அதிமுக செய்தி தொடர்பாளர் மார்க்கண்டேயன் நீக்கம்: ஓபிஎஸ்-ஈபிஎஸ் அதிரடி

Last Modified திங்கள், 1 ஏப்ரல் 2019 (21:46 IST)
விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத நிலையில் சுயேட்சையாக களமிறங்கியிருக்கும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் அதிமுக செய்தி தொடர்பாளருமான மார்க்கண்டேயன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து இன்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய மார்க்கண்டேயன், 'விளாத்திகுளம் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடாமல் இருக்க, ஆளுங்கட்சியினர் 10 கோடி ரூபாய் பேரம் பேசினர். மேலும் பணம் மட்டுமின்றி, தேர்தல் முடிந்ததும், வாரியத் தலைவர் பதவி தருவதாக ஆளுங்கட்சியினர் கூறினர் என்று பேசினார்.

மேலும் அமைச்சர் கடம்பூர் ராஜூ, அதிமுக மேலிடத்தை மிரட்டியதாகவும், மீண்டும் மார்க்கண்டேயனுக்கு சீட் கொடுத்தால் நான் மாற்று கட்சியை ஆதரிக்க வேண்டும் என்று கூறியதால் என்னை அதிமுக தலைமை எட்டி உதைத்துவிட்டு வேறொருவருக்கு சீட் கொடுத்துவிட்டதாகவும் மார்க்கண்டேயன் இன்றைய தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறியுள்ளார்.
மேலும் தேர்தல் அதிகாரியிடம் என்னுடைய வேட்புமனுவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று இரவு ஒரு மணிக்கு மிரட்டியுள்ளதாகவும், ஆனால் மிரட்டலுக்கு பயப்படாமல் அந்த அதிகாரி வேட்புமனுவை தள்ளுபடி செய்ய முடியாது என்று கூறியதாகவும் மார்க்கண்டேயன் தெரிவித்தார்.
இந்த நிலையில் கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதால் அதிமுக செய்தி தொடர்பாளர் மார்க்கண்டேயன் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாலர் ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் அறிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :