1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 15 டிசம்பர் 2024 (10:10 IST)

திமுக எங்களை மதிப்பதே இல்லை.. தவாக தலைவர் வேல்முருகன் அதிருப்தி..!

திமுக எங்களை மதிப்பதே இல்லை என்றும், தேர்தல் நேரத்தில் மட்டுமே எங்களிடம் பேசுவார்கள். மற்ற நேரத்தில் எங்களை மதிப்பதில்லை என்றும், தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அதிருப்தி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன், தேர்தல் வரும் போது மட்டும் தான் கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்றும், மழை வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய துணை முதலமைச்சர் வரும்போது எங்களுக்கு தகவல் கூட வரவில்லை என்றும் கூறினார்.

அமைச்சர்கள் எங்களிடம் பேசினால், கெளரவக் குறைச்சல் ஏற்பட்டு விடுமா என்று நினைக்கிறார்கள் என்றும், தேர்தலின் போது மட்டும் தான் அமைச்சர்கள் பேசுவார்கள், மற்ற நேரத்தில் அமைச்சர்களின் உதவியாளர்கள் தான் பேசுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு தவறுகள் நடந்து கொண்டிருப்பதாகவும், ஆனால் அவை முதலமைச்சரின் கவனத்திற்கு செல்லவில்லை என்றும், அதிமுக ஆட்சியோடு ஒப்பிடும்போது, திமுக ஆட்சியிலும் ஊழல் நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறினார்.

கேள்வி கேட்டால், கூட்டணி கட்சி தலைவர்களை புறக்கணித்து விடுவார்கள் என்றும், அவர் தெரிவித்தார். திமுக ஆட்சியிலும், அதிகாரிகள் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருவதாகவும், மழை வெள்ளத்தில் சிக்கி உயிர் இழப்பவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிப்பதில் பாரபட்சம் காட்டப்படுகிறது என்றும் கூறினார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடதமிழகம் என்ன பாவம் செய்தது? அவர்களுக்கு வெறும் 2000 ரூபாய் மட்டுமே நிவாரணம் வழங்கி உள்ளனர் என்றும், கடலூர் மாவட்டத்தில், மழை வெள்ள பாதிப்பை தடுப்பதற்கு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்து வில்லை என்றும் வேல்முருகன் கூறினார்.

சட்டசபையை குறைந்தது பத்து நாட்களாவது நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன், ஆனால் வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே நடத்தி உள்ளார்கள் என்றும், திமுக ஆட்சி மீது அடுக்கடுக்காக வேல்முருகன் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Siva