1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: வெள்ளி, 12 டிசம்பர் 2014 (12:04 IST)

இலங்கை தமிழர் பிரச்சனையில் சுயலாபத்திற்காக நாடகமாடுபவர் ஜெயலலிதா - விஜயகாந்த்

இலங்கை தமிழர் பிரச்சனையில் ஒவ்வொரு முறையும் தன்னுடைய சுயலாபத்திற்காகவும், அரசியல் ஆதாயத்திற்காகவும் நாடகமாடுபவர் ஜெயலலிதா தான் என்று விஜயகாந்த் குற்றஞ்சாட்டி உள்ளார்.
 
இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சிங்கள இனவாத அரசால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழகத்தின் 5 மீனவர்களையும் மீட்டு வந்தது குறித்து, நாடாளுமன்றத்தில் பேசிய அதிமுகவை சார்ந்த துணை சபாநாயகர் தம்பிதுரை, இலங்கை அரசு நடத்திய நாடகத்திற்கு, இந்திய அரசும் துணை போய் உள்ளதாக கடுமையான குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
 
இந்த கருத்தை அவருடைய சொந்த கருத்தாக கருத முடியாது. அதிமுகவின் பொதுச்செயலாளரான ஜெயலலிதாவின் கருத்தாகத்தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டும். கச்சத்தீவு பிரச்சனையில் அதை இலங்கைக்கு கொடுத்தாகிவிட்டது, அதை பற்றி பேசி பிரயோசனம் இல்லை என்ற ரீதியில் பேசியவர், தற்போது மீண்டும் மீண்டும் கச்சத்தீவை மீட்காமல் ஓயமாட்டேன் என வாய்சவடால் பேசி தமிழக மக்களை ஏமாற்றி வருபவரும் இவர்தான்.
 
இலங்கை தமிழர் பிரச்சனையில் ஒவ்வொரு முறையும் தன்னுடைய சுயலாபத்திற்காகவும், அரசியல் ஆதாயத்திற்காகவும் நாடகமாடுபவர் ஜெயலலிதா தான். அப்படி இருக்கையில், இந்திய அரசை குறை சொல்வதற்கு எந்தவித தகுதியும் இல்லை. தமிழக மீனவர்கள் ஐந்து பேரும் நல்லபடியாக தாயகம் திரும்பி உள்ளார்களே என மகிழ்ச்சியுடன் உள்ள இந்த நேரத்தில், இதிலும் அரசியல் ஆதாயம் தேடும் இவரது நாடகத்தை பார்த்து தமிழக மக்கள் எள்ளி நகையாடுகின்றனர்.
 
''மத்திய அரசு மேற்கொண்ட ராஜ்ஜிய நடவடிக்கைகள் காரணமாக, தூக்குதண்டனைக்கு ஆளான ஐந்து தமிழக மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர் என்றும், அதற்கு உரிய நடவடிக்கை எடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய அரசுக்கும் பாராட்டையும், நன்றியையும் சட்டமன்றம் தெரிவித்து கொள்கிறது” என தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, தமிழக மீனவர்கள் ஐந்து பேரின் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் நாடகம் என்று சொல்லவைத்த ஜெயலலிதாவை பார்த்து கேட்கிறேன், தன்னுடைய நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக்கொண்டு, இரட்டை வேடம் போட்டு, நாடகமாடி மத்திய அரசின் மீதே பழியை சுமத்துவது சரியா? இனியும் இதுபோன்ற நாடகங்களை அரங்கேற்றாமல், தமிழக மக்களின் வளர்ச்சிக்காக சிந்தித்து செயல்படவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.