வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2016-கண்ணோட்டம்
Written By Sasikala
Last Updated : திங்கள், 19 டிசம்பர் 2016 (15:21 IST)

2016 தமிழ் சினிமா - இளையராஜா 1000: விருதுகளும், புறக்கணிப்பும்!

இளையராஜாவுக்கு கேரள அரசின் நிஷாகந்தி விருது
 
நிகழாண்டுக்கான (2016) நிஷாகந்தி புரஸ்காரம் என்ற விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்கப்படும் என்று கேரள  அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ஏ.பி.சுனில்குமார், திருவனந்தபுரத்தில்  செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:-

 
வரும் 20ஆம் தேதி நடைபெற இருக்கும் நிஷாகந்தி விழாவின் தொடக்க விழாவில், 72 வயதாகும் பிரபல இசையமைப்பாளர்  இளையராஜாவுக்கு இந்த ஆண்டுக்கான நிஷாகந்தி புரஸ்காரம் விருது வழங்கப்படுகிறது. அவருக்கு, முதல்வர் உம்மன் சாண்டி  இந்த விருதை அளிக்க உள்ளார். இந்திய நாட்டுப்புற இசையுடன் மேற்கத்திய இசையின் பல்வேறு அம்சங்களை இணைத்து  புதிய வகையில் இசை வகையை இளையராஜா உருவாக்கினார். 
 
இசை, பிரதேசங்களையும், தலைமுறைகளையும் கடந்து பிரபலமாக விளங்குகிறது. அதைப் பாராட்டும் வகையில், அவருக்கு  இந்த விருது அளிக்கப்படுகிறது என்று சுனில்குமார் தெரிவித்தார். நிஷாகந்தி கொண்டாட்டம் தொடர்பான விடியோவையும், பிரசுரத்தையும் அமைச்சர் வெளியிட்டார். ஆண்டுதோறும் நடைபெறும் நிஷாகந்தி திருவிழா, வரும் 20ஆம் தேதி தொடங்கி, 8  நாள்களுக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில், இசை, நடனம் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். 20ஆம் தேதி  நடைபெற உள்ள தொடக்க நிகழ்ச்சியில் பிரபல இசைக் கலைஞர் பண்டிட் ரவிசங்கர் பிரசாத்தின் மகள் அனுஷ்கா சங்கரின்  சிதார் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
 
 
ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு கேரள அரசு நிஷாகந்தி விருது வழங்கி சிறப்பிக்கிறது.  திருவனந்தபுரத்தில் வருகிற 20–ந்தேதி நடைபெறும் விழாவில் இந்த விருதை கேரள முதல்–மந்திரி உம்மன்சாண்டி  இளையராஜாவுக்கு வழங்குகிறார். நிஷாகந்தி சங்கீத விருது என்ற பெயரில் வழங்கப்படும் இந்த விருது ரூபாய் ஒன்றரை   லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டு பத்திரம் அடங்கியதாகும்.  
 
இளையராஜா 1000 வது படம்: தாரை தப்பட்டை
 
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி பாராட்டுவிழா நடைபெற உள்ளது.

 
கடந்த1976 ஆம் ஆண்டு "அன்னக்கிளி' படம் மூலம் தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா,  தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இதுவரை 1,000 படங்களுக்கு இளையராஜா  இசையமைத்து சாதனை புரிந்துள்ளார்.
 
சமீபத்தில், இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த "தாரை தப்பட்டை' 1000 ஆவது  படம் ஆகும். இதனையடுத்து, 1000  படங்களுக்கு இசையமைத்த, இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி பாராட்டு விழா  நடைபெறவுள்ளது. இந்த விழாவை இளையராஜா மியூசிக் மேனேஜ்மென்ட்  நிறுவனத்துடன் இணைந்து விஜய் தொலைக்காட்சி  பிரம்மாண்டமான முறையில் நடத்த உள்ளது. இந்த விழாவில், திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள்  உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். 
 
தேசிய விருதை புறக்கணித்த இளையராஜா
 
சிறந்த பின்னணி இசைக்காக மட்டும் எனக்கு விருது வழங்குவது என்னை பாதி மட்டுமே அங்கீகரிப்பதாகும் என்று இசைஞானி  இளையராஜா கூறியுள்ளார்.
 
நியூ டெல்லியில் செவ்வாயன்று 63-வது தேசிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு  குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கி கவுரவித்தார். விழாவில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி  மற்றும் ராஜவர்தன்சிங் ரத்தோர் ஆகியோர் பங்கேற்றனர். இதில் சிறந்த நடிகருக்கான விருதை பிக்கு படத்திற்காக நடிகர்  அமிதாப் பெற்றார். தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை கங்கனா ரணாவத்  பெற்றுகொண்டார்.
 
சிறந்த படத்திற்கான விருதை பாகுபலி படத்திற்காக அப்படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியும், தயாரிப்பாளர்கள் ஷோபு  யர்லகட்டா, பிரசாத் தேவினேனி ஆகியோர் பெற்றுகொண்டனர். தமிழில் விசாரணை படத்திற்காக சிறந்த துணை நடிகர் விருதை சமுத்திரக்கனியும், சிறந்த எடிட்டருக்கான விருதை மறைந்த கிஷோருக்காக அவருடைய தந்தையும் பெற்றனர். சிறந்த  படமாக தேர்வு செய்யப்பட்ட விசாரணைக்கான விருதை தனுஷ், வெற்றிமாறன் சார்பில் சுரேஷ் பெற்றுகொண்டார்.

 
இளையராஜாவின் 1000வது படமான ‘தாரை தப்பட்டை’ படத்தின் பின்னணி இசைக்காக இளையராஜாவுக்கு தேசியவிருது  அறிவிக்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வில் இளையராஜா கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் இது குறித்து  கூறியுள்ள இளையராஜா, ‘’2010 வரை சிறந்த இசையமைப்புக்காக ஒரேயொரு தேசியவிருது வழங்கப்பட்டுவந்தது. சாகர  சங்கமம், சிந்து பைரவி, ருத்ண வீணா என மூன்று படங்களுக்கு நான் தேசிய விருது பெற்றுள்ளேன்.
 
ஆனால் இம்முறை சிறந்த பின்னணி இசைக்காக மட்டும் எனக்கு விருது வழங்குவது என்னை பாதி மட்டுமே  அங்கீகரிப்பதாகும். எனது இசையில் ஒரு பாதி மட்டுமே சிறப்பாக உள்ளது எனச்சொல்வதாகும்’’ என்று கூறியுள்ளார். மேலும்,  இது குறித்து தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்த விருந்து வழங்கும் விழாவில்  கலந்துகொல்லாததற்கான காரணத்தை விளக்கியுள்ளார்.