வியாழன், 9 ஜனவரி 2025
  1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. செல்வன்
Last Modified: புதன், 5 நவம்பர் 2014 (12:04 IST)

அமெரிக்க காங்கிரஸ், செனட் தேர்தல்: ஒபாமா கட்சி படுதோல்வி

அமெரிக்காவில் இன்று அமெரிக்க காங்கிரஸ் மற்றும் செனட்டுக்கு தேர்தல் நடைபெற்றது. அதிபர் தேர்தல் 4 வருடங்களுக்கு ஒரு முறை தான் நடைபெறும் எனினும், காங்கிரஸ் மற்றும் செனட் தேர்தல்கள் இரு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும்
 
2012ஆம் ஆண்டுத் தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்றிருந்தாலும் அவர் கொண்டு வந்த ஹெல்த்கேர் மசோதா, மக்களுக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. புவி வெப்ப மயத்தைத் தடுக்கிறேன் பேர்வழி எனும் பெயரில் நிலக்கரி கம்பனிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தார். கனடாவில் இருந்து பெட்ரோலைக் கொண்டுவரும் கீஸ்டோன் எனும் பைப்லைனுக்கு அனுமதி மறுத்தார். சர்வதேச அளவில் ஐஸிஸ் இராக்கில் வளர்வதும், ஆபிரிக்காவில் இருக்கும் எபோலா வைரஸ் அமெரிக்காவில் பரவாமல் தடுக்க, ஒபாமா எந்த முயற்சியும் எடுக்கவில்லை எனும் அதிருப்தியும் மக்களிடையே பரவியது.
 
தேர்தலில் ஒபாமாவின் டெமக்ராடிக் கட்சி இறங்குமுகமாக இருப்பதை உணர்ந்த ரிபப்ளிக்கன்கள், படு உற்சாகமாக களத்தில் இறங்கினார்கள். கொலராடோ மாநிலத்தில் வெல்ல முடியாதவர் எனக் கருதப்பட்ட ஒபாமா கட்சியின் மார்க் யுடாலுக்கு எதிராக ரிபப்ளிக்கன் கோரி கார்ட்னர் களமிறங்கியது, ரிபப்ளிக்கன்களுக்கு மிகப் பெரும் உற்சாகத்தை அளித்தது. கொலராடோவில் டெமக்ராட்டுகள் கொண்டு வந்த துப்பாக்கி கட்டுப்பாட்டு மசோதாவுக்கு எதிராகப் பெரும் அதிருப்தி அலை அடித்தது.
 
தேர்தல் நாள் நெருங்க, நெருங்க ஒபாமாவின் கட்சியினரே அவருக்கு எதிராகத் திரும்பினார்கள். கெண்டக்கி மாநிலத்தில் ஒபாமா கட்சியின் அலிசன் லண்டர்கன் க்ரைம்ஸிடம் "2012இல் யாருக்கு ஓட்டு போட்டீர்கள்?" எனக் கேட்கப்பட்ட எளிய கேள்விக்கு "ஒபாமாவுக்கு ஓட்டு போட்டேன்" எனச் சொல்லாமல் தடுமாறினார். சொந்தக் கட்சியின் ஜனாதிபதிக்கு ஓட்டு போட்டதைக் கூட, சொல்லமுடியாத அவல நிலையில் ஒபாமா கட்சி வேட்பாளர் தடுமாறியது மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஒபாமா கட்சி வேட்பாளர்கள் ஒருவரும் ஒபாமாவைத் தம் தொகுதிக்கு அழைக்கவில்லை. ஒபாமா பெயரைச் சொல்ல மறுத்து, சொந்தச் செல்வாக்கால் வெற்றி பெற முயன்றார்கள்.

 
அதுபோக ஒபாமா கட்சி வேட்பாளர்கள் பலரும் சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்கொண்டார்கள். விவசாயிகள் நிரம்பிய ஐயோவா மாநிலத்தில் போட்டியிட்ட ஒபாமா கட்சி வேட்பாளர் ப்ருஸ் பெய்லி, விவசாயிகளை இழிவுபடுத்தும் விதமாக கமெண்ட் அடித்து அது யுடியூபில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. தன் வீட்டுத் தோட்டத்தில் கோழிகளை மேயவிட்டார் என அண்டை வீட்டுக்காரர் மேல் போலிஸ் புகார் கொடுத்த விவரமும் வெளிவந்தது. கோழி விவகாரத்தில் பக்கத்து வீட்டுக்காரரிடம் கூட இணங்கிப் போகாமல் கோர்ட்டில் வழக்குப் போடும் இவர் ஜெயித்து எப்படி செனட்டில் எதிர்க் கட்சியினருடன் சமாதானமாகப் போவார் என ரிபப்ளிக்கன்கள் செய்த பிரச்சாரம் நன்கு எடுபட்டது.

