1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: புதன், 29 அக்டோபர் 2014 (15:49 IST)

தேமுதிக எம்.எல்.ஏ. கைதுக்கு விஜயகாந்த் கடும் கண்டனம்

சென்னை விருகம்பாக்கம் தேமுதிக எம்.எல்.ஏ. ப.பார்த்தசாரதி கைது செய்யப்பட்டதற்கு விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
தமிழகக்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று தேமுதிக உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் ஒட்டுமொத்தமாக கூறி வருகின்றனர். சட்டம் ஒழுங்கை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சிகள் கோரினால், தேமுதிகவைச் சார்ந்த விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ப.பார்த்தசாரதி எம்.எல்.ஏ வை கைதுசெய்தது எந்த விதத்தில் நியாயம்? சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடியே எழுபது இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜெய் கோபால் கரோடியா பள்ளியில் பதினைந்து வகுப்பறை கட்டிடம் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
 
இப்பணி பொதுப்பணித்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது. வகுப்பறை கட்டிடத்தை பள்ளி குழந்தைகளின் பயன்பாட்டிற்காக ஒப்படைக்கும் விழா இன்று 29.10.2014 காலை 10 மணியளவில் நடைபெற இருந்தது. அதற்காக சட்டமன்ற உறுப்பினர் ப.பார்த்தசாரதி அவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும் பள்ளிக்கு சென்ற போது காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
 
விருகம்பாக்கம் தொகுதி மக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி, பள்ளியில் நடைபெறுகின்ற நல்லது, கெட்டது அனைத்தையும் கேட்பதற்கு அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கு பொறுப்பு உண்டு, உரிமை உண்டு, கடமையும் உண்டு. ஆளும் அதிமுக அரசின் கைப்பாவையாக செயல்படும் பள்ளி தலைமை ஆசிரியையும், இதில் உள்ள உண்மைகளை சிறிதும் கண்டு கொள்ளாமல் கைது செய்துள்ள காவல் துறையையும் வன்மையாக கண்டிக்கிறேன். உடனடியாக விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ப.பார்த்தசாரதி அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.