பணம், காசு வந்தும் மாறாதவர்களே! கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு மறைவு ஸ்தானமான 8-ம் வீட்டில் அமர்ந்து வீண் அலைச்சல்களையும், தாழ்வுமனப்பான்மையையும் கொடுத்து வந்த குருபகவான் இப்போது 02.8.2016 முதல் 1.09.2017 வரை உங்களின் பாக்ய ஸ்தானமான 9-ம் வீட்டில் அமர்வதால் இனி எதிலும் முதலிடம் பிடிப்பீர்கள். 'ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் வீட்டில் குரு' என்ற பழமொழிக்கேற்ப உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவார்.
பிரச்சனைகளை நேருக்குநேராக எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். தீர்வு தேடி வெளியில் அலையாமல் உங்களுக்குள்ளேயே உங்கள் உள்மனசுக்குள்ளேயே விடையிருப்பதை இனி உணருவீர்கள். உங்கள் மீது உங்களுக்கே இருந்து வந்த அவநம்பிக்கைகள் நீங்கும். தன்னம்பிக்கை உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள்.
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வசதி வாய்ப்புகள் இருந்து என்ன பிரயோஜனம், இதையெல்லாம் அனுபவிக்க ஒரு பிள்ளையில்லையே என்று ஏங்கித் தவித்த தம்பதியருக்கு இப்போது குழந்தை பாக்யம் கிட்டும். உங்கள் கல்வித் தகுதிக்கேற்ற நல்ல வேலையில்லையே என்று புலம்பித் தவித்தவர்களுக்கு நல்ல உத்யோகம் அமையும். ஊரே மதிக்கும்படி பொது காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். புறநகர் பகுதியில் அரை கிரவுண்டாவது இடம் வாங்க வேண்டுமென்று முயற்சி செய்வீர்கள்.
இளைய சகோதர வகையில் பண உதவி, பொருளுதவி கிட்டும். கடந்த கால படிப்பினைகளை கருத்தில் கொண்டு யதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். உங்களுடைய அனுபவ அறிவுக் கூடும். வீட்டில் வர்ணம் பூசுவது, கூடுதல் அறைக் கட்டுவது, தளம் அமைப்பது போன்ற முயற்சிகள் பலிதமாகும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.
சரியான தூக்கமில்லாமல் ஏதோ ஒன்று அழுத்தியதுப் போல் தவித்தீர்களே! இனி ஆழ்ந்த உறக்கம் வரும். பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். உறவினர், நண்பர்கள் உங்களை மதிக்கத் தொடங்குவார்கள். சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள்.
குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்களின் ராசியைப் பார்ப்பதால் அழகு, ஆரோக்யம் கூடும். மாற்றுமதத்தை சேர்ந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். ஷேர் லாபம் தரும். புது பதவி, பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வெளிவட்டாரத்தில் பெருமையாகப் பேசப்படுவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.
குரு பகவான் ஏழாம் பார்வையால் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை பார்ப்பதால் தைரியம் பிறக்கும். சாணக்கியத்தனமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழல் உருவாகும். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதித் தொகை தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். வழக்கு சாதகமாக திரும்பும்.
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 5-ம் வீட்டை பார்ப்பதால் மாறுபட்ட யோசனைகள் மனதில் உதயமாகும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். பூர்வீக சொத்தால் வருமானம் வரும். பழைய கடன் பிரச்னை தீரும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். சமையலறையை நவீனமாக்குவீர்கள்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்களின் அட்டமாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குருபகவான் பயணிப்பதால் அரசுக்கு முரணாண விவகாரங்களில் ஈடுபட வேண்டாம். திடீர் பயணங்களும், செலவுகளும் அதிகரிக்கும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகமாகும். நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதம் ஏற்படும்.
20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை உங்கள் சப்தமாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் மதிப்பு, மரியாதைக் கூடும். உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். மொழியறிவுத் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். மனைவி உங்களுடைய முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பார். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வீடு, வாகன வசதிப் பெருகும். உங்கள் ரசனைக் கேற்ற வீட்டிற்கு சிலர் குடிப்புகுவீர்கள்.
உங்கள் சுக-லாபாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்குள்ளேயே ஒருசில உறுதி மொழிகளை நீங்கள் எடுத்துக் கொள்வீர்கள். மூத்த சகோதரர் உதவுவார். சிலர் புதிதாக தொழில் தொடங்குவீர்கள். தாயாருக்கு இருந்த மருத்துவச் செலவுகள் நீங்கும். அவருடனான மோதல்களும் விலகும். பழைய காலி மனையை எதிர்பார்த்த விலைக்கு விற்று விட்டு நகரத்தில் புது வீடு வாங்குவீர்கள்.
