வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 4 மார்ச் 2019 (09:00 IST)

பேசலாம் வாங்க திருமா… வேலை இருக்கு போங்க ஸ்டாலின் …. – கூட்டணியில் பிளவா ?

இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக அழைப்பு விடுத்திருக்கும் வேளையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமா வளவன் அதில் கலந்து கொள்ளாமல் வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது கூட்டணியில் சில சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.

திமுக தலைமையிலானக் கூட்டணியில் காங்கிரஸும் இடம்பெறும் என்பது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக கலைஞர் சிலை திறப்பு விழாவுக்கு ராகுல் காந்தி வந்தபோதே முடிவாயிற்று. அதன் பின் திமுக கூட்டணியில் வேறு சிலக் கட்சிகளும் இணைய ஆரம்பித்தன. இடையில் பாமக வை இழுக்க திமுக முயன்ற போது கூட்டணிக்குள்ளும் ஊடகங்களிடம் ‘ பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க இயலாது’ என விசிக தலைவர் திருமாவளவன் வெளிப்படையாகவே அறிவித்தார்.

ஆனாலும் திமுக வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் வடமாநில மாவட்ட செயலாளர்கள் மறைமுகமாக பாமக வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதுக் கட்சி மேலிடத்தின் ஒப்புதலோடே நடந்ததாக திருமா வளவன் கருதுகிறார். அதனால் திமுக மீது சிறிது அதிருப்தியில் இருந்துள்ளார். அதையடுத்து பாமக அதிமுகக் கூட்டணியில் இணைந்த பின்னராவது தங்களைக் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவார்கள் என விசிக எதிர்பார்த்துள்ளது.

ஆனால் இதற்கிடையில் தேமுதிக திமுக பக்கம் சாய்வது போல இருக்க அவர்கள் வந்தவுடன் அவர்களுக்குத் தொகுதிகளை ஒதுக்கிய பின் மற்றக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேசிக்கொள்ளலாம் என மீண்டும் விசிக, மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை கிடப்பில் போட்டது திமுக. இதனால் மீண்டும் திமுக மீது அதிருப்தியடைந்தது விசிக. தேமுதிக உடனானப் பேச்சுவார்த்தையால் கடந்த வாரம் முழுவதும் விசிக போன்றக் கட்சிகளுடன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை எதுவும் நடக்காமல் இருந்தது.

இந்நிலையில் இப்போது தேமுதிக வருவதும் நடக்காதக் காரியம் என்று ஆகிவிட்ட நிலையில் திருமாவளவனை நேற்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு. ஆனால் அதில் கலந்து கொள்ளாமல் தங்கள் கட்சியின் இணையதள வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். இதனால் திமுக- விசிக கூட்டணி உறவில் விரிசல் எதுவும் விழுந்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் இது குறித்த ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது ‘விடுதலைச் சிறுத்தைகளின் இணைய தள துவக்க விழாவை ஏற்கனவே நாங்கள் ஒருங்கிணைத்திருந்தோம். அடுத்தடுத்து நான் கலந்துகொள்ள நிகழ்ச்சிகள் இருந்ததால் திமுக அழைத்த பேச்சுவார்த்தைக்கு செல்ல இயலவில்லை. அதற்குப் பதிலாக நாளை (இன்று) திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் இன்று பேச்சுவார்த்தை நடக்க இருந்தாலும் திமுக – விசிக கூட்டணி உறவில் முன்பு இருந்த அந்த ஈடுபாடு தற்போது இல்லை எனத் தெரிகிறது.