1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 26 ஜூலை 2016 (15:45 IST)

குரு பெயர்ச்சி ராசிப் பலன்கள் 2016 - 17 (கன்னி)

பழைய அனுபவங்களை பதிவு செய்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 12-வது வீட்டில் அமர்ந்து கொண்டு பணப்பற்றாக்குறையையும், வீண் வதந்திகளையும், மனஇறுக்கத்தையும் ஏற்படுத்தி உங்களுடைய நிம்மதியை சீர்குலைத்த குருபகவான் இப்பொழுது 02.08.2016 முதல் 01.09.2017 வரை உங்கள் ராசிக்குள் அமர்கிறார். அடடா.. ஜென்மகுருவாச்சே! என்ன செய்ய போகிறோமோ என்று அஞ்சாதீர்கள்.
 
ஆனால் ஜென்ம குரு என்பதால் பொறுப்புகள் அதிகரிக்கத்தான் செய்யும். வீரியத்தை விட்டு விட்டு காரியத்தில் முழு கவனம் செலுத்தப்பாருங்கள். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் பார்க்க வேண்டி வரும். குடும்பத்தில் வரும் சின்ன சின்ன பிரச்னைகளைக் கூட பெரிதாக்கிக் கொண்டிருக்காதீர்கள். அனுசரித்துப் போவது நல்லது. எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாத படி செலவுகள் துரத்தும். வாழ்க்கை மீது ஒரு தேடல் இருந்துக் கொண்டேயிருக்கும்.
 
‘‘ஜென்மத்தில் ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும்’’ என்ற பாடல்படி கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், சச்சரவுகள் வரும். பிரிவு ஏற்படக்கூடும். முடிந்த வரை சகிப்புத்தன்மையுடனும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் நடந்துக் கொண்டால் நல்லது. மனைவி ஏதேனும் குறைக் கூறினாலும் அதை அப்படியே மறந்து விடுவது நல்லது. அவருடன் எதிர்வாதம் செய்துக் கொண்டிருக்க வேண்டாம். பழசை சொல்லிக் காட்டாதீர்கள்.
 
வங்கிக் கணக்கில் போதிய நிதி இருக்கிறதா என அதிகாரியை ஆலோசித்துவிட்டு பிறகு காசோலை தருவது நல்லது. அவசரப்பட்டு வாக்குறுதிகளை தந்துவிட்டு அதை நிறைவேற்ற முடியாமல் திணற வேண்டாம். சிலர் உங்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வார்கள். உங்களது பெயருக்கும், புகழுக்கும் கலங்கம் விளைவிக்க சிலர் முயற்சி செய்வார்கள். நெருங்கிப் பழகிய ஒரு சிலர் திடீரென்று பார்த்தும் பார்க்காமலும் செல்வார்கள். அதைக் கண்டு பதைபதைக்காதீர்கள்.
 
பண விஷயத்தில் கேரண்டர் கொடுக்க வேண்டாம். ராசியிலேயே குரு அமர்வதால் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். சாதாரணமாக நெஞ்சு வலிக்கும். ஹார்ட் அட்டாக் எதுவும் இருக்குமோ என்றெல்லாம் அஞ்ச வேண்டாம். தேவைப்பட்டால் மருத்துவ பரிசோதனைக்கு செல்லுங்கள். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். எளிதில் செரிமானமாகும் உணவுகளை உட்கொள்ளுங்கள். சுத்திகரிக்கப்பட்ட குடி நீரை அருந்துங்கள்.
 
பச்சை கீரை, காய், கனிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். துரித உணவு, கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள், லாகிரி வஸ்துகளையெல்லாம் தவிர்ப்பது நல்லது. பாரம்பரிய உணவுகளை உட்கொள்ளுங்கள். காய்ச்சல், செரிமானக் கோளாறு, மஞ்சள் காமாலை, வயிற்று உபாதை, சிறுநீர் பாதையில் அழற்சி, வாய்ப் புண், திடீர் தலைச்சுற்றல், வாந்தியெல்லாம் வரக்கூடும். டி.வி.யில் புதிது புதிதாக வரும் விளம்பரங்களை கண்டு சந்தையில் அறிமுகப்படுத்தும் ஷாம்பு, சோம்பு, வாசனை திரவியங்களையெல்லாம் மாற்றிக் கொண்டிருக்க வேண்டாம். ஸ்கின் அலர்ஜி, இன்பெக்ஷன் வரக்கூடும்.
 
