1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 9 டிசம்பர் 2016 (10:58 IST)

சசிகலாவின் கஸ்டடியில் ஜெயலலிதா இருந்தாரா?: சிபிஐ விசாரிக்க சசிகலா புஷ்பா அதிரடி!

சசிகலாவின் கஸ்டடியில் ஜெயலலிதா இருந்தாரா?: சிபிஐ விசாரிக்க சசிகலா புஷ்பா அதிரடி!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மிகப்பெரிய சதி செய்து சசிகலாவின் குடும்பத்தினர் கஸ்டடியில் வைத்திருந்ததாகவும். அவரை விசாரிக்க வேண்டும் எனவும். சிபிஐ விசாரணை இது தொடர்பாக நடத்த வேண்டும் என சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.


 
 
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து மரணம் அடைந்தது வரை பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.
 
முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்தவித வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் மிகவும் ரகசியமாக செயல்பட்டனர். இறுதியில் அவர் மரணமடைந்ததால் இது பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுத்து விட்டது.
 
இந்நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா இது குறித்து பேசியபோது, ஆரம்பத்தில் இருந்து முதல்வருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அப்போலோ நிர்வாகம் எந்தத் தகவலையும் முறையாகச் சொல்லவில்லை. முதல்வருக்கு வெளிப்படையான சிகிச்சை வேண்டும் என்று முதலில் இருந்தே கூறி நான் வந்ததை யாரும் கேட்கவில்லை.
 
ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்று இதுவரை தெரியவில்லை. அவருடன் ஒரு பெண்மணி மட்டும் தான் உடன் இருந்திருக்கிறார். அவரது குடும்பம் தான்  மிகப்பெரிய சதி செய்து ஜெயலலிதாவை தன்னுடைய கஸ்டடியிலேயே வைத்திருந்திருக்கிறார்கள்.
 
கட்சியினர் அனைவரையும் அந்த பெண்மணி தான் ஆட்டிவித்துக் கொண்டிருக்கிறார். அவரை விசாரித்தால், ஜெயலலிதா மரணம் குறித்த அனைத்து தகவல்களும் வெளியே வரும். சிபிஐ விசாரணை இது குறித்து நடத்தப்பட வேண்டும். மேலும் நாடாளுமன்றத்தில் இது குறித்து பேசுவேன் என்றார்.