வியாழன், 23 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 4 பிப்ரவரி 2023 (10:10 IST)

பக்தியால் அரசனை வெற்றி கொண்ட சிவனாடியார்!

Poosalar Nayanar
பக்தி மார்க்கத்தை பெரும்பான்மையாக கொண்ட இந்த மரபில் பல அடியார்கள் பக்தியில் கரைந்து முக்தி அடைந்திருப்பதாக பல தல வரலாறுகள் உள்ளன. இந்த அடியார்கள் தங்களின் சொந்த வாழ்க்கைக்காகவோ, சாப்பாட்டிற்காகவோ இறைவனை அழைத்ததில்லை. மாறாக, முக்தி வேண்டி, பிறப்பறுக்க வேண்டி என மட்டும்தான் அவர்களின் வேண்டுகோள் இருக்கும். இது அப்படி ஒரு முதிர்ச்சியானதொரு மரபு கொண்ட கலாச்சாரம்.
 

அத்தகைய மனிதர்களை அடியார்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்றழைக்கப்பட்டு அவர்களையும் இறைநிலைக்கு இணையாக வணங்கும் முறை வழக்கத்தில் உள்ளது. அப்படிப்பட்ட ஒரு நாயன்மார்தான் பூசலார். திருநின்றவூர் திருத்தலத்தில் வாழ்ந்து வந்த பூசலார் இளம் வயது முதல் இறைவன் மேல் பெரும் பக்தி கொண்டவராக இருந்தார். அன்றாடம் அவர் சென்று வணங்கும் லிங்கத் திருமேனிக்குத் திருக்கோயில் கட்ட அவர் விரும்பினார். அது இயலாமல் போகவே, மனத்தில் கோயில் கட்ட முடிவு செய்தார் மறையவர் குலத்தில் தோன்றிய அந்த மகான்.

இதே காலத்தில், காஞ்சிபுரத்தை ஆண்டு வந்த பல்லவ மன்னர் ஒருவர் ஈசனுக்குக் கோயில் எழுப்பினார். மிகவும் பிரமாண்டமாக எழும்பிய அந்தக் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் செய்ய நாள் குறித்தார். அன்றைய இரவு அவர் உறங்கும்போது அவர் கனவில் இறைவன் தோன்றினார். 'திருநின்றவூரில் வாழும் என் பக்தனான பூசலார் கட்டிய திருக்கோயிலில், நீ குறித்த அதே நாளில் கும்பாபிஷேகம். அன்று நான் அங்கே குடிகொள்ளப் போகிறேன். எனவே, நீ கும்பாபிஷேகம் செய்ய வேறு ஒரு நாள் குறித்துக் கொள்' என்று சொல்லி மறைந்தார்.

மன்னனுக்கோ ஆச்சரியம். 'தான் எழுப்பியிருக்கும் கோயிலை விட அந்த பூசலார் எழுப்பிய கோயில் எத்தனை உயர்ந்ததாக இருந்தால் ஈசன் அங்கு குடிகொள்ள முடிவு செய்வார். உடனே அந்த ஆலயத்தைக் காண வேண்டும்' என்று விரும்பி, மறுநாள் திருநின்றவூருக்குக் கிளம்பினார். மன்னன் தன் பரிவாரங்களோடு அந்த ஊரை அடைந்தார்.

அங்கு கோயில்கள் எதுவும் புதிதாகக் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் செய்யத் தயாராக இல்லை என்பதை விசாரித்து அறிந்தார். ஈசன் உச்சரித்த ,'பூசலார்' என்னும் திருப்பெயர் நினைவுக்கு வந்தது. பூசலார் இருப்பிடம் விசாரித்து, அங்கு சென்று தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டார். கனவில் நடந்தவற்றைச் சொல்லி, விளக்கம் கேட்டு நின்றார். பூசலாரின் சொல் கேட்டு வியந்த மன்னர், இறைவனின் மகத்துவத்தை அறிந்துகொண்டார். அவர் விரும்புவது பக்தர்களின் மனக் கோயிலையே என்று தெரிந்துகொண்டார்.

