1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 2 அக்டோபர் 2015 (00:19 IST)

அதிமுக அரசு செயலற்றது: மு.க.ஸ்டாலின் மீண்டும் தாக்குதல்

அதிமுக அரசு செயலற்றது என திமுக பெருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
நமக்கு நாமே பயணத்தின் 12ஆவது நாளை புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகாலை நடைபயணத்தோடு துவங்கினேன். அறந்தாங்கி நகரத்தில் அங்கு காலை நேரத்தில் மளிகைப் பொருட்கள் வாங்குபவர்கள், காய்கறி வியாபாரிகள் மற்றும் விவசாயிகளை சந்தித்து பேசினேன்.
 
காவிரி டெல்டா எல்லையோரத்தில் இருக்கும் ஆலங்குடி பகுதியின் பெரும்பான்மையான கிராமவாசிகள் விவசாயிகள் ஆவர். இவர்கள் தமிழ்நாடு முழுக்க தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் எதிர்கொள்ளும் துயரங்களை எடுத்துரைத்தனர்.
 
அவர்களுடைய பகுதியில் உள்ள கால்வாய்களும் அதிமுக அரசால் கடந்த நான்கு வருடங்களாக தூர்வாரப்படவில்லை என்று தெரிவித்தனர். இதன் காரணமாக தங்களின் விளைநிலங்களுக்கு தண்ணீர் எப்போதாவது தான் கிடைப்பதால், அவர்களுடைய வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
 
நிலக்கடலை விவசாயிகள் தங்களுடைய சந்தைகளில் விற்பனை ஒழுங்குமுறையுடன் இல்லை என புகார் கூறினர். சந்தை விலைகளில் காணப்படும் கடுமையான ஏற்ற இறக்கங்கள் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் வாழ்வாதரங்களை பாதித்துள்ளதால் அந்தப் பகுதியில் எண்ணெய் ஆலைகள் கூட மூடப்பட்டுவிட்டன.
 
இதே போன்ற பிரச்சனைகள் தென்னை விவசாயிகளுக்கும் இருக்கின்றன. அவர்கள் முறையற்ற விலை நிர்ணயம் காரணமாக தாங்கள் கேரள மாநில விவசாயிகளுடன் கொப்பரை சந்தையில் தோல்வியடைந்துவிடுவோம் என அஞ்சுகிறார்கள்.
 
உயர் பன்னாட்டு சந்தை மதிப்பு கொண்ட தென்னையின் ஆற்றலை நாங்கள் அங்கீகரிப்போம் என அவர்களிடம் உறுதி கூறினேன். நாம் மிகப்பெரிய தென்னை உற்பத்தியாளர்களில் ஒருவராக இருந்து கொண்டு, மாநிலத்தில் தென்னைக்கு சிறந்த சந்தைகளை உருவாக்கித்தருவது இன்றியமையாதது ஆகும்.
 
மேலும், தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இலவச விவசாய உபகரணங்கள், குளிர்பதன சேமிப்பு கிடங்கு வசதிகள், இலவச சொட்டு நீர் பாசனம் போன்ற வாக்குறுதிகளில் அதிமுக அரசு கடந்த நான்காண்டுகளில் ஒன்றைக்கூட நிறைவவேற்றவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர். நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பான விவசாயம், திறனற்ற அரசால் வலுவிழந்து வருவது வேதனைக்குரியது.
 
அதிமுக அரசு செயலற்றது என்பதும், தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், பொது மக்களை திசைதிருப்ப புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட பழைய திட்டங்களை திரும்ப அறிவித்துக்கொண்டு இருக்கிறது என்பதும் தெளிவாக தெரிகிறது.
 
உண்மையில், திமுக ஆட்சியில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி திட்டத்துக்கு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, அடிக்கல்லும் நாட்டப்பட்டது. ஆனால், அதை 2011 ஆம் ஆண்டு நிறுத்திவிட்டு தற்போது அதையே புதிய திட்டமாக அதிமுக அரசு அறிவிக்கிறது.
 
அதிமுகவின் பொய்களை நம்ப நம்முடைய மக்கள் ஒன்றும் முட்டால்களல்ல. மாறிவரும் காலம் மற்றும் வளர்ந்து வரும் அரசியல் போக்கு மீது நான் நம்பிக்கையுடையவன். தலைவர்களையும், அரசியல்வாதிகளையும் சந்திக்க மக்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கும் காலம் மலையேறிவிட்டது.
 
இனி, ஒவ்வொரு தலைவரும், அரசியல்வாதியும் மக்களின் தேவைகளை உணர்ந்து, அவற்றை நிறைவேற்றும் பொருட்டு அவர்களிடம் இறங்கிவர வேண்டும். அப்படி மக்களை முன்னிலைப்படுத்தும் அணுகுமுறையை காப்பாற்ற நாங்கள் அர்ப்பணிப்போடு பாடுபடுவோம் என தெரிவித்துள்ளார்.