வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 31 அக்டோபர் 2014 (12:43 IST)

திமுக கூட்டணியில் ஆயுள்கால ஒப்பந்தம் போடவில்லை: திருமாவளவன்

திமுக கூட்டணியில் தொடர்ந்து இருப்போம் என ஆயுள்கால ஒப்பந்தம் போடவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
 
ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன், இலங்கையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் மலையக தமிழர்கள் 300 பேர் இறந்துள்ளனர். இப்பகுதியை பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டு, இறந்த குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான வீடுகள் கட்டித்தர இந்திய அரசு உதவ வேண்டும்.
 
கொள்முதல் உயர்வை காரணம் காட்டி பால் விலை உயர்வை நியாயப்படுத்துவதை ஏற்க முடியாது. பால் விலை உயர்வை நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும்.
 
டெல்லியைப் பொருத்தவரை, கொள்கைகளில் முரண்பாடு இருந்தாலும் மாற்றுக் கட்சித் தலைவர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பது வழக்கமான நடைமுறை. தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பகைமை இல்லாத தலைவர்கள் கூட மாற்று அணிகளில் இருந்தால் ஒருவரை ஒருவர் சந்திப்பதை தவிர்ப்பது வேதனை அளிக்கிறது. டெல்லியைப் போல தமிழகத்திலும் பொது நிகழ்ச்சிகளில் தலைவர்கள் சந்திக்கும் சூழ்நிலை வர வேண்டும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுகவுடன் ஆயுள்கால முழுவதும் ஒரே கூட்டணியில் இருக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை.
 
தேர்தல் நேரத்தில் அப்போதைய நிலையைப் பொருத்து தலைவர்கள் கூட்டணி முடிவை எடுப்பது வழக்கம். திமுக கூட்டணியில் பாமக இடம்பெறுமா? என்பது பற்றி இப்போது கருத்துச் சொல்ல தேவையில்லை.
 
இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கருத்து சொல்வது, அந்த விருதையும், இதுவரை விருது பெற்ற தலைவர்களையும் அவமதிக்கும் செயல். சுப்பிரமணியசாமியை அடக்கிவைப்பது அவருக்கும், பாஜகவுக்கும் நல்லது.
 
வன்கொடுமைச் சட்டத்திருத்த மசோதா ஏற்கெனவே மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்வரும் மக்களவை கூட்டத்தொடரில் அது நிறைவேற்றப்பட இருந்த நிலையில், இந்த மசோதாவை நிலைக்குழுவுக்கு மீண்டும் அனுப்பியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று திருமாவளவன் கூறினார்.