1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 26 ஜூலை 2016 (16:40 IST)

குரு பெயர்ச்சி ராசிப் பலன்கள் 2016 - 17 (கடகம்)

நேர்மையை நேசிப்பவர்களே! இதுவரை உங்களுடைய ராசிக்கு தன வீடான 2-வது வீட்டில் அமர்ந்துக் கொண்டு உங்களுக்கு பணவரவையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தந்த குருபகவான் இப்போது 3-ம் வீட்டிற்கு அடியெடுத்து வைக்கிறார். 02.8.2016 முதல் 1.09.2017 வரை உங்களின் சஷ்டம-பாக்ய ஸ்தானாதிபதியான குருபகவான் மூன்றாம் வீட்டில் மறைவதால் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு வேலைகளையும் முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று, முறை முயன்று போராடி முடிக்க வேண்டி வரும்.
 
அந்தஸ்து புகழுக்காக கைக்காசை கரைத்துக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் அவ்வப்போது அமைதியில்லாமல் போகும். கணவன்-மனைவிக்குள் சச்சரவுகள் வந்தாலும், அன்பும், அன்யோன்யமும் குறையாது. பணம் வாங்கித் தருவது, கல்யாண விஷயத்தில் குறுக்கே நிற்க வேண்டாம். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்காதீர்கள்.
 
வாயுக் கோளாறால் நெஞ்சு வலிக்கும். அச்சப்பட வேண்டாம். கொழுப்புச் சத்து அதிகமுள்ள பதார்த்தங்களை உணவில் சேர்த்துக் கொள்ளாதீர்கள். நடைபயிற்சி அவசியம். எதையோ இழந்ததைப் போல் ஒரு மனவாட்டத்துடன் காணப்படுவீர்கள். யாரேனும் உங்களைப் பற்றி விமர்சித்தால் அதைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள்.
 
"காய்த்த மரம் தான் கல்லடிப்படும் என்பதை மறந்து விடாதீர்கள்". அதேப் போல நெருங்கிய நண்பர்கள், உறவினர்களாக இருந்தாலும் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. அவர்களை நம்பி பெரிய முடிவுகளெல்லாம் எடுக்க வேண்டாம். உங்களுக்கு பல வருட காலமாக நல்ல நண்பர்களாக இருப்பவர்களை மற்றவர்களுக்கு இப்போது அறிமுகப்படுத்தி வைக்க வேண்டாம். எதிர்வீட்டுக்காரர்களை அனுசரித்துப் போவது நல்லது. சின்ன சின்ன பிரச்னைகளையெல்லாம் பெரிதாக்கிக் கொள்ளாதீர்கள். அடுத்தடுத்து தோல்விகளையும், ஏமாற்றங்களையும் சந்திப்பாக நீங்கள் நினைத்துக் கொள்வீர்கள்.
 
குரு தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். ஆடை, ஆபரணம் சேரும். முக்கியஸ்தர்களின் நட்பு கிடைக்கும். வாகனப் பழுதை சீர் செய்வீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வேலை அமையும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள்.
 
குருபகவான் தனது 7-ம் பார்வையால் உங்களின் 9-ம் வீட்டை பார்ப்பதால் பிதுர்வழி சொத்து கைக்கு வரும். தந்தையாரின் ஆரோக்யம் சீராகும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். தந்தைவழி உறவினர்களால் உதவிகள் உண்டு. சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். பழைய கடனை தீர்க்க புது வழி யோசிப்பீர்கள்.
 
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் லாப வீட்டை பார்ப்பதால் உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வீட்டில் தள்ளிப் போன சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். குழந்தை பாக்யம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் பிரார்த்தனைகளை முடிக்க நேரம் கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
 
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்கள் தனாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குரு பயணிப்பதால் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். திடீர் பணவரவு உண்டு. அரசு காரியங்கள் உடனே முடியும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வங்கி உதவும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். கண் வலி குறையும்.
 
20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை உங்கள் ராசிநாதனான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் பிரபலமாவீர்கள். வருமானம் உயரும். அழகு, ஆரோக்யம் கூடும். சொந்தம் பந்தங்களின் வருகையால் வீடு களை கட்டும். குலதெய்வப் பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
 
உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் நினைத்த காரியங்களை முடிப்பீர்கள். உங்களின் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். சகோதர சகோதரிகளுக்காக எவ்வளவு செய்தும் நம்மை புரிந்து கொள்ளவில்லையே, என்று அவ்வப்போது வருந்தினீர்களே! அந்த நிலை மாறும். பாசமாக நடந்து கொள்வார்கள். சிறுக சிறுக சேமித்து வைத்ததில் புறநகர் பகுதியிலாவது வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள்.
 
