வியாழன், 9 ஜனவரி 2025
  1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. செல்வன்
Last Updated : திங்கள், 25 ஆகஸ்ட் 2014 (13:35 IST)

ரோமானியப் பேரரசன் நீரோ: நல்லவனா, கெட்டவனா?

வரலாற்று ஆசிரியர்களால்  நீரோ மன்னன் (Nero Germanicus AD 54- AD 68) பெரும் தீங்குகள் இழைத்தவனாகக் கருதப்படுகிறான். சிலர் ஆர்வக் கோளாறு காரணமாக அவனை ஹிட்லர், ஸ்டாலினுக்கு ஒப்பான கொடூரமான மன்னனாகச் சித்தரிக்கிறார்கள். ஆனால் இப்போது நீரோவின் வரலாறு, மறுவாசிப்புக்கு உள்ளாகி வருகிறது. அவன் தனக்கு முன்னும் பின்னும் ஆண்ட மன்னர்களை விட நல்லவனும் அல்ல, கெட்டவனும் அல்ல என்ற கருத்தாக்கம், வரலாற்று ஆசிரியர்களிடையே வலுபெற்று வந்தாலும், நீரோ தன் காலத்துக்கு மிக முற்போக்கான சீர்திருத்தவாதி எனவும் வரலாற்று ஆசிரியர்கள் சிலர் கருதுகிறார்கள்.
 
நீரோ மன்னன் மேல் சுமத்தப்படும் குற்றச்சாற்றுகளில் சில, அவன் தன் தாயுடன் கள்ள உறவு வைத்திருந்தவன், தங்கையை மணந்தவன், கர்ப்பமான மனைவியை எட்டி உதைத்துக் கொன்றவன், தாயைக் கொன்றவன், தம்பியைக் கொன்றவன் என்பது. ஆனால் இதை எல்லாம் தாண்டி, ரோம் நகரம் பற்றி எரிகையில் அவன் பிடில் வாசித்தான் எனும் குற்றச்சாற்றும் பின்னாட்களில் செல்வாக்கு பெற்ற இரு மதங்களுக்கு அழியாத தீமை செய்தவன் என்பதும் அவன் பெயர் கெட, மிகவும் முக்கிய காரணமாக அமைந்தது. நீரோ மன்னன் புரட்சி செய்த யூதர்களைத் தோற்கடித்து, இரன்டாவது யூதக் கோயிலைச் சூறையாடி அழித்தான். அன்று ரோமானியப் பேரரசில் மிகவும் கலகக்காரர்களாக இருந்த கிறிஸ்துவர்களைத் தீயில் தூக்கிப் போட்டுக் கொன்று புனித பால், புனித பீட்டர் எனும் இரு அப்போஸ்தலர்களைச் சிலுவையில் அறைந்தும் தலையை வெட்டியும் கொன்றான். இவர்களில் பீட்டர் தான் முதலாம் கத்தோலிக்க போப் ஆக அறியப்படுபவர். ஆக, நீரோவின் பெயர் பின்னாட்களில் கெட்டதில் விந்தை எதுவும் இல்லை.
 
நீரோவின் தாய்மாமன் காலிகூலா (Caligula) ரோமானிய சக்கரவர்த்தி ஆனதும் நீரோவின் குடும்பத்தை நாடு கடத்தினான். ஆனால் காலிகூலாவிற்குப் பின்னர் ரோமானிய சக்கரவர்த்தி ஆன அவனுடைய தாய்மாமன் கிளாடியஸ் (Emperor Cladius) தன் அக்கா மகளான நீரோவின் தாயை மணந்து கொண்டதும் நீரோ இளவரசு பட்டம் பெற்றான். கிளாடியஸுக்கு இன்னொரு திருமணம் மூலம் பிரிட்டனிகஸ் (Brittanicus) எனும் மகன் இருந்தான். இருந்தும் நீரோ அவனை விட வயதில் மூத்தவனாக இருந்தான். அத்துடன் தன் திறமையால் சக்கரவர்த்தி கிளாடியஸின் மனத்தையும் கவர்ந்தான். அதனால் மன்னர் கிளாடியஸ் தன் இன்னொரு மனைவிக்குப் பிறந்த ஓக்டேவியா (Octavia) எனும் மகளை நீரோவுக்குத் திருமணம் செய்வித்து அவனை இளவரசனாக அறிவித்தான். இத்தகைய சகோதர மணம், அன்றைய ரோமில் அனுமதிக்கப்பட்டதே.
 
இந்தச் சூழலில் நீரோ மன்னனாக வேண்டும் என்ற நோக்கில் நீரோவின் தாய் அக்ரிப்பினா (Agrippina the Younger), மன்னன் கிளாடியஸுக்கு விஷக் காளான்களை உணவாகக் கொடுத்துக் கொன்றாள். இதில் நீரோவுக்குத் தொடர்பு உண்டா, இல்லையா என்ற சர்ச்சை இன்னமும் நிலவுகிறது. ஆனால் நீரோ அதன்பின் காளான்களை மிகவும் நேசிக்கத் தொடங்கியதாகவும் "கடவுள்களின் உணவு" எனக் காளான்களைப் போற்றியதாகவும் தெரிகிறது!
 
இப்படி 17 வயதில், கிபி 54ஆம் ஆண்டு மன்னன் ஆன நீரோ, அதன்பின் தாய்க்குக் கட்டுப்பட்டு ஆட்சி நடத்தி வந்தான். தாயுடன் அவனுக்குத் தொடர்பு இருப்பதாக பின்னாளைய கிறிஸ்துவ வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்தாலும், இது நீரோ மேல் அவர்களுக்கு இருந்த அளவுகடந்த வெறுப்பின் காரணமாக எழுதப்பட்டது என்ற கருத்தும் காணப்படுகிறது. நீரோ வளர வளர, தாயின் பிடியில் இருந்து விடுபட்டு, சுதந்திரமாக ஆட்சி நடத்த ஆரம்பித்தான். அவன் தாய் அக்ரிப்பினஸ், அதன்பின் நீரோவை ஆட்சியில் இருந்து அகற்றி, தம்பி பிரிட்டானிகஸை ஆட்சியில் அமர்த்த முயன்றாள். அதனால் நீரோ அவர்கள் இருவரையும் கொன்றுவிட்டான்.
 
அதன்பின் நீரோவின் கவனம், தன் மனைவி ஒக்டேவியா மேல் திரும்பியது. ஓக்டேவியாவை மணந்தால் அரச பதவி கிடைக்கும் என்பதால் தான் நீரோ அவளை மணந்தான். இன்று அரசனான பின், ஓக்டேவியா அவனுக்கு அவசியமாகப் படவில்லை. அதனால் ஓக்டேவியாவுக்குக் குழந்தை பிறக்கவில்லை என்ற காரணம் காட்டி, அவளை விவாகரத்து செய்து, பின்னர் கொன்றும் விட்டான். இன்று அது எல்லாம் தவறாகக் கருதப்பட்டாலும் அன்றைய சூழலில் மன்னர்கள் எல்லாம் படுகொலை செய்யப்படுவதும், போட்டியாளர்கள் ஆட்சிக்கு வருவதும் சாதாரணம். நீரோவே அப்படித் தான் ஆட்சியில் அமர்ந்தவன். அதனால் எதிராளிகள் மேல் அவன் இரக்கம் காட்டாததில் வியப்பு இல்லை.
 
ஆட்சியைப் பிடிப்பதில் நீரோ மூர்க்கத்தனம் காட்டினாலும் மக்களிடம் மிகவும் தன்மையாக நடந்துகொண்டான். பிரபுக்கள் சபையான செனட்டைத் தாண்டி ஏழைகள், அடித்தட்டு வர்க்கத்துக்கு நன்மை செய்தான். அன்றைய வரிவிகிதங்கள் மிகவும் கடுமையாக இருந்ததால் வரியை 4.5%இல் இருந்து 2.5% ஆகக் குறைத்தான். அடிமைகளின் சுதந்திரத்தை எஜமானர்கள் தடுக்கலாம் என்ற சட்டத்தை ரோமானிய செனட் இயற்ற முயன்றபோது, அச்சட்டத்தை நீரோ வீட்டோ செய்தான். வக்கீல்கள் அன்று மக்களிடையே ஏராளமாகக் கட்டணம் வசூலித்து வந்தார்கள். அந்தக் கட்டணத்தை நீரோ மன்னன் குறைத்தான். இவை எல்லாம் மக்கள் மத்தியில் அவனுக்கு மாபெரும் செல்வாக்கை ஏற்படுத்தின.

இதுபோக நீரோ, ஒரு பெரிய இசைக் கலைஞன் என்பதால் ரோமானிய தெருக்களில் அவனே பாடல்களைப் பாடி, மக்களை மகிழ்வித்தான். கிரேக்கத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டு, ரதம் செலுத்தும் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று வந்தான். அப்போட்டியில் ரதம் கவிழ்ந்து அவனது உயிருக்கு அபாயம் வரும் சூழல் கூட ஏற்பட்டது. ஆக, நீரோ அன்றைய ரோமானியர்கள் மனத்தில் ஒரு ஹீரோ இமேஜை அடைந்தான். பிரபுக்களும் செனட்டும் அவனை வெறுக்கவும் இது காரணமாக அமைந்தது.
 
