பந்த, பாசத்திற்கு கட்டுப்பட்டவர்களே! இதுவரை உங்களின் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு உங்களின் புது முயற்சிகளை முடக்கி வைத்ததுடன், எந்த ஒரு விஷயத்திலும் ஆர்வமின்மையையும், பிடிப்பற்றப்போக்கையும் ஏற்படுத்தி வந்த குருபகவான் இப்போது 02.8.2016 முதல் 1.09.2017 வரை 4-ம் வீட்டில் அமர்வதால் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப் பூர்வமாகவும், அனுபவப்பூர்வமாக அணுகுவது நல்லது. சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து செயல்படும் சாமர்த்தியத்தை கற்றுக் கொள்ளுங்கள்.
உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை தெரிந்துக் கொள்வதில் குழப்பம் வரும். எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் துரத்தும். சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது நினைத்தாலும் முடியாமல் போகும். அடுத்தடுத்த வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். சிலர் பூர்வீகத்தை விட்டு வேறு ஊருக்கு மாற வேண்டியது வரும். இடப்பெயர்ச்சி உண்டு. தாயாருக்கு நெஞ்சு வலி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வரக்கூடும்.
அவர் ஏதோ கோபத்தில் உங்களை சொல்லியிருந்தால் அதையெல்லாம் பொருட்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். இலவசமாக சில கூடாப்பழக்க வழக்கங்கள் உங்களைத் தொற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. எனவே உங்களுடைய தனித்தன்மையை இழந்து விடாதீர்கள். குடும்பத்தில் பனிப்போர், ஈகோப் பிரச்னையால் போட்டா, போட்டிகள் அதிகரிக்கும். நிம்மதி குறையும். உத்யோகத்தின் பொருட்டோ அல்லது வீண் சந்தேகம், சச்சரவுகளால் கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் ஏற்படக்கூடும். மனைவி உங்களுடைய குற்றம், குறைகளை சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
அரசாங்க அப்ரூவல் வாங்காமல் வீடு கட்டத் தொடங்க வேண்டாம். வெளியூரிலோ, நகர எல்லைப் பகுதியிலோ சொத்து வாங்கியிருந்தால் அவ்வப்போது சென்று கண்காணித்து வருவது நல்லது. சிலர் உங்களுடைய இடத்தை ஆக்கிரமிக்கவும் வாய்ப்பிருக்கிறது. எனவே பட்டா, வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து வாங்குவது நல்லது. விமர்சனங்களை கண்டு வெம்ப வேண்டாம். ஏறிக் கொண்டேப் போகும் கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்.
புதிது புதிதாக வரும் விளம்பரங்களைக் கண்டு ஏமாந்து சோப்பு, ஷாம்பு, வாசனை திரவியங்களையெல்லாம் மாற்றிக் கொண்டிருக்காதீர்கள். அலர்ஜி, இன்பெக்ஷன் வரக்கூடும். உடல் அசதி, சோர்வு, கை, கால் வலி வந்து விலகும். எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்வது நல்லது. அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். வாகனத்தின் ஓட்டுநர் உரிமத்தை சரியான நேரத்தில் புதுப்பிக்க தவறாதீர்கள்.
போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை இயக்க வேண்டாம். சின்ன சின்ன அபராதத் தொகை செலுத்த வேண்டி வரும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வாழ்க்கையில் வெற்றி பெறுவோமோ, மாட்டோமோ இப்படியே காலம் முடிந்துவிடுமோ என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். ஏதோ ஒன்றை இழந்ததைப் போல அவ்வப்போது இருப்பீர்கள்.
கடந்த காலத்தில் ஏற்பட்ட நம்பிக்கை துரேகமான செயல்களை நினைத்து வருந்துவீர்கள். உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். மற்றவர்களுக்காக சாட்சி கையெழுத்திட வேண்டாம். தூங்கும் இடத்தையும் அடிக்கடி மாற்ற வேண்டாம். பணப்பட்டுவோட விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். முடிந்த வரை சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும்.
குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டை பார்ப்பதால் அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் உதவிகள் உண்டு. வெளியூர் பயணங்களால் பயனடைவீர்கள். உங்களின் உத்யோகஸ்தமான 10-ம் வீட்டை குரு தனது 7-ம் பார்வையால் பார்ப்பதால் புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். உத்யோகத்தில் அமைதி உண்டாகும். புது பதவி, பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டை குரு பார்ப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேகம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் தைரிய ஸ்தானாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குருபகவான் பயணிப்பதால் தைரியம் பிறக்கும். தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள். இளைய சகோதர வகையில் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாகும்.
20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை உங்கள் தனாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் சாமர்த்தியமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு மகிழ்வீர்கள். திருமணம் கூடி வரும். குழந்தை பாக்யம் கிட்டும்.
