1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (20:35 IST)

மகாமகத்தில் ஜெ.வும், சசிகலாவும் கலந்துகொள்வார்கள் என்ற செய்தி பீதியை ஏற்படுத்தியுள்ளது - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

மகாமகத்தில் ஜெ.வும், சசிகலாவும் கலந்துகொள்வார்கள் என்ற செய்தி பீதியை ஏற்படுத்தியுள்ளது - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

மகாமக விழாவில் முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் கலந்து கொண்டு குளிப்பார்கள் என்ற செய்தியே மக்களுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.விகே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’கும்பகோணத்தில் நடைபெற உள்ள மகாமக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளது.
 
மகாமக விழாவில் முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் கலந்து கொண்டு குளிப்பார்கள் என்ற செய்தியே மக்களுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.  
 
பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ற பெயரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புனித நீராட வரும் பக்தர்களை அவஸ்தைகளுக்கு ஆளாக்காமல், அவர்கள் நிம்மதியுடன் புனித நீராடிச் செல்ல முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் மகாமக விழாவிற்கு குளிக்கச் செல்லாமல் தவிர்ப்பதே தமிழக மக்களுக்கு செய்யும் பேருதவியாக இருக்கும் என தெரிவித்துக் கொள்கிறேன்.
 
மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரின் விருப்ப மனுக்கள் பெறுவது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவனில் பெரும் உற்சாகத்துடன் தற்போது நடைபெற்று வருகிறது. 
 
தமிழக காங்கிரஸ் கட்சித் தொண்டர்களிடம் ஏற்பட்டுள்ள இந்த பெரும் எழுச்சி ‘பிறவிப்பயனை அடைந்தேன்’ என மிகப்பெரும் மனமகிழ்வை எனக்குள் ஏற்படுத்தியுள்ளது.
 
ஆயிரக்கணக்கான காங்கிரஸ் பேரியக்கத் தொண்டர்கள் பெரும் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை தொடர்ந்து தாக்கல் செய்து வருவதால், தொண்டர்களின் வேண்டுகோளுக்கு இணங்க விருப்ப மனுக்கள் பெறுவது பிப்ரவரி 15ம் தேதி கடைசி நாள் என்பது பிப்ரவரி 17ம் தேதி வரை நீட்டிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதனை இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.