இரத்தக் கொதிப்பு அதிகமாகும். சாப்பாட்டில் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள். நேரம் தவறி சாப்பிட வேண்டாம். அல்சர் வர வாய்ப்பிருக்கிறது. விதிகளை மீறி யாருக்கும் உதவ வேண்டாம். முன்கோபத்தை குறையுங்கள். ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் அடிக்கடி மன அழுத்தங்களும் வரக்கூடும். இ-மெயில் மற்றும் மொபைல் ஃபோனில் வரும் பரிசுத் தொகை அறிவிப்புகளை பார்த்து ஏமாந்துவிடாதீர்கள்.
 
உறவினர்களில் ஒரு சிலர் கூட நீங்கள் மாறி விட்டதாக கூறுவார்கள். முன்பு போல அவர் இல்லை. இப்போதெல்லாம் கோபப்படுகிறார் என்றெல்லாம் குற்றப்பத்திரிக்கை வாசிப்பார்கள். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டேப் போகும். ஒற்றையாக இருந்து எவ்வளவு தான் போராடுவது, எத்தனைக் காலத்திற்கு தான் இப்படி கஷ்டப்படுவது என்ற ஒரு ஆதங்கமும் அவ்வப்போது வெளிப்படும். உங்களிடம் திறமை குறைந்து விட்டதாக நினைத்துக் கொள்வீர்கள். தோற்றுவிடுவோமோ என்ற ஒரு அவநம்பிக்கையும் வந்துப் போகும்.
 
குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்களின் 5-ம் வீட்டை பார்ப்பதால் முடிவுகளெடுப்பதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். மழலை பாக்யம் கிடைக்கும். மகளின் திருமணத்தை சீரும், சிறப்புமாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் புது வேலைக் கிடைக்கும். பூர்வீக சொத்து கைக்கு வரும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். நவீன ரக வாகனம் வாங்கவீர்கள்.
 
குரு பகவான் ஏழாம் பார்வையால் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டை பார்ப்பதால் நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். விலை உயர்ந்த தங்க நகைகள் வாங்குவீர்கள். ஜென்ம குருவால் கணவன்-மனைவிக்குள் சின்ன சின்ன கசப்புணர்வுகள் வந்தாலும் அன்புக் குறையாது. மனைவி உங்களுக்கு பக்கபலமாக இருப்பார். திருமணம் தள்ளிப் போனவர்களுக்குக் கூடி வரும். அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். சமுதாயத்தில் மதிக்கத்தகுந்த அளவிற்கு கௌரவப் பதவிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. வழக்கால் இருந்த நெருக்கடிகள் நீங்கும்.
 
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் பாக்ய வீடான 9-ம் வீட்டை பார்ப்பதால் அரைக்குறையாக நின்ற வேலைகளெல்லாம் முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். பாகப்பிரிவுனை, பிதுர்வழி சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் மரியாதைக் கூடும். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும்.
 
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்களின் விரையாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குருபகவான் பயணிப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். நல்ல காற்றோட்டம், குடி நீர் வசதியுள்ள உங்கள் ரசனைக் கேற்ற வீட்டிற்கு குடிப்புகுவீர்கள். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு உடல் உஷ்ணம், தோலில் நமைச்சல், முன்கோபம் வந்துச் செல்லும்.
 
20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை உங்கள் லாபாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் நினைத்தது முடியும். திடீர் பணவரவு உண்டு. ஷேர் லாபம் தரும். மூத்த சகோதர வகையில் ஆதரவுப் பெருகும். அடுத்தடுத்த விசேஷங்கள், உறவினர்கள் வருகையால் வீடு களை கட்டும். வீடு வாங்க, கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். சிலர் இருக்கும் வீட்டில் கூடுதல் அறை கட்டுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் காய்ச்சல், தொண்டைப் புகைச்சல், தலை வலி வந்துப் போகும். முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது.
 
உங்களின் திருதியாதிபதியும்-அட்டமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் அடுத்தடுத்த பயணங்களால் அலைச்சல் இருக்கும். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு மூச்சுச் பிடிப்பு, பசியின்மை, வயிற்று வலி வந்துப் போகும். அநாவசியமாக கோபப்பட்டு யாரிடமும் கெட்ட பெயர் எடுக்காதீர்கள். சொத்து வாங்குவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியடையும்.
 
