1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 10 ஏப்ரல் 2017 (10:57 IST)

சசிகலாவை சந்திக்க முடியாமல் தவிக்கும் குடும்ப உறவுகள்: சிறைத்துறை அதிரடி நடவடிக்கை!

சசிகலாவை சந்திக்க முடியாமல் தவிக்கும் குடும்ப உறவுகள்: சிறைத்துறை அதிரடி நடவடிக்கை!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குற்றவாளி சசிகலாவை இனிமேல் சிறையில் அடிக்கடி சந்திக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. 15 நாட்களுக்கு ஒருமுறை தான் கைதி சசிகலாவை சந்திக்க அனுமதிக்க முடியும் என பெங்களூரு சிறை நிர்வாகம் கூறியுள்ளது.


 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி தான் என அவரது தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். இதனையடுத்து அவருக்கு விதிக்கப்பட்டிருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
 
சிறையில் அடைக்கப்பட்டதும் சொகுசு வாழ்க்கை வாழ பல சலுகைகளை கேட்டார் சசிகலா ஆனால் சிறை நிர்வாகம் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. மேலும் சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து பலரும் அவரை அடிக்கடி சிறைக்கு சென்று சந்தித்து வந்தனர்.
 
இந்நிலையில் நரசிம்ம மூர்த்தி என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் சசிகலாவை ஒரு மாதத்தில் சந்தித்தவர்கள் பட்டியலை பெற்றார். அதில், கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதியில் இருந்து மார்ச் 18-ஆம் தேதி வரை 31 நாட்களில் சசிகலாவை 28 பார்வையாளர்கள் வந்து பார்த்துள்ளனர்.
 
சசிகலாவின் கணவர் நடராஜன், வழக்கறிஞர், டிடிவி தினகரன், வளர்மதி, கோகுல இந்திரா, மன்னார்குடி உறவுகள் என பலரும் அவரை அடிக்கடி சந்தித்தது அந்த பட்டியலில் உள்ளது. இதனையடுத்து சசிகலாவுக்காக சிறை விதி மீறப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார் சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி.
 
சசிகலாவுக்கு சாதகமாக செயல்பட்ட சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடக்கப்பட வேண்டும் இல்லையென்றால் வழக்கு தொடர உள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதினார் நரசிம்ம மூர்த்தி. இதனால் அச்சமடைந்த சிறை அதிகாரிகள் சசிகலாவை இனிமேல் சந்திக்க 15 நாட்களுக்கு ஒருமுறை தான் அனுமதிக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளனர்.
 
இந்நிலையில் சசிகலாவை சந்திக்க சசிகலாவின் உறவினர்கள் விவேக், ராஜ ராஜன், சிவகுமார், கார்த்திகேயன் மற்றும் கட்சியினர் சிலர் அனுமதி கோரியிருந்தனர். இதற்கு சிறை நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளார். சிறை விதிகளின் படி 15 நாட்களுக்கு ஒருமுறை தான் அனுமதிக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.