1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 7 நவம்பர் 2014 (09:49 IST)

வண்டலூர் உயிரியல் பூங்காவில் குட்டி ஈன்றது நீர்யானை பிரகதி

சென்னை ,அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் பிரகதி என்று பெயரிடப்பட்டுள்ள நீர்யானை அண்மையில் குட்டியை ஈன்றுள்ளது.
 
இதுகுறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்தி:-
 
ஆற்றுக் குதிரை என்று அழைக்கப்படும் நீர்யானைகள் ஒரு காலத்தில் ஆப்பிரிக்கா, ஐரோப்பியக் கண்டங்களில் அதிகளவில் இருந்தன. அதன் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டதாலும், வேட்டையாடப்பட்டதாலும் நீர்யானைகளின் எண்ணிக்கை தற்போது வெகுவாகக் குறைந்துள்ளது.
 
காங்கோ குடியரசு, உகாண்டா, தான்சானியா, கென்யா, எத்தியோப்பியா, சோமாலியா, சூடான், காம்பியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மட்டுமே தற்போது நீர்யானைகள் உள்ளன.
 
யானை, காண்டாமிருகத்துக்குப் பிறகு மூன்றாவது பெரிய உயிரினமாக நீர்யானை கருதப்படுகிறது. இவை நிலத்திலும், நீரிலும் வாழும் பண்பு கொண்டது. இந்த வகை உயிரினத்தால், நிலத்தில் 30 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடவும், நீரில் 8 கிலோ மீட்டர் வேகத்தில் நீந்தவும் முடியும்.
 
நீர்யானைகள், தண்ணீரில் மட்டுமே சாணங்களைக் கழிக்கும் பண்புடையது. பல நீர் வாழ் உயிரினங்களுக்கு நீர்யானையின் சாணமே பிரதான உணவாகும். எனவே நீர்யானைகள் அழியும் போது, அதை நம்பியிருக்கும் பிற உயிரினங்களும் அழியும் சூழல் உருவாகும்.
 
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மொத்தம் 4 நீர்யானைகள் பராமரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் பூங்காவிலுள்ள 8 வயதுடைய பிரகதி என்ற பெண் யானை, அண்மையில் ஆண் குட்டியொன்றினை ஈன்றுள்ளது.
 
தாயின் இருப்பிடத்திலேயே நீர்யானைக் குட்டியும் பராமரிக்கப்பட்டு வருகிறது. புதிய வரவால் பூங்காவிலுள்ள நீர்யானைகளின் எண்ணிக்கை தற்போது ஐந்தாக உயர்ந்துள்ளது.