1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 24 ஜனவரி 2018 (12:29 IST)

வைரமுத்துவுக்கு ஒரு நியாயம், விஜயேந்திரருக்கு ஒரு நியாயமா?

சென்னையில் நடந்த தமிழ் சமஸ்கிருத அகராதி நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி எழுந்து நின்று மரியாதை செய்யாமல் மேடையில் அமர்ந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செலுத்தி எழுந்து நின்றனர்.
 
ஆனால் காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து மரியாதை செலுத்தானல் அமர்ந்து இருந்துவிட்டு, தேசிய கீதம் பாடும் போது மட்டும் எழுந்து நின்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
விஜயேந்திரர் செய்தது தமிழுக்கும், தமிழன்னைக்கும் செய்த அவமரியாதை என பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மதுரை ஆதீனம் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காஞ்சி மடமும், விஜயேந்திரரும் தமிழை இந்த அளவுக்கு தான் மதிக்கிறார்கள் என குற்றம் சாட்டப்படுகிறது.
 
சமீபத்தில் ஆண்டாள் குறித்து வைரமுத்து மேற்கோள் காட்டிய விவகாரத்தில் வைரமுத்துவுக்கு எதிராக பல இந்து அமைப்புகள் வெகுண்டெழுந்து கண்டனம் செலுத்தி போராட்டங்களை முன்னெடுத்தது. ஆனால் தற்போது தமிழன்னையை அவமரியாதை செய்யும் விதமாக விஜயேந்திரர் நடந்துகொண்டது கண்டு அவர்கள் ஏன் பொங்கி எழவில்லை என கேள்வி எழுகிறது.
 
வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டும் என போராட்டம் நடத்தியவர்கள், ஏன் விஜயேந்திரர் தமிழன்னையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என போராட்டம் நடத்தவில்லை. வைரமுத்துவுக்கு ஒரு நியாயம், விஜயேந்திரருக்கு ஒரு நியாயமா?