வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: வெள்ளி, 18 ஏப்ரல் 2014 (15:18 IST)

ஊழல் வழக்கில் 2 ஆண்டு சிறை: எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் செல்வகணபதி

ஊழல் வழக்கில் சிபிஐ நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததால் தனது எம்.பி. பதவியை செல்வகணபதி ராஜினாமா செய்தார்.
 
தமிழகத்தில் 1991 முதல் 1996-ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சி நடந்த போது, மத்திய அரசு திட்டமான ஜவஹர் யோஜ்கர் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியைக் கொண்டு தமிழகத்தில் உள்ள சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் பணியை தமிழக அரசு மேற்கொண்டது. 
 
இந்த திட்டத்தில் பெரும் ஊழல் நடப்பதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார். இதனடிப்படையில், 1996-ம் ஆண்டு சிபிஐ போலீசார் வழக்குப்பதிவு செய்தது.
 
இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்ட ஐவர் மீது  சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில் செல்வகணபதி, ஆச்சாரியலு, சத்திய மூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு தலா 2 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.50 ஆயிரமும், பாரதிக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
 
தண்டனை 2 ஆண்டு ஜெயில் என்பதால், 5 பேரும் 2 மாதங்களுக்குள் அப்பீல் செய்யும் வரை ஜெயிலுக்கு செல்ல வேண்டியதில்லை. அதுவரை இந்த ஜெயில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், நாடாளுமன்ற மேல்சபையில் திமுக கொறடாவாக பதவி வகிக்கும் செல்வகணபதி, தனது எம்.பி. பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
 
தனது ராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை செயலகத்திற்கு அனுப்பியுள்ளதாக தர்மபுரியில் நிருபர்களை சந்தித்த செல்வ கணபதி தெரிவித்தார்.