17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 4-ம் வீட்டில் குரு நுழைவதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். அவருடன் கசப்புணர்வுகள் வந்து விலகும். வசதி, செல்வாக்கை கண்டு மயங்கி தவறானவர்களுடன் சென்றுவிட வேண்டாம். வாகனத்தில் செல்லும் போது மறவாமல் தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். சொத்து வாங்கும் போது பட்டா, வில்லங்கம் சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து வாங்குவது நல்லது. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். யாரும் உங்களை சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லையே என வருத்தப்படுவீர்கள்.
 
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
 
22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். உங்கள் குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். முன்கோபத்தை விட்டுவிடுவது நல்லது. உதவி செய்கிறேன் என்று சொல்லியிருந்தவர்கள் உங்களுக்கு உதவாமல் போகக்கூடும். எனவே மாற்றுவழியை யோசிப்பது நல்லது. பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். என்றாலும் வளர்ச்சி தடைப்படாது.
 
வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலைவிட வேண்டாம். தொடர்ந்து லாபம் பெற முடியவில்லையே என்ற ஒரு கவலைகளும் இருக்கும். ஒரு வாரம் நன்றாக இருந்தால் மறுவாரம் வருமானம் இல்லாமல் போகிறதே என்று நினைத்து கலங்குவீர்கள். வியாபாரத்தை நம்பி ஒரு லோன் வாங்கலாம் என்று நினைத்தால் கூட முடியாமல் போகிறதே நிலையற்ற வருமானமாகி விட்டது என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். பேராசைப்பட்டு நட்டத்தை சந்திக்காதீர்கள்.
 
வேலையாட்களுக்கு எவ்வளவு உதவினாலும் நன்றி மறந்த நிலையில் நடந்துக் கொள்வார்கள். அதை நினைத்து வருத்தப்படுவீர்கள். சிலர் கடன் வாங்கி கடையை விரிவுப்படுத்தி, அழகுப்படுத்துவீர்கள். கூட்டுத் தொழிலில் சிலர் நம்பிக்கையான பங்குதாரரை விட்டு பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். திடீரென்று அறிமுகமாகி கொஞ்ச காலம் பழகியவர்களை பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டாம். ஸ்டேஷனரி, போடிங், லாஜிங், பெட்ரோ-கெமிக்கல், டிராவல்ஸ் வகைகளால் ஆதாயமடைவீர்கள்.
 
உத்யோகத்தில் பணிகளை கொஞ்சம் போராடி முடிக்க வேண்டி வரும். திறமை இருந்தும், கடினமாக உழைத்தும் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டேயிருப்பீர்கள். அதிகாரிகளின் ஆதரவுக் கூடும். சில நேரங்களில் அதிகாரிகள் கூடுதலாக உங்களுக்கு வேலைகளை தருவார்கள். சலித்துக் கொள்ளாமல் அந்த வேலைகளை முடித்துக் கொடுப்பது நல்லது. சக ஊழியர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். அடிக்கடி இடமாற்றம் வரும்.
 
கன்னிப்பெண்களே! எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிலர் தடைப்பட்ட உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு கிட்டும். காதல் கசக்கும். போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு அண்டை மாநிலத்தில் வேலை அமையும்.
 
மாணவ-மாணவிகளே! சின்ன சின்ன தவறுகளையும் திருத்திக் கொள்ளுங்கள். நட்பு வட்டம் விரிவடையும். வகுப்பறையில் ஆசிரியரிடம் தயங்காமல் சந்தேகங்களை கேளுங்கள். விளையாட்டை தவிர்த்து படிப்பில் ஆர்வம் காட்டுங்கள். கணக்கு, வேதியில் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள்.
 
கலைத்துறையினரே! மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். சுய விளம்பரத்தை விட்டு விட்டு யதார்த்தமான படைப்புகளை தரப்பாருங்கள்.
 
அரசியல்வாதிகளே! தலைமையை மீறி எந்த முயற்சியிலும் இறங்க வேண்டாம். தொகுதி மக்களை மறக்காதீர்கள். சபை நாகரிகம் அறிந்து பேசுங்கள்.
 
இந்த குரு மாற்றம் முயற்சிகளை முடங்கினாலும் மாறுபட்ட அணுகுமுறையால் முன்னேற வைக்கும்.
 
பரிகாரம்:
 
சென்னை திருவொற்றியூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவடிவுடையம்மனை பஞ்சமி திதி நாளில் சென்று வணங்குங்கள். சாலை துப்பரவுப் பணியாளர்களுக்கு உதவுங்கள்.