வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 16 பிப்ரவரி 2017 (11:31 IST)

எம்.எல்.ஏக்கள் வெளியேற வேண்டும்..இல்லை கவர்னர் ஆட்சி - எடப்பாடியிடம் எகிறிய ஆளுநர்?

அதிமுக எம்.எல்.ஏக்களை கூவத்தூர் விடுதியில் அடைத்து வைத்திருப்பது தொடர்பாக, எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் கடுமையான கோபத்தை காட்டியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு பாதகமாக தீர்ப்பு வந்தவுடன், எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக எம்.ல்.ஏக்களின் ஆதரவு கடிதமும், ஆளுநரிடம் கடந்த 14ம் தேதி கொடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஆளுநரிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை. 
 
எனவே, நேற்று எடப்பாடி பழனிச்சாமி 2வது முறையாக ஆளுநரை சந்தித்து பேசினார். அவர்களின் சந்திப்பு 10 நிமிடத்தில் முடிந்து விட்டது. அதன்பின், ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியே வந்த எடப்பாடி தரப்பினரின் முகத்தில் எந்த சந்தோஷமும் இல்லை.
 
இந்நிலையில், ஆளுநர் அவரிடம் என்ன பேசினார் என்பது குறித்து தற்போது சில செய்திகள் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசிய வித்யாசாகர் ராவ் “எம்.எல்.ஏக்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காத வரை என்னால் எந்த ஒரு உறுதியான முடிவும் எடுக்க முடியாது. ஓ.பி.எஸ் தரப்பினரிடம் பேசி ஒரு உறுதியான முடிவிற்கு வாருங்கள். சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தின் பேரில், எம்.எல்.ஏ-க்களை ஒரு விடுதிக்குள் அடைத்து வைத்துக் கொண்டு மிரட்டிக் கொண்டிருந்தால், ஆட்சியை கலைத்து விட்டு ஆளுநர் ஆட்சியை கொண்டு வந்து விடுவேன். மேலும், அதற்கு காரணமான அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்”என கடுமையாக எச்சரித்துள்ளாராம். 
 
இதில் அப்செட் ஆகி அங்கிருந்து வெளியேறி இருக்கிறது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு. அந்த கோபத்தில்தான், அங்கிருந்த பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ஜெயக்குமார் “ எங்களிடம் 124 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். ஓ.பி.எஸ் வசம் 8 எம்.எல்.ஏக்கள மட்டுமே இருக்கிறார்கள். 124 பெரிதா? 8 பெரிதா?” என கோபமாக பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆளுநரை மீண்டும் சந்திக்க தற்போது மீண்டும் ஜெயக்குமார் ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளார்.