இந்தச் சூழலில் கிபி 64ஆம் ஆண்டு, ரோமில் மிகப் பெரிய தீவிபத்து ஏற்பட்டது. ரோமில் பாதி, பற்றி எரிந்தது. இத்தீவிபத்துக்குக் காரணம் கிறிஸ்தவர்களே என நீரோ குற்றம் சாற்றினான். நீரோவுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் முன்பே பகைமை இருந்து வந்தது. நீரோ இன்றைய சுதந்திர தேவி சிலைக்கு ஒப்பான உயரத்தில் தன் சிலையைச் செதுக்கி, அதை மக்களை வழிபடப் பணித்தான். அன்றைய கிறிஸ்தவர்களும் யூதர்களும் அதை ஏற்க மறுத்தார்கள்.

(நீரோ மன்னன் சிலையும் இன்றைய சுதந்திர தேவி சிலையும். அக்காலத்தில் நீரோவின் சிலைக்கு ஒப்பான எந்தச் சிலையும் உலகில் இல்லை. பின்னாட்களில் இச்சிலை அழிக்கப்பட்டது)


அன்று இஸ்ரேல், ரோமானிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியே. இதனால் கோபத்துடன் இருந்த நீரோ, இத்தீவிபத்துக்குக் காரணம் கிறிஸ்தவர்கள் சதியே எனக் கூறி, கிறிஸ்தவர்களைத் தீயில் தூக்கிப் போட்டான். இந்தச் சூழலில் அப்போஸ்தலர்களான புனித பாலும் பீட்டரும் கொல்லப்பட்டார்கள். இது நீரோ ஆட்சிக் காலத்தில் நடந்து இருந்தாலும் நீரோவுக்குத் தெரிந்து இது நடந்ததாகக் குறிப்புகள் இல்லை. நீரோவைப் பொறுத்தவரை அவர்கள் இருவரும் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களில் இருவர்.
 
அதன்பின் அழிந்த ரோமில், மிகப் பெரும் கொலேசியம் ஒன்றையும் அரண்மனை ஒன்றையும் நீரோ கட்டினான். இதனால் இந்தப் புதிய நகரை உருவாக்கவே, ரோமுக்கு நீரோ தீ வைத்ததாகப் பலரும் நம்பினார்கள். ரோம் பற்றி எரிந்தபோது நீரோ பிடில் வாசித்ததாக, அவனுக்கு 150 ஆண்டுகள் பின்னால் இருந்த வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பு எழுதினாலும் ரோம் எரிகையில் நீரோ, ரோமில் இல்லை என்பது இப்போது தெரிய வந்துள்ளது.
 
இந்தச் சூழலில் யூதர்கள் கலகம் செய்ததால் ஜெருசலத்தைப் பிடித்த ரோமானிய படைகள், யூதர்களை அங்கிருந்து அடித்து விரட்டி, இரண்டாவது யூதக் கோயிலை இடித்துத் தள்ளின. பின்னாளில் யூத மதமும் கிறிஸ்தவ மதமும் மிகப் பெரும் செல்வாக்குப் பெற்றாலும் அன்றைய ரோமில் அவ்விரு மதங்களும் இரு சிறு குழுக்களே. இந்தச் சூழலில் கால்பா எனும் தளபதி, நீரோவுக்கு எதிராகப் புரட்சி செய்தான். நீரோ மேல் கோபத்துடன் இருந்த செனட்டும் அவனைப் பதவிநீக்கம் செய்ய முடிவு செய்தது.
 
14 ஆண்டுகள் ஆட்சி புரிந்தபின் இப்படி கிபி 68ஆம் ஆண்டு புரட்சி உருவானதால் நீரோ திகைத்துத் தடுமாறினான். செனட் அவனைத் தேசத் துரோகியாக அறிவித்ததாக வதந்தி பரவியது. ஆனால் செனட்டில் அப்போது நீரோ மன்னன் மேல் பலரும் பரிவுடன் இருந்தார்கள். தளபதி கால்பாவைத் தேசத் துரோகியாக அறிவித்தும், நீரோ மேல் நம்பிக்கை தெரிவித்தும் தீர்மானம் இயற்றி, அதை நீரோவிடம் தெரிவிக்கப் படைகளை அனுப்பினார்கள். 
 
ஆனால் அவர்கள் தன்னை கைது செய்ய வருவதாக எண்ணிய நீரோ, தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தான். "எப்பேர்ப்பட்ட கலைஞன் என்னுடன் மரணிக்கிறான்?" என வருந்தியபடி தன் மெய்க் காப்பாளனைத் தன்னைக் கத்தியால் குத்திக் கொல்லப் பணித்தான். நீரோவைக் கத்தியால் குத்தியபின் படைவீரர்கள் வந்து, செனட் அவன் மேல் நம்பிக்கை தெரிவித்திருப்பதைத் தெரிவித்தார்கள். மரணப் படுக்கையில் நீரோவின் முகத்தில் புன்னகை தோன்றியது..
 
"மிகத் தாமதமாக நம்பிக்கை தெரிவித்துவிட்டீர்கள்" எனச் சொன்னபடி, ரோமாபுரியின் மன்னனாக உயிர் நீத்தான் நீரோ.