வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 1 டிசம்பர் 2016 (11:11 IST)

மனைவி திட்டமிட்டு நாடகம் - கணவனை தீர்த்துக் கட்டிய காதலன்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவியே காதலுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

வடபழனி பக்தவச்சலம் காலனி 2ஆவது தெருவில் வசித்து வந்தவர் கோபாலகிருஷ்ணன் (35). இவரது மனைவி பாரதி (28). மயிலாப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இதற்கிடையில், காட்பாடியை சேர்ந்த ரவீரந்திரன் (25) என்பவர் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். நானும், ஒரே நிறுவனத்தில் பணிபுரிவதால், இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இருவரது கள்ளக்காதல் விவகாரம் கோபாலகிருஷ்ணனுக்கு தெரியவந்ததை அடுத்து, மனைவி பாரதியை கண்டித்துள்ளார். இதனால், மனைவி பாரதி மற்றும் ரவீந்திரன் இருவரும் எரிச்சலடைந்துள்ளனர்.

இதனையடுத்து, கோபாலகிருஷ்ணனை தீர்த்துக்கட்டி விட்டு வாழ்க்கையில் சந்தோ‌ஷமாக இருக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர். மேலும், இருவரும் காவல் துறையினரிடம் சிக்காமல் இருக்க வீட்டில் கொள்ளை அடிப்பதுபோல் நாடகம் ஆடியுள்ளனர். இந்த யோசனைக்கு மனைவி பாரதியே திட்டம் வகுத்து கொடுத்துள்ளார்.

அதன்படி சம்பவத்தன்று இரவு கணவன் - மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு தூங்கினர். அதிகாலை 3 மணி அளவில் யாரோ வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டுள்ளது. கோபாலகிருஷ்ணன் கதவை திறந்த போது எதிரில் கத்தியுடன் வாலிபர் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அந்த வாலிபர் திடீரென கோபாலகிருஷ்ணனை தாக்கி, பின்னர் அவரது கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கோபாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து வீட்டில் இருந்த பாரதி மீது மயக்க ஸ்பிரே அடித்தார். இதில் அவர் மயங்கினார்.

பின்னர் அவரது கை, காலை கயிற்றால் கட்டிப்போட்டு அணிந்திருந்த நகை மற்றும் வீட்டில் இருந்த பணத்தை கொள்ளையடித்து ரவீந்திரன் தப்பிச் செல்வதுபோல் அங்கிருந்து தப்பியுள்ளார்.

இதற்கிடையே, பதட்டத்துடன் ரவீந்திரன் ஓடியதை கண்டு வடபழனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஏட்டு சங்கர், ஓட்டுநர் டிரைவர் சமுத்திரவேல் ஆகியோர் விரட்டிப் பிடித்தனர். அப்போது சோதனை போடுகையில், கைப்பையில் ரத்தக்கறை படிந்த சிறிய கத்தி, நகை, பணம் இருந்துள்ளது.

பின்னர், விசாரணையில் கள்ளக்காதல் தகராறில் காதலியின் கணவரை கொன்று தப்பி வந்ததாக தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த காவல் துறையினர் ரவீந்திரனை கொலை நடந்த வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

அங்கு கோபாலகிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அருகில் மயக்க நிலையில் பாரதி கை, கால் கட்டப்பட்டு இருந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் காதலனை கொன்றதை பாரதி ஒப்புக்கொண்டார். மேலும், கொலையை திசை திருப்ப கொள்ளை நாடகம் ஆடியதையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து பாரதி, அவரது கள்ளக்காதலன் ரவீந்திரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.