வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 14 பிப்ரவரி 2022 (17:26 IST)

கோவை யூ-ட்யூபர் ரூ.300 கோடி மோசடி செய்ததாக சர்ச்சை!

யூ-ட்யூப்பில் செயல்பட்டு வரும் Mr.money என்கிற யூ-ட்யூப் சேனலை நடத்தி வருபவர் விமல். இதன் மூலம் முதலீடு செய்வது தொடர்பான ஆலோசனை மற்றும் பயிற்சிகளை வழங்கியும், நேரலை நிகழ்வுகளை நடத்தியும் வந்துள்ளார்.
 
இவர் தமிழகம் முழுவதும் பலரிடம் அந்நிய செலாவணி, பங்குகள், கிரிப்டோகரன்சி ஆகியவற்றில் முதலீடு செய்து அதிக லாபம் பெற்றுத் தருவதாக, ஆல்பா என்கிற பெயரில் கணக்கை தொடங்கி பணம் வசூல் செய்துள்ளார். ரூபாய் ஒரு லட்சம் முதலீடு செய்தால், அடுத்த 10 மாதத்திற்கு ரூ.18,000 தருவதாகக் கூறி பணம் வசூலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
 
இந்த நிலையில் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு விமலிடமிருந்து பணமும் வரவில்லை, அவரை தொடர்பு கொள்ள முடியவுமில்லை என்று முதலீடு செய்தவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு தமிழகம் முழுவதும் இவர் நேரடியாகவும், வங்கி கணக்கு மூலமாகவும் ரூ.300 கோடி ரூபாய் வரை விமல் வசூல் செய்து ஏமாற்றியுள்ளதாக பாதிக்கபட்டவர்கள் தற்போது கூறியுள்ளனர்.
 
இந்த விவகாரத்தில் விமலை தற்போது தொடர்பு கொள்ள முடியாத நிலையில், கோவை மாவட்டம் காளப்பட்டியில் இயங்கி வந்த அவருடைய நிறுவனம் மற்றும் அவருடைய வீடு தற்போது மூடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், விமலிடம் பணம் முதலீடு செய்தவர்கள் இன்று கோவை வந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.