1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2016-கண்ணோட்டம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 15 டிசம்பர் 2016 (13:48 IST)

ரியோ ஒலிம்பிக்ஸ் 2016: இந்தியாவின் பங்களிப்பு ஒரு பார்வை!!

ரியோ ஒலிம்பிக்ஸ் 2016 விளையாட்டு துறையில் 2016 ஆம் ஆண்டிற்கான மாபெரும் நிகழ்வாக கருதப்படுகிறது. 2016 ரியோ ஒலிம்பிக்ஸ் நிகழ்வுகள் குறித்த சிறு துளிகள்.


 
 
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் உள்ள மரக்கானா மைதானத்தில் 31வது ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் மாதம் 6 தேதி தொடங்கியது. 207 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றனர்.
 
அபினவ் பிந்த்ரா தலைமையில் 117 இந்திய வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றனர். பல்வேறு விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்க்கும் முனைப்பில் விளையாடினர்.
 
ஒலிம்பிக் மகளிர் ஜிம்னாஸ்டிக் வால்ட் பிரிவு இறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் நான்காவது இடம் பெற்றார். இதன் மூலம், இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு நூலிழையில் கை நழுவிப்போனது.


 

 
இந்நிலையில், இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை சாக்‌ஷி மாலிக் பெற்றுத்தந்தார். மகளிர் 58 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் சாக்‌ஷி மாலிக், கிர்கிஸ்தானின் டைனிபெகோவாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை பெற்றுத் தந்தார்.


 

 
இதனை அடுத்து, பி.வி.சிந்து மகளிருக்கான ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இறுதி சுற்றுக்கு முன்னேறி இந்தியாவிற்கு இரண்டாம் பதக்கத்தை உறுதி செய்தார். தங்கம் வெல்வார் என எதிர்ப்பார்க்கப்பட்ட சிந்து வெள்ளி பதக்கத்தை வென்று வெள்ளி மங்கையாக திகழ்ந்தார்.