இராவணனால் கடத்தப்பட்டு இலங்கையில் அசோக வனத்தில் சிறைப்படுத்தப்பட்டிருந்தபோது அங்கு வந்த ஹனுமான், சீதைப் பிராட்டிக்கு தனது விசுவ ரூபத்தைக் காட்டி அளித்த காட்சி வடிவிலேயே இங்கு பக்தர்கள் அனைவருக்கும் ஸ்ரீ இராம பக்த ஹனுமான் காட்சி தருகிறார்.
இக்கோயிலின் பெரும் சிறப்பாக எழுந்தருளியுள்ள ஹனுமான், பக்தர்கள் கேட்கும் வரங்களை அளிப்பவராக உள்ளார். இவருக்கு இத்திருத்தலத்தில் எப்போது பக்தர்கள் வரிசையில் நி்ன்று வடை மாலை சூட்டுவதும், வெண்ணையளித்து வழிபடுவதுமாய் இருப்பதைக் காணலாம்.
ஸ்ரீ இராமருக்கும் அவர் பக்தரான ஹனுமனுக்கும் இடையே நீண்டு பரந்த வடக்குப் பிரகாரத்தில் முருகனும் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். முருகனை வணங்கிய பிறகு பஞ்ச பாண்டவர்கள் வணங்கிய ஜயந்தீஸ்வரரை வணங்கலாம். நாராயணர், மகாதேவர், இராமேஸ்வரர், ஸ்ரீ சக்கரத்தாழ்வார், துர்க்கை, கண்ணன் ஆகியோருக்கு இங்கு தனித்தனி கோயில்கள் உள்ளன.
இந்த வடக்குப் பிரகாரத்திலுள்ள அலங்கார மண்டபத்தில்தான் இக்கோயிலிற்கு கலைச் சிறப்புச் சேர்க்கும் இசைத் தூண்கள் உள்ளன. இந்த நான்கு தூண்களிலும் சிறு சிறு தூண்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவை யாவும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டவையாயினும் அவற்றைத் தட்டினால் பல ஓசைகள் கேட்கின்றன.
இம்மண்டபத்தின் அருகிலேயே அறம் வளர்த்த நாயகியின் சன்னதி உள்ளது. தனது பக்தியினால் இறையுடன் கலந்த 13 வயது வேளாளப் பெண்ணி்ற்காக அவருடைய குடும்பத்தார் கட்டியது இத்திருக்கோயில்.
இவைற்றையெல்லாம் கண்டு வணங்கிய பிறகு கிழக்குப் பிரகாரத்திற்கு வந்தால் அங்கு தனித் தனி சன்னதிகளில் எழுந்தருளிவரும் கருடாழ்வாரையும், நந்தீஸ்வரரையும் தரிசிக்கலாம். இவர்களைத் தரிசித்தப் பின்னரே இக்கோயிலில் எழுந்தருளியுள்ள தாணுமாலயப் பெருமானை தரிசிக்கலாம்.
லிங்க வடிவில் தாணுமாலயப் பெருமாள் காட்சி தருகிறார். தாணுமாலயனின் வலப்புறத்தில் விஷ்ணு கோயில் உள்ளது. தாணுமாலயனின் ஆலயத்தை வடகேடம் என்றும், திருமாலின் ஆலயத்தை தென்கேடம் என்றும் அழைக்கின்றனர்.
கொடி மண்டபத்தை அடுத்து, ஆட்கொண்டான், உய்யக்கொண்டான் என்ற இருபெரும் துவாரபாலகர்களைக் கடந்து வந்தால் செண்பகராமன் மண்டபத்தை அடையலாம். இம்மண்டபத்தின் தூண்களில் இராமயண, மகாபாரத காட்சிகள் சிற்பங்களாக செதுக்கப்பட்டும், ஓவியங்களாக வரைப்பட்டும் உள்ளன.
இத்தூண்களில் இராமர் வாலி வதம் செய்வது செதுக்கப்பட்டுள்ளது. வாலியும் சுக்ரீவரும் யுத்தம் செய்வது ஒரு தூணிலும், வில்லுடன் இராமன் நிற்பது மற்றொரு தூணிலும் செதுக்கப்பட்டுள்ளது. இராமன் உருவம் செதுக்கப்பட்ட தூணில் இருந்து பார்த்தால் வாலியின் உருவம் தெரிகிறது. ஆனால் வாலியின் சிற்பத்தருகில் நின்று பார்த்தால் இராமன் உருவம் தெரியாது! இராமன் மறைந்திருந்து வாலியை வதம் செய்ததை அவ்வளவு சூட்சமமாக சிற்பி செதுக்கியுள்ளார்!
அமைவிடம்: நாகர் கோயிலில் இருந்து 6 கி.மீ. தூரத்தில் கன்னியாகுமரி செல்லும் வழியில் உள்ளது இத்திருக்கோயில். இக்கோயிலின் திருக்குளம் மிகப் பெரியது, அழகானது.
விழாக்கள்:
இக்கோயிலில் மார்கழி, சித்திரை மாதங்களில் பத்து நாட்களுக்கு திருவிழா நடைபெறுகிறது. ஒன்பதாவது நாள் தேர்த் திருவிழா. அன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு திருத்தேர் இழுக்கின்றனர்.
தங்குமிடம்:
அய்யநாதன்|
Last Updated:
ஞாயிறு, 23 பிப்ரவரி 2014 (00:42 IST)
நாகர் கோயிலில் தங்குமிட வசதிகள் அதிகமாக உள்ளது. போக்குவரத்து வசதி குறைவின்றி உள்ள தடத்திலேயே இத்திருத்தலம் அமைந்துள்ளது.