வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 16 ஏப்ரல் 2015 (19:32 IST)

ஆந்திர துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஒருவரின் உடலுக்கு மறுபிரேதப் பரிசோதனை

ஆந்திர மாநிலம் சேஷாச்சலம் வனப்பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 பேரில் ஒருவரான சசிகுமார் என்பவரின் உடலை மறுபரிசோதனை செய்ய ஹைதராபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
அவரது மனைவி முனியம்மாள் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி ஆந்திர மாநிலம் திருப்பதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் செம்மரம் கடத்தச் சென்றார்கள் என்று கூறப்பட்டு, செம்மரக் கடத்தல் தடுப்பு சிறப்பு அதிரடிப் படையினரால் தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
 
இவர்களது உடல்கள் திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்து, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
இதில் திருவண்ணாமலை மாவட்டத்தின் அடிவாரத்தைச் சேர்ந்த ஆறு பேரின் உடல்களை மறுபிரேதப் பரிசோதனை செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இதில் உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
 
அவர்களது உடலை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் -13 டிகிரி வெப்பநிலையில் பாதுகாக்க உத்தரவிட்டது.
 
இதையடுத்து, சசிகுமார் என்பவரது மனைவி முனியம்மாள் ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் தனது கணவரது உடலை மறுபிரேதப் பரிசோதனை செய்ய வேண்டுமெனக் கோரி வழக்குத் தொடர்ந்தார்.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கல்யாண் சென் குப்தா, சஞ்சய் குமார் ஆகியோர், சசிகுமாரின் உடலை சென்னை அரசு தலைமை மருத்துவமனையில் மறுபிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிட்டனர்.
 
அப்போது ஹைதராபாதில் உள்ள நிஜாம் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சசைச் சேர்ந்த மூன்று மருத்துவநிபுணர்கள் உடனிருக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.
 
முந்தைய பிரேதப் பரிசோதனையை மேற்கொண்ட மருத்துவர்களும் விரும்பினால், உடனிருக்கலாம் எனவும் நீதிபதிகள் கூறினர். இந்தப் பிரேதப் பரிசோதனையை 20ஆம் தேதிக்குள் செய்ய வேண்டுமென நீதிமன்றம் கெடுவிதித்துள்ளது.
 
இந்த மருத்துவர்கள் குழுவுக்கு தமிழக அரசு தகுந்த பாதுகாப்புத் தர வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
இந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டு, தற்போது திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பாதுகாக்கப்படும் மற்றவர்களின் உடல் குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். விரும்பினால், அவர்கள் இதுதொடர்பாக தனியாக மனுத்தாக்கல் செய்ய வேண்டுமென நீதிமன்றம் கூறியுள்ளது.