வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: புதன், 29 ஜூலை 2015 (08:14 IST)

வாக்காளர் பட்டியலில் குளறுபடி: தலைமை தேர்தல் ஆணையரிடம் திமுக மனு

தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி, அரசாங்க அதிகாரிகளின் உதவியுடன் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை செய்வதில் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளது என்று திமுக சார்பில் தலைமை தேர்தல் ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
 
தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி, தேர்தல் ஆணையர் அச்சல்குமார் ஜோதி ஆகியோரிடம் டெல்லியில், திமுக சார்பில், எம்.பி.க்கள் திருச்சி சிவா, எஸ்.தங்கவேலு ஆகியோர்  திமுக எம்.பி. கனிமொழி கையெழுத்திட்ட ஒரு மனு கொடுத்தனர்.
 
அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:-
 
தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியானது அரசாங்க அதிகாரிகளின் உதவியுடன் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை செய்வதில் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளது.
 
சில வாக்காளர்களின் பெயர்கள் இரண்டு இடங்களில் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து ஏற்கனவே புகார் அளித்திருந்தோம். தற்போது வாக்காளர் பட்டியலில் ஆளுங்கட்சிக்கு உதவும் வகையில் சில பெயர்களை நீக்கும் பணியிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.
 
தேசிய வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் திட்டம் என்ற பெயரில் ஆளுங்கட்சி அரசாங்க அதிகாரிகளுடன் கூட்டுசேர்ந்து தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களை சேர்க்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.
 
வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் என்ற பெயரிலும் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் திட்டம் என்ற பெயரிலும் பல முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன.
 
இதில் ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்காளர்களின் பெயர்களை நீக்குதல் மற்றும் ஆதரவானவர்களின் பெயர்களை சட்டவிரோதமாக சேர்த்தல் போன்ற காரியங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
 
இதனால் ஆளுங்கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் சுமார் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
 
இது ஜனநாயக நடைமுறைகளை கேலி செய்யும் வகையில் அமைந்துள்ளது. எனவே ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கையை எடுக்குமாறு வேண்டுகிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.