1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வெள்ளி, 31 ஜூலை 2015 (00:23 IST)

யாகூப் மேமனுக்கு தூக்கு: மத்திய அரசுக்கு ஏன் இத்தனை அவசரம்? எஸ்டிபிஐ கேள்வி

யாகூப் மேமன் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் சட்டம் தந்திருக்கும் அவகாசங்களையும் மீறி, இவ்வளவு அவசரம் காட்டியிருப்பது ஏன்? என மத்திய அரசு மீது எஸ்டிபிஐ கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
 

 
இது குறித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
யாகூப் மேமன் மீதான கருணை மனுக்களும், சீராய்வு மனுக்களும் நிராகரிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டிருக்கிறார். இதன் மூலம் இந்த நாட்டின் அரசியல் அமைப்பு தந்திருக்கும் நீதி பரிபாலன நடவடிக்கைகள் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளன.
 
இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், இந்த நாட்டின் மீதும், சட்டத்தின் மீதும் நம்பிக்கை வைத்து சரணடைந்த ஒருவருக்கு அநீதி இழைக்கப்பட்டதன் மூலம் மனித உரிமை தளத்தில், நீதி நடவடிக்கையில் உலக அரங்கில் நாட்டிற்கு பெரும் தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது.
 
யாகூப் மேமன் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் சட்டம் தந்திருக்கும் அவகாசங்களையும் மீறி, இவ்வளவு அவசரம் காட்டியிருப்பது ஏன்?
 
இந்த அவசரத்தை மும்பை கலவர வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் மீதும், குஜராத் படுகொலை வழக்குகளில் சம்பந்தபட்ட குற்றவாளிகள் மீதும், பாபரி மஸ்ஜித் இடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகள் மீதும் காட்டாதது ஏன்?
 
யாகூப் மேமனின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதின் மூலம் இந்திய நீதி பரிபாலன முறையில் பாரபட்சமும், இரட்டை நிலையும் மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
 
கடந்த 10 ஆண்டுகளில் 1303 தூக்கு தண்டனை தீர்ப்புகள் விதிக்கப்பட்டுள்ளன. பலரின் கருணை மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த 10 ஆண்டுகளில் மூன்று பேருக்கு மட்டுமே தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
இந்த மூன்று பேருமே இஸ்லாமியர்கள் என்பது கவனிக்கப்பட வேண்டியது. ஆகவேதான், முஸ்லிம்களுடைய விசயத்தில் ஏன் இந்த அவசரம் என கேள்வி எழுப்புகிறோம்.
 
தூக்குத் தண்டனைக்காக யாகூப் மேமனின் பிறந்தநாளை தேர்ந்தெடுந்து அதில் அவசரம் காட்டிருப்பதும் பழிவாங்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாகவே பார்க்கப்படுகிறது.
 
யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதன் மூலம், இந்திய நீதித்துறையின் மீதான கோடிக்கணக்கான மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையும், மரியாதையையும் புதைக்கவே இது உதவும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் அது பழிவாங்கும் நடவடிக்கையாக அமையக்கூடாது என்பதே நமது கோரிக்கை.
 
மரண தண்டனையை எதிர்த்த முன்னாள் குடியரசு தலைவர் மறைந்த டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் நல்லடக்கம் நடைபெறும் வேளையில், யாகூப் மேனனுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியதன் மூலம் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் மரண தண்டனை குறித்த கோரிக்கையும் குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டது என தெரிவித்துள்ளார்.