 
ஒபாமா பிரச்சாரம் செய்த இடங்களில் எல்லாம் கூட்டம் குறைந்தது. பல இடங்களில் அவர் பேசப் பேச மக்கள் வெளியேறினார்கள். தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் நேரத்தில் ஒபாமா கட்சியினரிடையே தோல்விக் களை தாண்டவமாடியது. ஒபாமா எந்த நிருபரையும் சந்திப்பதைத் தவிர்த்து வெள்ளை மாளிகையில் முடங்கினார். ஒபாமா கட்சி வெற்றி பெறும் என நம்பியவர்கள் கூட ஓட்டுச் சாவடிகளில் கோபாவேசத்துடன் குவிந்த மக்கள் கூட்டத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். மாலையில் ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் ரிசல்டுகள் வெளிவந்தன. போட்டியிட்ட அனைத்து ரிபப்ளிக்கன் செனட்டர்களும் வெற்றி பெற்றார்கள்.
 
ஒபாமாவின் சொந்த மாநிலமான இல்லினாய்ஸில் அவர் செய்த கடும் பிரச்சாரத்தையும் மீறி, ஒபாமா கட்சியின் கவர்னரைத் தோற்கடித்து, ரிபப்ளிக்கன் ப்ரூஸ் ரானர் மாபெரும் வெற்றி பெற்றார். இது ஒபாமாவின் பிறந்த மண்ணில் அவருக்குக் கிடைத்த தனிப்பட்ட தோல்வியாகக் கருதப்படுகிறது
 
ரிபப்ளிக்கன்கள் பிடியில் இருந்த காங்கிரஸில் மேலும் அதிக இடங்களைக் கைப்பற்றி ரிபப்ளிக்கன்கள், வெற்றி வாகை சூடினார்கள்.
 
ஒபாமாவுக்கு ஓட்டு போட்டதை வெளியே சொல்ல முடியாமல் தவித்த அலிசன் க்ரைம்ஸ், கெண்டக்கியில் படுதோல்வி அடைந்தார். கோழிக்காக கேஸ் போட்ட ஐயோவா வேட்பாளர் ப்ரூஸ் பெய்லி, ரிபப்ளிக்கன் கட்சியின் ஜோனி எர்னஸ்டிடம் தோற்றார். துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டம் கொணர்ந்த கொலராடோ கவர்னர் தோல்விமுகத்தில் உள்ளார். கொலராடோவில் ஜெயிக்க முடியாதவராக கருதப்பட்ட ஒபாமா கட்சியின் மார்க் யுடால், ரிபப்ளிக்கன் கோரி கார்டன்ரிடம் படுதோல்வியைச் சந்தித்தார்.
 
மேரிலாந்து, கனெக்டிகட், மெய்ன் முதலான டெமக்ராட்டுகளின் கோட்டைகள் தகர்ந்து விழுந்தன. 47 முறை வரிகளை உயர்த்திய ஒபாமா கட்சியின் கனெக்டிகட் வேட்பாளர் படுதோல்வி அடைந்தார்.
 
பில் க்ளின்டனின் கோட்டையான ஆர்கன்சா மாநிலத்தில் ஒபாமா கட்சியின் சிட்டிங் செனட்டர் தோல்வி அடைந்தார். ஜார்ஜியா, வட கரோலினா, மேற்கு வர்ஜினியா, மாண்டானா, தெற்கு டகோடா, கான்சாஸ் என நாடெங்கும் ரிபப்ளிக்கன்கள் மாபெரும் வெற்றி பெற்று, டெமக்ராட்டுகள் பிடியில் இருந்த செனட்டைக் கைப்பற்றி, வரலாற்றுச் சாதனை படைத்தார்கள்.
 
அமெரிக்க வரலாற்றில் எந்த ஜனாதிபதிக்கும் இந்த அளவு மோசமான தோல்வியைத் தேர்தல்களில் மக்கள் கொடுத்திருப்பார்களா என்பது இப்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது. அந்த அளவு மகத்தான வெற்றியை ரிபப்ளிக்கன்கள் அடைந்துள்ளார்கள். தேர்தல் முடிவுகள், ஒபாமாவைச் சக்தியற்ற அதிபராக மாற்றி, அவரது ஆட்சியின் கடைசி இரண்டாண்டுகளைப் பொருளற்றவையாக மாற்றியது குறிப்பிடத்தக்கது.
 
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதை ஏற்று ஒபாமா தன் தவறுகளைத் திருத்திக்கொண்டால், வரலாற்றில் அவர் நல்ல இடம் பெறுவார். அப்படி செய்வாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.