புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 28 டிசம்பர் 2021 (18:00 IST)

லஞ்சத்திற்கும், ஊழலுக்கும் அடிபணிந்து தரமற்ற கட்டடங்கள் - விஜயகாந்த் கண்டனம்

திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய கட்டிடம் என்று இடிந்து விழுந்ததை அடுத்து தேமுதிக தலைவர்  விஜயகாந்த் கண்டனம். 

 
திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய கட்டிடம் என்று இடிந்து விழுந்ததை அடுத்து தேமுதிக தலைவர்  விஜயகாந்த் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
 
சென்னையை திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு திடீரென இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள், மேம்பாலங்கள், அணைகள், இன்றளவும் உறுதியாக நிலைத்து நிற்கும் நிலையில், தற்போது உள்ள கட்டிடங்கள் சில ஆண்டுகளில் இடிந்து விழுந்து தரைமட்டம் ஆகின்றன. லஞ்சத்திற்கும், ஊழலுக்கும் அரசு அடிபணிந்து, உரிய நிதியை ஒதுக்காமல், தரமற்ற கட்டிடங்களைக் கட்டுவதாலேயே, சொற்ப காலத்தில் கட்டிடங்கள் இடிந்து விழும் அவலம் ஏற்படுகிறது.
 
இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறா வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள பழைய கட்டிடங்களின் உறுதித் தன்மை குறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வின் முடிவில் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்களை கண்டறிந்து அதனை முன்கூட்டியே அகற்ற நடவடிக்கை வேண்டும். 
 
இதன் மூலம் உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்க முடியும். மேலும் லஞ்சத்திற்கும், ஊழலுக்கும் அடிபணியாமல் உரிய நிதியை ஒதுக்கி இனிமேல் கட்டப்படும் சாலைகள், கட்டிடங்கள், மேம்பாலங்கள், அணைகள் ஆகியவற்றை தரமானதாக கட்டி முடித்து, அதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.