உங்கள் சஷ்டம-லாபாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் உடன்பிறந்தவர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். சொத்து வாங்குவதாக இருந்தால் தாய்பத்திரத்தை சரி பார்த்து வாங்குவது நல்லது. தோல்விமனப்பான்மையால் மனஇறுக்கம் உண்டாகும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். கௌரவக் குறைவான சம்பவங்கள் அவ்வப்போது நிகழக்கூடும்.
17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 5-ம் வீட்டில் குரு அமர்வதால் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பூர்வீக சொத்தில் உங்கள் ரசனைக் கேற்ப மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் நீண்ட காலமாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். உறவினர்கள் மதிப்பார்கள். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடன் தொகையை குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பைசல் செய்வீர்கள்.
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடிவடையும். நெருக்கடிகளை சமாளிக்கும் ஆற்றலும் உங்களுக்கு கிடைக்கும். தன்னம்பிக்கை தரக்கூடிய நூல்களை படித்துத் தெளிவீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். சிலர் வாஸ்து படி வீட்டை மாற்றி, விரிவுப்படுத்துவீர்கள். அவ்வப்போது தொண்டைப் புகைச்சல், வயிற்று உப்புசம், முதுகுத் தண்டில் வலி வந்துப் போகும். நல்லவர்களுடன் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள்.
வியாபாரத்தில் சின்ன சின்ன நஷ்டங்கள் வந்துப் போகும். விளம்பர யுக்திகளை கையாளுங்கள். தொழில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வேலையாட்களுக்கு அதிக சம்பளம் கொடுத்தும், சலுகைகள் கொடுத்தும் எந்த பிரயோஜனமும் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள்.
கூட்டுத் தொழிலை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. வேறு வழியில்லாமல் கூட்டுத் தொழில் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் முறைப்படி ஒப்பந்தங்களை பதிவு செய்வது நல்லது. எதிர்பார்த்த ஆடர் தாமதமாக வரும். வாடிக்கையாளர்களுடன் கனிவாகப் பழகுங்கள். கட்டிட உதிரி பாகங்கள், கமிஷன், கண்சல்டன்சி, காய்கறி வகைகளால் லாபமடைவீர்கள். கடையை வேறிடத்திற்கு மாற்ற வேண்டிய நிர்பந்தத்திற்குள்ளாவீர்கள்.
உத்யோகத்தில் மேலதிகாரி உங்களுக்கு சாதகமாக இருக்கிறாரா, பாதகமாக இருக்கிறாரா என்று உணர்ந்துக் கொள்ள முடியாமல் போகும். யார் எப்படி இருந்தாலும் நம்முடைய கடமையை சரிவர செய்துவிடுவோம் என்ற மனப்பான்மையில் நீங்கள் கடினமாக உழைப்பீர்கள். நேர்மூத்த அதிகாரியை விட, மேல்மட்ட அதிகாரி ஆதரவாக இருப்பார். வேலைச்சுமை இருக்கும். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்துப் போகும். அடிக்கடி விடுப்பில் செல்ல வேண்டாம். விரும்பத்தகாத இடமாற்றங்களும் வரும்.
கன்னிப் பெண்களே! மனசை அலைபாயவிடாமல் ஒருநிலை படுத்துங்கள். திடீரென்று அறிமுகமாகும் நண்பர்களை நம்பி பழைய நண்பர்களை விட்டுவிடாதீர்கள். ஃபேஸ் புக், டிவிட்டரை கவனமாக பயன்படுத்துங்கள். சிலர் உங்களுடைய பெயருக்கு கலங்கம் விளைவிக்க முயற்சிப்பார்கள். தாயாருடன் மோதல்கள் வரும். கல்யாணம் சற்று தாமதமாகி முடியும். பெற்றோரின் அரவணைப்பு அதிகரிக்கும்.
மாணவ-மாணவிகளே! படிப்பு மட்டுமல்லாமல் ஸ்போக்கன் இங்கிலீஷ் போன்ற மொழியறிவுத் திறனையும் நீங்கள் அதிகப்படுத்திக் கொள்வது நல்லது. அறிவியல் சம்பந்தமான இடங்களுக்குச் சென்று வருவது நல்லது. பள்ளி மாற வேண்டி இருக்கும். போராடி சில பாடங்களில் வெற்றி பெறுவீர்கள்.
கலைத்துறையினரே! வீண் வதந்திகளாலும், கிசுகிசுத் தொந்தரவுகளாலும் உங்கள் புகழ் குறையும். கிடைக்கின்ற வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும்.
அரசியல்வாதிகளே! வழக்கால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சுற்றியிருப்பவர்களில் யாரை நம்புவது, யாரை தவிர்ப்பது என்பது புரியாமல் தவிப்பீர்கள். சகாக்கள் சிலர் உங்கள் மீது அதிருப்தியடைவார்கள்.
இந்த குருப்பெயர்ச்சி வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுத் தரும்.
பரிகாரம்:
திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாளை ஏகாதசி திதி நாளில் சென்று வணங்குங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள்.