17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 10-ம் வீட்டில் குரு அமர்வதால் வேலைச்சுமை அதிகமாகும். உத்யோகத்தில் இடமாற்றம் வரும். யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சின்ன சின்ன அவமானம் ஏற்படக்கூடும். வி.ஐ.பிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள். வீண் பழிச் சொல் வரக்கூடும்.
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் உங்கள் மனம் எதையே தேடிக் கொண்டிருக்கும். வீண் சந்தேகத்தையும், ஈகோவையும் தவிர்க்கப்பாருங்கள். அடிக்கடி ஒரு தேக்க நிலை, மந்த நிலை உண்டாகும். நாம் செல்லுகின்ற பாதை சரிதானா, நாம் சரியாக இருக்கிறோமா, இல்லையா அல்லது நம்மைப் பற்றிய ஏதேனும் விமர்சனம் வருமா என்றெல்லாம் அவ்வப்போது கவலைப்படுவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் சென்று மாறுபட்ட சூழ்நிலையில் தங்கி வந்தால் மனஇறுக்கங்கள் குறையும். பசியின்மை, வயிற்று உபாதைகள் வந்துப் போகும்.
வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை மாறும். புது முதலீடுகள் செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். சந்தையில் உங்கள் நிறுவனத்தின் மதிப்புக் கூடும். அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள்.
வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டிலிருப்பவர்களின் உதவியால் சிலர் சில்லரை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்திற்கு மாறுவீர்கள். கடையை விரிவுப்படுத்தி, அழகுப்படுத்துவீர்கள். உணவு, ஃபைனான்ஸ், லெதர், ஆடை வடிவமைப்பு, பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயமடைவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்திணைவார். வர்த்தக சங்கத்தில் பதவி கிடைக்கும்.
உத்யோகத்தில் ஆர்வம் இல்லாமல் இருந்தீர்களே! இனி விரும்பி பணி புரிவீர்கள். உங்களின் நிர்வாகத் திறமைக் கூடும். பாரபட்சமாக நடந்துக் கொண்ட அதிகாரி இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பார். கூடுதல் சலுகைகளும் கிடைக்கும். இடமாற்றம் சாதகமாக அமையும். சக ஊழியர்களும் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். மூத்த அதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். ரகசியப் பொறுப்புகளையும் ஒப்படைப்பார்கள். உத்யோகம் சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாக முடியும்.
கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். பிடிவாதப் போக்கை மாற்றிக் கொள்வீர்கள். போட்டித் தேர்வு, நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். வேலைக் கிடைக்கும். சிலர் அயல்நாடு செல்வீர்கள். கல்யாணம் கூடி வரும். கூடுதல் மொழி கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள். வேற்றுமதத்ததை சேர்ந்தவர்கள் தோழிகளாக அறிமுகமாவார்கள்.
மாணவ-மாணவிகளே! உற்சாகமாக காணப்படுவீர்கள். கல்வியிலும், கலைப் போட்டிகளிலும் வெற்றி பெறுவீர்கள். வகுப்பாசிரியர், சக மாணவர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். பெற்றோரின் கனவை நனவாக்குவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும்.
கலைத்துறையினரே! வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். திரையிடாமல் தடைப்பட்டிருந்த உங்களுடைய படைப்பு இப்போது வெளி வரும். ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.
அரசியல்வாதிகளே! ராஜதந்திரத்தால் முன்னேறுவீர்கள். எதிர்கட்சிக்காரர்களின் ஆதரவால் சில முக்கிய வேலைகளை முடிப்பீர்கள். தொகுதியில் நல்ல மதிப்பு கிடைக்கும். மேலிடம் உங்களிடம் சில ரகசியப் பொறுப்புகளை ஒப்படைக்கும்.
இந்த குரு மாற்றம் அதிரடி மாற்றத்தையும், திடீர் யோகத்தையும் அள்ளித் தரும்.
பரிகாரம்:
கும்பகோணம் அய்யாவாடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீபிரத்யங்கரா தேவியை அமாவாசை நாளில் சென்று வணங்குங்கள். தொழு நோயாளிகளுக்கு உதவுங்கள்.