17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 2-ம் வீட்டில் குரு அமர்வதால் ஆரோக்யம் சீராகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். உங்களைக் குற்றம், குறைக் கூறிக் கொண்டிருந்தவர்களின் மனசு மாறும். செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள்.
 
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
 
22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தாமல் விட்டு விட்டோமே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள்.
 
வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். காலையில் வியாபாரம் நன்றாக இருந்தால் மாலையில் சுமாராக இருக்கும். மாலையில் நன்றாக இருந்தால் காலையில் சுமாராக போகும். முக்கிய வேலைகள் இருக்கும் நாளில் வேலையாள் விடுப்பிலே செல்வார். அதனால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். தரமானப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். அனுபவமில்லாத தொழிலில் முதலீடு போட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். ஏற்றுமதி-இறக்குமதி, பதிப்பகம், ஸ்டேஷனரி, கண்சல்டன்சி வகைகளால் லாபமடைவீர்கள். யாருக்கும் முன் பணம் தர வேண்டாம். பங்குதாரர்களில் சிலர் தங்களது பங்கைக் கேட்டு தொந்தரவு தருவார்கள்.
 
உத்யோகத்தில் வளைந்துக் கொடுத்துப் போக கற்றுக் கொள்ளுங்கள். சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து அதற்கேற்ப உங்களுடைய கருத்துகளை மேலதிகாரிகளிடம் பதிவு செய்வது நல்லது. வெகுளித்தனமாகப் பேசி விமர்சனத்திற்குள்ளாவாதீர்கள். சிலர் தங்களை அறிவாளியாக காட்டிக் கொள்ள உங்களை மட்டம் தட்டி மேலிடத்தில் சொல்லி வைப்பார்கள். நீங்கள் செய்து முடித்த வேலைக்கு வேறு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள். சக ஊழியர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்காதீர்கள். அவ்வப்போது மறைமுக எதிர்ப்புகளையும், இடமாற்றங்களையும் சந்திக்க வேண்டி வரும். சிலர் அடிப்படை உரிமை வேண்டி நீதிமன்றம் செல்ல வேண்டி வரும்.
 
கன்னிப் பெண்களே! நண்பர்கள் விவகாரத்தில் கவனமாக இருங்கள். நண்பர்களிடம் உயர்கல்வி சம்பந்தமான விஷயங்களை விவாதிப்பதுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். கல்யாணம் தள்ளிப் போகும். போட்டித் தேர்வுகளில் சற்றே பின்னடைவு ஏற்படும். எந்த விஷயமாக இருந்தாலும் பெற்றோருடன் இல்லையென்றாலும் சகோதரங்களுடன் பகிர்ந்துக் கொள்வது நல்லது. சிலர் உங்களை நம்ப வைத்து மோசம் செய்வார்கள். உயர்கல்வியை போராடி முடிக்க வேண்டி வரும். மாதவிடாய்க் கோளாறு, உடலில் சத்துக் குறைபாடு வந்துச் செல்லும்.
 
மாணவ-மாணவிகளே! அலட்சியமாக கடைசி நேரத்தில் படித்துக் கொள்ளலாம் என்றிருக்க வேண்டாம். வகுப்பறையில் கடைசி வரிசையில் அமர வேண்டாம். கெட்ட பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்த்துவிடுங்கள். சூத்திரங்களையெல்லாம் எழுதிப் பார்ப்பது நல்லது. வேதியியல் பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். உங்களுடைய தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.
 
கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளை ரகசியமாக வையுங்கள். எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். சிலர் உங்கள் மீது வழக்குத் தொடுக்க வாய்ப்பிருக்கிறது.
 
அரசியல்வாதிகளே! நீங்கள் எதை செய்தாலும், எதை சொன்னாலும் அதில் குற்றம் கண்டு பிடிக்க சிலர் முயல்வார்கள். தலைமையின் நம்பிக்கையைப் பெற போராட வேண்டி வரும். சகாக்களிடம் உரிமையாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
 
இந்த குருப்பெயர்ச்சி சுகவீனத்தை தந்தாலும் புதுப்புது அனுபவங்களைக் கற்றுத் தரும்.
 
பரிகாரம்:
 
திருவையாறுக்கு அருகிலுள்ள திருப்பழனம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் நெய் விளக்கேற்றி வணங்குங்கள். மூடைதூக்கும் தொழிலாளிக்கு உதவுங்கள்.