பூசலாரின் பக்தியை மெச்சி அவரைப் பணிந்து வணங்கினார். அவர் உத்தரவைப் பெற்று தன் ஊர் திரும்பிச் சென்றார். பூசலார் தன் மனக் கோயிலில் கும்பாபிஷேகம் செய்தார். தான் வாழும் காலம் வரை ஆகம விதி வழுவாமல் பூசை செய்தார்.

இப்படி நிறைய சிவனடியார்களின் ஜீவச மாதிகளை நமது தென்னிந்தியாவின் பல பகுதிகளில் காண முடியும். இறைவனின் உறைவிடத்தை கால்களால் மிதிக்கலாகாதென கைலாயத்திற்கு தலையாலும், கைகளாலும் நடந்து சென்ற காரைக்கால் அம்மையார், தன் கண்ணையே இறைவனுக்கு வழங்கிய கண்ணப்பநாயனார், சிவ அடையாளம் தரித்த யாராயினும் அவரையும் சிவமாகவே கண்டு வணங்கும் மெய்ப்பொருள் நாயனார் உள்ளிட்ட 63 நாயன்மார்கள் வாழ்ந்த புண்ணிய பூமி இது.

Isha

 
இத்தகைய ஆன்மீக மண்ணில் இன்றைய சூழலிலும் மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் இருந்தபடியே சிவனடியாராக இருந்து ஈசனை தொழும் பெரும் வாய்ப்பினை தென்கைலாய பக்திப்பேரவை வழங்குகிறது.

ஒவ்வொரு மாத சிவராத்திரிக்கும் தென்கைலாய பக்திப்பேரவை நடத்தும் 'சிவாங்கா' எனும் யாத்திரை நிகழ்வை நடத்துகின்றனர். இதில் கலந்துகொள்ள பக்தர்கள் 42 நாட்களுக்கு முன்பே பதிவு செய்துகொண்டு தங்கள் விரதத்தை துவக்குகின்றனர். இருவேளை உணவு, சிவநமஸ்காரம் எனும் யோகப்பயிற்சி உள்ளிட்ட செயல்முறைகளோடு மிகத் தீவிரமான பக்தியில் இருக்கின்றனர். ஒவ்வொரு மாத சிவராத்திரிக்கும் இந்த யாத்திரை நடைபெற்றாலும், வருடத்தில் ஒருமுறை வரும் மஹாசிவராத்திரியின்போது இந்த சிவாங்கா யாத்திரை, ஆதியோகி ரத யாத்திரையோடு இணைந்து மிக விமரிசையாக நடைபெறுகிறது.

ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவன் முதல் 64 வயதுள்ள பெரியவர் வரை பலரும் இந்த யாத்திரையில் கலந்துகொண்டு 20 நாட்களுக்கும் மேலாக இந்த தொலைதூரப்பயணத்தை அற்புதமாக நிறைவு செய்கின்றனர். நிறைவு செய்வதோடு நின்றுவிடாமல், 7 மலைத்தொடர்களையுடைய தென்கயிலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை ஏறி அங்குள்ள சுயம்புவாக வீற்றிருக்கும் ஈசனை கண்டுருகி மலை இறங்குகின்றனர். அதனைத்தொடர்ந்து அன்று இரவு முழுக்க சத்குரு அவர்களின் முன்னிலையில் நிகழும் மஹாசிவராத்திரி நிகழ்விலும் பங்கேற்கின்றனர்.

சிவாங்கா யாத்திரை குறித்த கூடுதல் தகவல்களுக்கு +9183000 83111 என்ற எண்ணையும், [email protected] என்கிற மின்னஞ்சலையும் தொடர்பு கொள்ளலாம்