வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: வியாழன், 24 ஏப்ரல் 2014 (07:30 IST)

தேர்தல்: தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இன்று வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுவையில் ஒரு தொகுதிக்கும் வியாழக்கிழமை (ஏப். 24) வாக்குப் பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.
இந்த தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 845 வேட்பாளர்களும், புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் 30 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இதேபோல தமிழகத்தில் 5.51 கோடி வாக்காளர்களும், புதுவையில் 9 லட்சத்து ஆயிரத்து 357 வாக்காளர்களும் தங்களது வாக்குகளைச் செலுத்த உள்ளனர். தேர்தல் அமைதியாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ள 17ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வெப்-காமிரா கண்காணிப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிக்குள் வாக்காளர்கள் செல்பேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
இந்த தேர்தலில் அதிமுக நாற்பது தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
 
திமுக, விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் களத்தில் இறங்கியுள்ளது. பாஜக, தேமுதிக, மதிமுக, பாமக, உள்ளிட்ட 7 கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் முதன் முறையாக தனித்துப் போட்டியிடுகிறது. இடதுசாரி கட்சிகள் 18 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதனால், தமிழக மக்களவைத் தேர்தலில் ஐந்து முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
 
புதுவையில் காங்கிரஸ், பாஜக அணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ், பாமக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். தமிழகத்தில் பாஜக அணியில் இடம்பெற்றுள்ள பாமக, புதுவையில் தனித்துப் போட்டியிடுகிறது.
 
தமிழகத்தில் வாக்களிப்பதற்கு 5 கோடியே 51 லட்சத்து 14 ஆயிரத்து 867 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில், பெண்கள் 2 கோடியே 75 லட்சத்து 21 ஆயிரத்து 110 பேர். ஆண்கள், 2 கோடியே 75 லட்சத்து 18 ஆயிரத்து 298 பேர்.
 
தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளிலும் 55 பெண் வேட்பாளர்கள் உள்பட 845 பேர் களம் இறங்கியுள்ளனர். அவர்களில் 517 பேர் சுயேச்சை வேட்பாளர்கள். தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்ற கட்சிகள் மற்றும் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் சார்பில் 137 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தென் சென்னை மக்களவைத் தொகுதியில் அதிகபட்சமாக 42 பேரும், நாகப்பட்டினம் (தனி) தொகுதியில் குறைந்தபட்சமாக 9 பேரும் போட்டியிடுகிறார்கள்.
 
தமிழகத்தில் 9 ஆயிரத்து 226 வாக்குச்சாவடிகள் மிகவும் சிக்கலான மற்றும் பிரச்சனைக்குரிய வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. ஆனாலும், 17 ஆயிரம் வாக்குச் சாவடிகள் காலை முதல் வாக்குப்பதிவு முடியும் வரை வெப்-காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். இந்த நேரலை காட்சிகளை ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பார்வையிட வசதி செய்யப்பட்டுள்ளது.
 
மக்களவைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஒரு லட்சத்து 27 ஆயிரம் போலீஸாரும், வாக்குச்சாவடிகளில் 3 லட்சத்துக்கும் அதிகமான அதிகாரிகள்-அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
மக்களவைத் தேர்தல் பணியில் 2.93 லட்சம் அதிகாரிகளும், அலுவலர்களும் ஈடுபட்டுள்ளனர். மொத்தமாக 60 ஆயிரத்து 817 வாக்குச்சாவடிகள் உள்ளன. மொத்தமாக 64 ஆயிரத்து 190 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், ஒரு லட்சத்து 14
 
ஆயிரத்து 748 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன. வாக்குப்பதிவுக்கான இயந்திரங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
 
வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்வதற்கான புதிய வசதி மத்திய சென்னை தொகுதியில் உள்ள 1,153 வாக்குச்சாவடிகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மாலை ஆறு மணிக்குள் வரும் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்கலாம். வாக்குப் பதிவு முடிவடைய சில நிமிடங்களுக்கு முன்பாக வாக்காளர்கள் வந்தால், அவர்களுக்கு பின் வரிசையில் இருந்து டோக்கன்கள் வழங்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.