்.
 
17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 3-ம் இடத்தில் குரு மறைவதால் புதிய முயற்சிகள் தாமதமாகி முடியும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட வேண்டாம். இளைய சகோதர வகையில் மனவருத்தம் வரும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள்.
 
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
 
22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் அநாவசியமாக யாருக்காகவும்« எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். ருசிக்காக சாப்பிடாமல் பசிக்காக சாப்பிடுவது நல்லது. உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். திடீரென்று அறிமுகமாகுபவர்களால் ஆதாயமடைவீர்கள். சிறுசிறு நெருப்புக் காயங்கள் ஏற்படக்கூடும்.
 
வியாபாரத்தில் இனி பழைய தவறுகள் நிகழாத வண்ணம் பார்த்துக் கொள்வீர்கள். தொழிலில் ஆர்வம் பிறக்கும். இரட்டிப்பு லாபம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். மாறி வரும் சந்தை ரகசியங்களை தெரிந்துக் கொள்வீர்கள். மக்களின் ரசனையைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப புதிய சரக்குகள் கொள்முதல் செய்து லாபம் ஈட்டுவீர்கள். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள்.
 
ஏமாற்றிக் கொண்டிருக்கும் வேலையாட்களை நீங்கி விட்டு கல்வித் தகுதியில் சிறந்த, அனுபவமிக்க, பொறுப்புணர்வு வாய்ந்த வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். சந்தையில் மதிக்கப்படுவீர்கள். துரித உணவகம், ஆட்டோ மொபைல், கிப்ட் ஷாப், மருந்து, ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். விலகிச் சென்ற பழைய பங்குதாரர் மீண்டும் வந்திணைவார். கடையை உங்கள் ரசனைக் கேற்ப அழகுப்படுத்தி, விரிவுப்படுத்துவீர்கள். சிலர் புது கிளைகள் தொடங்குவீர்கள்.
 
உத்யோகத்தில் உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சவாலான காரியங்களையும் சாராணமாக செய்து முடிப்பீர்கள். சில சிறப்பு பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார்கள். தொந்தரவு தந்த அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். சம்பளம் உயரும். புது பொறுப்புகளும், சலுகைகளும் தேடி வரும். உங்கள் அலுவலகம் நவீனமாகும். அலுவலகத்தில் உங்கள் புகழ் பரவும். வழக்கில் வெற்றி பெற்று பெரிய பதவியில் அமர்வீர்கள்.
 
கன்னிப் பெண்களே! நீங்கள் நினைத்தப்படி எல்லாம் நடக்கும். குடும்பத்தில் உள்ளவர்களில் ஒருசிலர் உங்களுடைய காதலைப் புரிந்துக் கொள்வார்கள். கல்யாணம் கூடி வரும். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். வேலைக் கிடைக்கும். உங்களுக்கிருந்து வந்த மாதவிடாய்க் கோளாறு, வயிற்று வலி, ஹார்மோன் பிரச்னைகள் தீரும்.
 
மாணவ-மாணவிகளே! சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். கடினமான பாடங்களில் கூட அதிக மதிப்பெண் பெறுவீர்கள். வகுப்பறையில் ஆசிரியர் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். கூடாப்பழக்கமுள்ளவர்களின் நட்பிலிருந்து விடுபடுவீர்கள்.
 
கலைத்துறையினரே! சின்ன சின்ன வாய்ப்புகளை கடந்து இப்போது பெரிய வாய்ப்புகளும் வரும். பிரபல கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள். வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள்.
 
அரசியல்வாதிகளே! உங்களுடைய ராஜ தந்திரத்தால் எதிரிகளை வீழ்த்துவீர்கள். தொகுதி மக்களிடையே செல்வாக்கு உயரும். இளைஞர்களின் ஆதரவுப் பெருகும். அதிகாரப் பதவி தேடி வரும்.
 
இந்த குருமாற்றம் தொட்டதெல்லாம் துலங்க வைப்பதுடன், எதிலும் முதல் மரியாதையைப் பெற்றுத் தரும்.
 
பரிகாரம்:
 
சூரியனார் கோவிலுக்கு அருகிலுள்ள கஞ்சனூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீநடராஜப் பெருமானை வெள்ளிக் கிழமையில் சென்று தரிசியுங்கள். கட்டிடத் தொழிலாளிக்கு உதவுங்கள்.