செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 26 ஏப்ரல் 2020 (14:02 IST)

சென்னையை சுற்றி சிவப்பு தக்காளிகள்: மழைக்கு கேரண்டி கொடுக்கும் வெதர்மேன்!!

இன்று பெய்த மழை போல் இன்னும் 4 நாட்களில் நல்ல மழை பெய்யும் என தமிழக வெதர்மேன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
 
சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணி முதல் திடீரென சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் நகர் முழுவதும் வெயிலின் வெட்கை தணிந்து குளிர்ச்சியானது.
 
சென்னையின் முக்கிய பகுதிகளான வேளச்சேரி, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம் போன்ற பகுதிகளிலும், பூவிருந்தவல்லி, ஆவடி, அம்பத்தூர், திருநின்றவூர், போரூர், திருமுல்லைவாயில், பட்டாபிராம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் காற்றுடன் பலத்த மழை பெய்தது. 
 
மேலும் பெருங்களத்தூர், வண்டலூரில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது. நல்ல மழை பெய்ததால் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இருப்பினும் வாகனப்போக்குவரத்து இல்லை என்பதால் எந்தவித பிரச்சனையும் இல்லை.
 
ஏற்கனவே இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு, தமிழகம் புதுச்சேரி ஆகிய கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட பெரும்பாலான கடலோர மாவட்டங்களில், மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது என்பது குறிப்ப்பிடத்தக்கது. 
 
இதேப்போல தமிழக வெதர்மேன் பிரதீப் ஜான், தற்போது முதல் பேட்ச் மழை பெய்துள்ளது. அடுத்தது பெரிய அளவில் மழை பெய்யவுள்ளது. கடல் காற்று வலுவிழந்து வருவதால் அதிக மேகக் கூட்டங்களாக மாற வாய்ப்புள்ளது. 
 
சென்னையை சுற்றி சிவப்பு தக்காளிகள் உள்ளன. எனவே இன்று பெய்த மழை போல் இன்னும் 4 நாட்கள் நல்ல மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.