வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (05:50 IST)

வன்முறையை தூண்டிவிடுகிறார் வைகோ: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் குற்றச்சாட்டு

தமிழக அரசுக்கு எதிராக வன்முறையை வைகோ தூண்டிவிடுவதாக தமிழக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.
 
கன்னியாகுமாரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடையில் மதுக்கடையை அகற்றக் கோரிய போராட்டத்தில் காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனால், திமுக மற்றும் மதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக கடும் போராட்டத்தை நடத்தி வருகின்றன.
 

 
இந்த நிலையில், தமிழக ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு நிகழ்த்தி வரும் சாதனைகள் மற்றும் திட்டங்கள் காரணமாக அதிமுகவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.இதைக் கண்டு பொறுத்துக்கொள்ள முடியாமல், ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், எதிர்க்கட்சிகள் மதுவிலக்கு என்ற ஆயுதத்தின் மூலம் அரசியல் ஆதாயம் தேட முனைந்துள்ளன.
 
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஒருபடி மேலே சென்று வன்முறையை கட்டவிழ்த்து விட்டிடுள்ளார். கலிங்கப்பட்டியில் உள்ள ஒரு மதுபானக் கடையை மூட வலியுறுத்தி ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று, அங்கு போராட்டம் நடைபெற்றது. அதில், ட வைகோவின் தாயாரும் பங்கு கொண்டார். ஆனால், ஆகஸ்ட்  2ஆம் தேதி வைகோ முன்னிலையில் நடைபெற்ற அந்தப் போராட்டத்தில் வைகோவின் தாயார் கலந்து கொள்ளவில்லை.
 
அப்படியென்றால், 2ஆம் தேதி வன்முறை வெடிக்கும், மதுபானக் கடை சூறையாடப்படும் என்பதால்தானே தனது தாயாரை கலந்து கொள்ள வேண்டாம் என்று வைகோ தடுவிட்டாரா?
 
வைகோவின் தாயார் கலந்து கொள்ளாததிலிருந்தே கலிங்கப்பட்டியில் நடைபெற்ற கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டதோ என்ற ஐயம் எழுகிறது.
 
தற்போது கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடை முந்தைய திமுக ஆட்சிக் காலமான 2009லிருந்து இதே இடத்தில் செயல்பட்டு வருகிறது. இவ்வளவு காலமாக வாய் திறக்காத வைகோ ஆகஸ்ட் 2ஆம் தேதி அன்று போராட்டம் நடத்தியது அரசியல் ஆதாயம் தேடுவதற்காக அல்லாமல் வேறு எதற்காக?
 
மதுவைப் போன்று புகையிலையும் தீமை விளைவிக்கும் பொருள் தான் என்பது வைகோவுக்கு தெரியுமா? தெரியாதா? 2000ஆம் ஆண்டிலிருந்து புகையிலைப் பொருட்கள் வாணிபத்தில் ஈடுபட்டு வரும் Tobacco Depot என்ற நிறுவனத்தில் வைகோவின் மகன் ஜி.துரை வையாபுரி பங்குதாரராக உள்ளாரே. இதற்கு வைகோவின் பதில் என்ன?
 
மதுப்பழக்கம் என்பது ஒரு சமூகப் பிரச்னை. எனவே, முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு மதுவினால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பேரணிகள், முகாம்கள், கருத்தரங்குகள், துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
 
வழிபாட்டுத் தலங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் ஆகியவற்றுக்கு அருகே மதுபானக் கடைகள் இருப்பதாக சொல்வது முற்றிலும் தவறானது ஆகும். மதுபான விற்பனைக்கான விதிகளில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகள் தவறாமல் கடைபிடிக்கப்படுகின்றன. மேலும், தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வந்த 504 டாஸ்மாக் கடைகள்  அகற்றப்பட்டுள்ளன.
 
அரசுக்கு எதிராக எந்த பிரச்சனையும் இல்லை என்பதால், மதுவிலக்கு குறித்து போராட்டம் நடத்தி முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசுக்கு களங்கம் கற்பிக்கலாம் என்று மனப்பால் குடிப்பவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்று தெரிவித்துள்ளார்.