வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Updated : செவ்வாய், 24 ஜனவரி 2017 (12:48 IST)

போராட்டக்கார்களை கொச்சைப்படுத்திய ஹிப் ஹாப் ஆதி: கவிஞர் யுகபரதி வேதனை

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு ஆதரவாக போராடிய மாணவர்கள் மீதான தடியடி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் முதல்நாள் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழாவின் பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பெதிவிட்டு வருகின்றனர்.


 

இந்நிலையில் இது குறித்து திரைப்பட பாடலாசிரியர் யுகபாரதி தனது கருத்துக்களை முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

ஒரு வரலாற்று நிகழ்வுக்குப் பங்குபற்றிய அத்தனை மாணவர்களையும் இளைஞர்களை பொதுமக்களையும் வணங்கத் தோன்றுகிறது. போராட்டத்தின் செல்நெறியை மிக அழகாக வடிவமைத்த மெரினா தோழர்களுக்கே இதில் முக்கிய இடமிருப்பதாக கருதவேண்டும். சட்டமன்றத்தில் அரங்கேற்றப்படுவதற்குள் போராட்டத்தின் வெற்றியை பத்திரிகையாளர்களுக்கு அறிவித்த கார்த்திகேயன்சேனாதிபதி உள்ளிட்டோர் அரசின் ஊதுகுழலாக மாறவேண்டிய அவசரம் எங்கிருந்து வந்தது?.

உங்களால் இத்தனை ஆண்டுகளாக செய்ய முடியாத ஒரு காரியத்தை மாணவர்களும் இளைஞர்களும் சாத்தியப்படுத்த முனைந்திருக்கும் பொழுது அவர்கள் இல்லாமல் தாங்களே இப்போராட்டத்திற்கான காரணமாக காட்டிக்கொள்ள விளைந்த செயல் பாராட்டுக்குரியதல்ல. குறிப்பாக, இசையமைப்பாளர் ஆதியின் பேச்சு போராட்டத்தின் தன்மையைப் புரிந்துகொள்ளமுடியாத போதாமையை வெளிப்படுத்தியது. இன்னும் சொல்லப்போனால் போராளிகளையே கொச்சைப்படுத்தும்விதமாக அமைந்தது.

தன்னுடைய பாட்டுக்காக கூடிய கூட்டமாக அவர் கருதி பேசிய தொனி, அறியாமையின் அல்லது முட்டாள்தனத்தின் உச்சம். கூடவே, நடிகர் லாரன்ஸ், ஆர்.ஜே பாலாஜி போன்றோர் போராட்டத்தை முடித்துக்கொள்ள காட்டிய தீவிரம் விவாதிக்கப்படவேண்டியது. காவல்துறை வன்முறையைப் பிரயோகிக்கத் தொடங்கியதும் அவர்கள் கதறிய கதறல் போராட்ட அனுபவமில்லாத மிடில்கிளாஸ் மிமிக்கிரி. இதில், முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமனே இப்போராட்டத்தின் இறுதி அத்தியாயத்தை எழுதிய பெருமைக்குரியவர். ஒரு போராட்டம் எப்படி தொடங்கப்படவேண்டும் என்பதும் அது யாரால் முடிக்கப்படவேண்டும் என்பதையும் அவசரக் குடுக்கை ஐவர்குழு இப்போது உணர்ந்திருக்கக்கூடும்.

போராளிகளை கலையச் சொன்ன அவர்கள் அறிவுரைகள் கசப்பான எண்ணங்களை அவர்கள் மீது தோற்றுவித்திருக்கிறது. ஒருவிதத்தில் மாநில அரசின் ஆசையை வெளிப்படுத்தியதால் தேவையற்ற விமர்சனத்திற்கு உள்ளாகிறார்கள். கூட்டத்தை கலைக்க ஏன் அத்தனை அவசரம் உங்களுக்கு? இருபது வருடமாக போராடி பெற முடியாத வெற்றியை, ஏழே நாளில் சாதித்த மாணவர்களே பெருமைக்குரியவர்கள். எல்லோரையும் ஒன்றிணைத்து பத்திரிகையாளர்களைச் சந்தித்திருந்தால் அம்பலத்தரசுவிலிருந்து ஆதிவரை போராளியாக பார்க்கப்பட்டிருப்பார்கள். பாவம், அவர்களுக்கு அவர்கள் அவசரத்தினால் அந்தத் தகுதியைப் பெறமுடியாமல் போய்விட்டது. வரலாறு, நிதானமுள்ளவர்களின் கைகளில்தான் இப்போதும் வந்து சேர்ந்திருக்கிறது. தொடக்கம் மட்டுமல்ல முடிவில் ஒன்றாயிருப்பதையே போராளிகள் விரும்புவது என்று பதிவிட்டுள்ளார்.