வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 25 ஏப்ரல் 2014 (13:41 IST)

தேர்தலைப் புறக்கணித்த மலை கிராம மக்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஏக்கல்நத்தம் மலை கிராம மக்கள், சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு நிறைவேற்றாததால், வாக்களிக்க மறுத்து தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.
 
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது ஏக்கல்நத்தம் மலைக் கிராமம். கிருஷ்ணகிரியிலிருந்து 23கி.மீ. தொலைவில் இந்த மலைக் கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்துக்குச் செல்ல சரியான சாலை வசதி இல்லை.
 
இந்தக் கிராமத்தில் 400 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். மக்களவைத் தேர்தலில் இந்த மலைக் கிராம மக்கள் வாக்களிக்க அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டது.
 
இக்கிராமத்தில் 172 பெண் வாக்காளர்கள் உட்பட 402 வாக்காளர்கள் உள்ளனர். கிருஷ்ணகிரியிலிருந்து இங்கு செல்ல பெரியசாக்கனவூர் கிராமம் வரை மட்டுமே தார்ச்சாலை வசதியுள்ளது. அங்கிருந்து அந்தக் கிராமத்துக்குச் செல்ல 4கி.மீ. தொலைவுக்கு நடத்துதான் செல்ல வேண்டும். இங்கு சுகாதாரமான குடிநீர் வசதியும் இல்லை என்று கூறப்படுகிறது.
 
இந்நிலையில், 1996ஆம் ஆண்டு முதல் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
 
இதையடுத்து, கிருஷ்ணகிரி வட்டாட்சியர், காவல்துறையினர் கிராம மக்களைச் சந்தித்து பேசியுள்ளனர், ஆனால் இதை கிராம மக்கள், ஏற்கமல் தேர்தலைப் புறக்கணித்த கூறப்படுகிறது.