திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

வரலஷ்மி விரதம் அனுஷ்டிப்பதன் புராணக்கதை!

முன்னொரு காலத்தில் சிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடும் பொழுது யார் ஜெயித்தார்கள் என்று சண்டை வந்தது. அப்போது அங்கிருந்த சித்ர நேமி என்ற  கணதேவதை நியாயம் கேட்டார்கள். அவன் ஒரு தலைப் பட்சமாக சிவன் ஜெயித்ததாக கூறினான். பார்வதி கோபம் கொண்டு அவனை குஷ்ட ரோகியாக  ஒளியிழந்து தவிப்பாயாக என்று சபித்து விட்டாள்.
பின்னர் சிவபெருமான் அவனுக்கு சாப விமோசனம் தருமாறு பார்வதியிடம் கேட்க பார்வதியும் எப்பொழுது அழகிய தடாக தீர்த்தத்தில் தேவகன்னிகைகள்  புண்ணியமான விரதத்தை அனுஷ்டிப்பார்களோ அப்பொழுது உன் சாபம் நீங்கும் என்று கூறினாள். அதன் பிறகு சித்ர நேமி ஒரு தடாக கரையில் குஷ்ட  ரோகியாக வசித்து வந்தான்.
 
பல காலத்திற்கு பிறகு அங்கு தேவ கன்னிகைகள் வந்து தேவி பூஜையில் ஈடுபடுவதைக் கண்டு தன்னைப்பற்றி கூறி தாங்கள் அனுஷ்டிக்கும் விரதம் பற்றி  கூறுமாறு கேட்டான். அவன் மேல் பரிதாபம் கொண்ட கன்னிகைகள் தாங்கள் அனுஷ்டிப்பது வரலஷ்மி விரதம். சூரியன் கடகத்தில் இருக்கும் போது கங்கையும் யமுனையும் சேரும் காலத்தில் துங்கபத்திரா நதிக்கரையில் சிராவண மாதத்தில் சுக்லபக்ஷத்தில் வெள்ளிக்கிழமையில் முறைப்படி மஹாலஷ்மியை பற்றியதான  இந்த விரதத்தை தொடங்க வேண்டும். என்று விரதம் பற்றி கூறினார்கள்.
 
அவர்கள் செய்த பூஜையை கண்ட சித்ரநேமிக்கு குஷ்டம் நீங்கி மீண்டும் கைலாயம் சென்றான். பார்வதி தேவியும் இந்த விரதத்தை அனுஷ்டித்து ஷண்முகரை பெற்றாள். விக்ரமாதித்தன் இவ்விரதம் அணுஷ்டித்து நந்தனிடமிருந்து ராஜ்யம் பெற்றான். நந்தனின் மனைவி அனுஷ்டித்து பிள்ளைப்பேறு பெற்றாள். குண்டினம்  என்ற நகரத்தில் வசித்த சாருமதி என்ற பெண் இவ்விரதமிருந்து சகல சௌபாக்கியமும் பெற்றாள்.
 
லஷ்மியை மகிழ்விக்கும் இந்த விரதமிருக்கும் பெண்மணி இவ்வுலகில் சகல போகங்களையும் பெற்று அனுபவித்தபின் வைகுந்தம் சேருவாள். எல்லா சுக்லபட்ச  வெள்ளிக்கிழமைகளில் மஹாலஷ்மியை முறைப்படி பூஜிப்பவர்கள் வாழ்நாள் முழுதும் செல்வ செழிப்புடன் ஆரோக்கியமாக வாழ்வார்கள். அவர்கள் குடும்பம்  தழைக்கும்.