1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 25 மே 2019 (09:03 IST)

தேமுதிகவின் வீழ்ச்சி ஏன்? தொண்டர்கள் உணர்வை மதிக்காத தலைமை!

விஜயகாந்த் ஆரம்பித்த தேமுதிக கட்சி கடந்த 2009ஆம் ஆண்டு தேர்தலில் தனித்து போட்டியிட்டு 10 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று மக்களின் செல்வாக்கை பெற்றது. இந்த செல்வாக்கை அப்படியே காப்பாற்றி கொள்ள தெரியாமல் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல் இந்த தேர்தலில் இக்கட்சிக்கு வெறும் 2 சதவிகித வாக்குகளே கிடைத்துள்ளது
 
2011ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்ததில் இருந்தே இக்கட்சியின் இறங்குமுகம் தொடங்கிவிட்டது. அதிமுக, திமுகவுக்கு மாற்றுக்கட்சி என்று தேமுதிகவை நம்பியவர்களுக்கு கிடைத்த அதிர்ச்சி இது. இந்த தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29ல் வெற்றி பெற்றாலும் ஒருசில மாதங்களில் அதிமுகவுடனான கூட்டணியை முறித்து கூட்டணி தர்மத்தையும் இக்கட்சி காப்பாற்றி கொள்ளவில்லை
 
மேலும் 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்க தேமுதிக தலைமை கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்டது தேமுதிக. ஆனால் முதல்வர் பதவி என்ற ஆசையை மக்கள் நல கூட்டணியினர் காண்பித்ததால் படுகுழியில் விழுந்தது தேமுதிக. இந்த தேர்தலில் விஜயகாந்த் உள்பட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். இந்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தால் திமுக ஆட்சியை பிடித்திருக்கும், விஜயகாந்திற்கும் ஒரு அமைச்சர் பதவி கிடைத்திருக்கும்
 
அதேபோல் 2019 மக்களவை தேர்தலிலும் திமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தபோதே அதிமுகவிலும் பேரம் பேசியது. இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி இந்த கட்சியின் இமேஜை அடியோடு நொறுக்கியது. மேலும் பிரேமலதாவின் ஆணவத்தனமான பத்திரிகையாளர் சந்திப்பால் மக்கள் வெறுப்பு அடைந்தனர். இந்த தேர்தலிலும் தேமுதிக தான் போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது.
 
2016, 2019 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் திமுகவுடன் தான் கூட்டணி வைக்க வேண்டும் என தேமுதிக தொண்டர்கள் விருப்பம் தெரிவித்தனர், ஆனால் தொண்டர்கள் விருப்பத்தை மீறி தவறான முடிவெடுத்ததில் பிரேமலதாவுக்கே அதிக பங்கு இருப்பதாக அக்கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன. தேமுதிக என்று விஜயகாந்த் பிடியில் இருந்து பிரேமலதா பிடிக்கு மாறியதோ அன்றில் இருந்தே தேமுதிக பின்னடவை சந்தித்து வருவதாகவும், இனிமேலாவது தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தலைமை முடிவெடுக்க வேண்டும் என்றும் அக்கட்சியின் தொண்டர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.